Ticker

6/recent/ticker-posts

ஹம்திக்கு ஏன் இந்த கொடுமையை செய்தீர்கள்?


கொழும்பு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் சிறுநீரக அறுவை சிகிச்சையின் போது மருத்துவ அலட்சியத்தாலோ, அல்லது வேறு மறைமுக காரணங்களாலோ தனது இரண்டு சிறுநீரகங்களையும் இழந்த மூன்று வயது சிறுவன் முஹம்மது ஹம்தி பரிதாபமாக உயிரிழந்தான்.  

ஹம்தியின் விடயத்தில் மருத்துவர்கள் தவறிழைத்துள்ளது மிகவும் தெளிவான ஒன்றாகும்.  மருத்துவர்கள் இழைத்த இந்த தவறை, கொடுமையை மருத்துவ விஞ்ஞானத்தை கரைத்துக் குடித்தவர்களால் மட்டும் தான் புரிந்து கொள்ள முடியும், அதுபற்றி பேச முடியும் என அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ள நவீன் விஜேகோன் என்ற மருத்துவரின் சிஷ்யப் பிள்ளைகள் ஒரு சிலர் வாதிட ஆரம்பித்துள்ளனர். இது எவ்வளவு முட்டாள் தனமானது?

 

ஹம்தியின் விவகாரத்தில் வெளிப்படைத் தன்மையில்லாமல், முன்னுக்குப் பின் முராணான கருத்துக்களை சொல்லி, மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியதற்கான பொறுப்பை லேடிறிஜ்வே மருத்துவமனை நிர்வாகமே ஏற்க வேண்டும். இந்த மருத்துவமனையின் மீது மக்கள் நம்பிக்கையிழப்பதற்கு இந்த மருத்துவமனை நிர்வாகத்தின்  சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகளும், வெளிப்படைத் தன்மையற்ற நடவடிக்கைளுமே காரணங்களாக அமைந்தன. 


ஹம்தியின் அறுவை சிகிச்சை மர்மங்களும், சந்தேகங்களும் நிறைந்த ஒரு ஒன்றாக இருக்கிறது. மருத்துவர்களின் முன்னுக்குப் பின் முரணான கருத்துகளும் லேடி றிஜ்வே மருத்துவமனையின் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளும் மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பியிருக்கின்றன.


ஹம்தியின் விவகாரத்தை வைத்து, இந்த நாட்டிலுள்ள மருத்துவர்கள் எல்லோரும் மோசடிக்காரா்கள் என்று யாரும் சொல்ல முன்வரவில்லை. அப்படி மருத்துவர்கள் அத்தனை பேர் மீதும்  அபாண்டம் சொல்ல யாராலும் முடியாது. மருத்துவர்களில் 90 வீதத்திற்கும் அதிகமானோர் நல்லவர்கள், மனித நேயமிக்கவர்கள், மருத்துவத் துறையின் மகிமையை உணர்ந்தவர்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. 


ஆனால், மகத்துவம் பொருந்திய இந்த மருத்துவத்துறையில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் மோசடிக்காரா்களும், பிணம் தின்னி கழுகுகளை ஒத்த பணப் பித்தர்களும் இருக்கவே செய்கின்றார்கள்.  மருத்துவ மாபிஃயாவை தனது கைக்குள் வைத்துக் கொண்டு நோயளிகளின் நொந்த கண்ணில் விரலை விட்டு ஆட்டும் மனித நேயமற்ற கொடிய கோடீஸ்வர வியாபாரிகளும் இவர்களுக்குள் இருக்கின்றார்கள். இவர்கள் சார்ந்துள்ள இந்த கொடிய மாபிஃயாவே  இன்று உலகளவில் பேசு பொருளாகியிருக்கிறது.


ஹம்திக்கு இழைக்கப்பட்ட அநீதியை கடந்த ஏழு மாதங்களாக மூடி மறைத்து, மௌனம் காத்து வந்தது லேடி றிஜ்வே மருத்துவமனை நிர்வாகம்.  

இன்று மருத்துவர் நவீன் விஜேகோனின் குற்றங்களை மறைத்து, அவரின் அசுத்தங்களை  கழுவி சுத்தம் செய்ய களத்தில் குதித்திருக்கும்  அவரின் சோனக சிஷ்ய குஞ்சுகள் இரண்டும், கடந்த ஏழு மாதங்களாக ஹம்தியின் விவகாரம் தெரிந்திருந்தும் தமது நவத்துவாரங்களையும் நன்றாக இறுக்கிப் பொத்திக் கொண்டு உறங்கிக் கிடந்தவர்களே.

கடந்த 2022ம் வருடம் டிசம்பர் மாதம் 24ம் திகதி ஹம்திக்கு அறுவை சிகிச்சை இடம்பெற்றது. மூன்றே வயதான ஹம்தியின் இடது சிறுநீரகத்தில் இருந்த குறைபாடு காரணமாக அவனது இடது சிறுநீரகத்தை அகற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் ஹம்தியின் பெற்றோருக்கு ஆலோசனை வழங்கியிருந்தனர்.

