Ticker

6/recent/ticker-posts

18 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோக வழக்கு! டிஸம்பர் 7ம் திகதிக்கு தள்ளி வைப்பு

தெஹிவளை களுபோவில தாருன் நுஸ்ரா அநாதை இல்ல சிறுமிகள் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்கு இன்று கங்கொடவில நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.

கடந்த வழக்கு விசாரணைகளில் குறித்த சிறுமிகள் சார்பாக எந்த சட்டத்தரணிகளும் ஆஜராகாத நிலையில்  பொலிசாரே வழக்கை முன்னெடுத்துச் சென்றனர்.  18 சிறுமிகளுக்காக நீதிமன்றில் ஆஜராக  எந்த சட்டத்தரணிகளும் முன்வராத துர்ப்பாக்கிய நிலை  இன்று முடிவுக்கு வந்தது.

குறித்த  தாருன் நுஸ்ரா நிறுவனம்   பாதிக்ப்பட்ட சிறுமிகள் சார்பாக சட்டத்தரணிகளை ஆஜர்படுத்தாமல்   குற்றம் இளைத்ததாக சந்தேகிக்கப்படும் தாருன் நுஸ்ரா அநாதை இல்ல   விடுதிப் பொறுப்பாளராக கடமையாற்றியவரின் கணவரான, அந்த நிறுவனத்தில் வாகன ஓட்டுனராக கடமையாற்றிய  அறுபத்து இரண்டு வயதுடைய சந்தேக நபருக்கு ஆதரவாக சட்டத்தரணிகளை ஆஜர் படுத்திதாக  நிறுவனத்தை நடாத்தும் தெஹிவளையில் இயங்கும் அல்முஸ்லிமாத் அமைப்பின் மீது பலத்த   குற்றச்சாட்டும்  எழுந்தது.

கேட்பார் பார்ப்பாரற்ற அநாதைகள் என்பதனால் குறித்த தாருன் நுஸ்ரா நிறுவனம் சிறுமிகள் தொடர்பாக கரிசனைக் காட்டாது சந்தேக நபரை  குறித்த குற்றச்சாட்டிலிருந்து பாதுகாப்பதற்காக     தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

ஆனால் இன்றைய தினம்  சமூக அக்கறைக் கொண்டவர்கள் எடுத்த பலத்த காத்திரமான  முயற்சியின் காரணமாக  குரல் அற்றவர்களாய் இருந்த சிறுமிகளுக்கு தமக்கு ஏற்பட்டிருக்கும் அநீதிக்கு எதிராக போராட சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.

பாதிக்கப்பட்ட  சிறுமிகள் சார்பாக சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் ஆஜராகியுள்ளதோடு,  அவரோடு இன்னும் இரண்டு சட்டத்தரணிகளும்  ஆஜராகியுள்ளனர். அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் டிஸம்பர் மாதம் 07ம் திகதி விசாரணைக்கு வர இருக்கிறது.

இந்த சிறுமிகள் துஷ்பிரயோக குற்றச்சாட்டையடுத்து அல்முஸ்லிமாத் அமைப்பின் நிர்வாகக் குழுவிலிருந்து  தலைவர், செயலாளர், நிதிச் செயலாளர்  போன்ற   முக்கிய மூன்று அங்கத்தவர்கள்  அமைப்பிலிருந்து வெளியேறியுள்ளனர்.

தாருன் நுஸ்ரா  நிர்வாகம்  சிறுமிகளின் அந்தரங்கமான விடயங்களை அவதானிக்க  அவர்கள் உடை மாற்றும் அறை, உறங்கும் அறை போன்றவற்றில்  சீசிரிவி கமெராக்கள் பொருத்தப்பட்டதை தாம் ஏற்கனவே எதிர்த்தாகவும் பதவி விலகிய முக்கிய அங்கத்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் அல்முஸ்லிமாத் நிர்வாகம் தமது எதிர்ப்பினை ஒரு பொருட்டாக எடுக்கவில்லையென்றும் தமது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் மேற்படி  நிறுவன கொடுக்கல் வாங்கல்களில்              வெளிப்படைத் தன்மையும்  நம்பகத்தன்மையும் இல்லாமல் இருப்பதாகவும் குற்றம்சாட்டி  அந்த அமைப்பிலிருந்து இராஜிநாமா செய்து வெளியேறுவதாகவும் குறிப்பிட்டு இருந்தனர்.

Colombo Mail Today

Post a Comment

0 Comments