சத்திர சிகிச்சைக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் ஹம்தியின் இடது பக்க சிறுநீரகத்தின் செயற்பாடு 9 வீதமாகவும், வலது பக்க சிறுநீரகம் 91 வீதம்  ஆரோக்கியமான செயற்பாட்டில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக செயலிழந்து இருக்கும் இடது பக்க சிறுநீரகத்தை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சையை மருத்துவர் மலிக் சமரசிங்கவின் ஆலோசனையின் பேரில்  நவீன் விஜேகோன் என்ற மருத்துவர் நடாத்தியுள்ளார்.   

வழமையான அறுவை சிகிச்சை ஒன்றின் பின்னர் ஒரு நோயாளிக்கு வழங்கப்படும் விஷேட  கண்காணிப்பு ஹம்திக்கு கிடைக்கவில்லை. அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் ஹம்தியை நான்கு நாட்களாகியும் வந்து பார்க்கவில்லை என்று பெற்றோர் கூறுகின்றனர்.    

இந்த அறுவை சிகிச்சையின் பின்னர் சிறுவன் ஹம்திக்கு சிறுநீர் வெளியேறாமல் இருந்துள்ளது. இது விடயத்தில் மருத்துவர்கள்  இதில் கரிசனை காட்டியதாக தொியவில்லை.   நான்கு நாட்களாக ஹம்திக்கு சிறுநீர் வெளியாகாமல் இருப்பதையும், சிறுவனின் உடல் முழுவதும் வீக்கம் ஏற்பட்டு வருவதையும் அவதானித்த பெற்றோர், வார்டில் இருந்த மருத்துவருக்கு இது தொடர்பாக அறிவித்துள்ளனர். 

குறித்த வார்டில் பணியிலிருந்த மருத்துவர் உடனே ஹம்தியை  ஸ்கேன் பரிசோதனை ஒன்றுக்கு உட்படுத்தியுள்ளார்.  அந்த ஸ்கேன் பரிசோதனையின் மூலம்  ஹம்தியின் இரண்டு சிறுநீரகங்களும் அகற்றப்பட்டிருப்பது தொிய வருகிறது.  அதுவும்  ஐந்து நாட்களுக்குப் பிறகே இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வருகிறது. 

இதன் பிறகே ஹம்தியை அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் பெற்றோரை சந்தித்து, அறுவை சிகிச்சையின் போது  தவறு நிகழ்ந்ததாக ஏற்றுக்கொள்கின்றனர். ஹம்தியின் வலது பக்கத்தில் நல்ல நிலையில் இருந்த சிறுநீரகம் அகற்றப்பட்ட விடயத்தை பல நாட்கள் சென்றதன் பின்னரே ஹம்தியின் பெற்றோர் அறிந்து கொள்கின்றனர்.  

மருத்துவர்கள் இரகசியமாக வைத்திருந்த ஹம்தியின் கிட்னி விவகாரம்  இதன் போது வெளிச்சத்திற்கு வந்தது. என்றாலும், மருத்துவர்கள் இதனை வெளியே யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று பெற்றோரை வினயமாக வேண்டிக் கொண்டதோடு, ஹம்திக்கு சிறுநீரகம்  ஒன்றை பொறுத்தி அவனை குணப்படுத்தி தருவதாகவும் வாக்குறுதி வழங்குகின்றனர். மருத்துவர்களோடு நடந்த குறித்த உரையாடலை சிறுவனின் தந்தை தனது கைதொலைபேசியை பயன்படுத்தி வீடியோவாக பதிவு செய்ய முற்பட்ட போது, வீடியோ செய்ய வேண்டாம் எனவும் இந்த விவகாரத்தை வெளியே கசிய விட வேண்டாம் எனவும் ஹம்தியின் தந்தையிடம் மருத்துவர்கள் வினயமாக வேண்டியுள்ளனர். மருத்துவர்களோடு முரண்படுவது தனது பிள்ளையின் உயிருக்கு சவாலாக அமையும் என்பதை உணர்ந்த ஹம்தியின் தந்தை பிரச்சினைகளை அடக்கி வாசிக்க ஆரம்பித்துள்ளார். 

ஹம்தியின் அறுவை சிகிச்சையில் அப்படி ஒரு மகா தவறு  நிகழ்ந்து  அவனது வலது பக்க சிறுநீரகம் தவறுதலாக அகற்றப்பட்டிருந்தால், அது குறித்து மருத்துவர்கள் ஹம்தியின் பெற்றோருக்கு முதலில் அறிவித்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை விசயத்தை முற்றாக மறைத்தே வைத்திருந்தார்கள். 

ஹம்தியின்  மருத்துவ ஆவணங்களில் கட்டாயம் அந்த தவறு குறித்தும், தவறுதலாக அகற்றப்பட்டதாக கூறப்படும் வலது பக்க சிறுநீரகம் குறித்தும் பதிவு செய்யப்பட்டிருக்க  வேண்டும். ஆனால், அவர்கள் இது குறித்த எந்த தகவல்களையும் ஹம்தியின் மருத்துவ ஆவணங்களில் பதியாமல் தவிர்த்து வந்துள்ளனர்.  அறுவை சிகிச்சையின் போது நடந்ததாக இவர்கள் கூறும் குறித்த தவறு தொடர்பான தகவல்கள் திட்டமிட்டு தவிர்க்கப்பட்டிருப்பதை ஹம்தியின் மருத்துவ அறிக்கைகளை பார்க்கும் போது இலகுவாக புரியக் கூடியதாக இருக்கிறது.

ஹம்திக்கான அறுவை சிகிச்சை 2023ம் ஆண்டு பெப்ரவரி மாதம் செய்வதற்கு திகதி குறிக்கப்பட்டிருந்ததாக பெற்றோர் குறிப்பிடுகின்றனர். மருத்துவர் நவீன்  விஜேகோன் அறுவை சிகிச்சையை 2022 நவம்பர் மாதத்திற்கு அவசரமாக முற்படுத்தியுள்ளார்.  இறுதியில், 2022 டிசம்பர் மாதம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவர் நவீன் விஜேகோனின் இந்த செயற்பாடும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக  சட்டத்தரணியும் மருத்துவருமான வை.எல்.எஸ். யூசுப் நீதிமன்றில் பிரஸ்தாபித்தார். ஹம்தியின் சத்திர சிகிச்சையை முற்படுத்தியதன் பின்னணி பற்றி மருத்துவமனை நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டும். 

ஹம்திக்கு நல்லது செய்யவே அறுவை சிகிச்சையை நவீன் விஜேகோன் முற்படுத்தினார் என்று அவரின் சார்பாக குரல் கொடுக்கும் அவரின் சிஷ்யர்கள் விவாதிக்க முன்வரலாம். அப்படியென்றால், ஹம்திக்கு நல்லது  செய்வதே இந்த மருத்துவரின் இலக்காக இருந்தது என்றால், அறுவை சிகிச்சையின் பின்னர் ஹம்தியின் நலன்களைப் பார்க்காமல் பல நாட்கள் தலைமறைவாகியிருக்க மாட்டார் அல்லவா!   

ஹம்தியின் உயிருக்கு ஆபத்து வரும் என்று நன்கு தெரிந்தும் நாலு பேருக்கு தெரியாமல் நாட்டை விட்டு ஓடியிருக்க மாட்டார் அல்லவா!. எனவே 2023பெப்ரவரி மாதம் இடம்பெறவிருந்த ஹம்தியின் அறுவை சிகிச்சையை முற்படுத்தி செய்யப்பட்டதற்கான காரணம் என்ன என்பதிலுள்ள இரகசியங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும்.

2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் அறுவை சிகிச்சையை அவசரமாக செய்து, தவறுதலாக(?) நல்ல நிலையிலிருந்த சிறுநீரகத்தையும் அகற்றி விட்டு, 2023 ஜனவரி மாதம் நாட்டை விட்டு குடும்பத்தோடு ஓடுகிறார் நவீன் விஜேகோன்.   

தன்னால் இடம்பெற்ற தவறை நிவர்த்தி செய்வதாகவும், ஹம்திக்கு சிறுநீரகம் ஒன்றை எப்படியாவது பொருத்தி அவனை குணப்படுத்தி தருவதாகவும் ஹம்தியின் பெற்றோருக்கு வழங்கிய பொய் வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டு விட்டே இவர் வெளிநாடு செல்கிறார்.  லேடிறிஜ்வே மருத்துவமனை நிர்வாகம்  கூட  ஹம்தியின் விடயத்தில் நேர்மையாக, நீதியாக  செயற்படவில்லை என்பதை உறுதியாக கூறமுடியும்.

ஹம்தியின் வலது பக்க  சிறுநீரகம்  அப்படி தவறுதலாக நீக்கப்பட்டிருந்தால் அதற்குரிய பொறுப்பை மருத்துவமனை நிர்வாகம் ஏற்றிருக்க  வேண்டும். மருத்துவமனையின் பொறுப்பாளர்கள் ஹம்தியின் பெற்றோருக்கு தம்மை சந்திப்பதற்கு அவகாசமே வழங்காமல் இருந்துள்ளனர். ஹம்தியின் பெற்றோர் மருத்துவமனை பணிப்பாளரை பல முறை சந்தித்து பேச முயற்சி செய்தும் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன.

ஹம்தியின் விவகாரம் தொடர்பாக  முழு மருத்துவமனை நிர்வாகமும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். ஹம்தியின் பெற்றோரினால் முன்வைக்கப்படும் நீதிக்கான கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும்.  சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் தெளிவுகள் கிடைக்கப் பெற வேண்டும்.

ஹம்தியின் அறுவை சிகிச்சையின் பின்னணியில் சூழ்ந்திருக்கும் மர்மங்களும் சந்தேகங்களும் வெளிச்சத்திற்கு வர வேண்டும்.

ஹம்தியின் அறுவைச் சிகிச்சை ஆவணங்களில் இரண்டு சிறுநீரகங்களும் தவறுதலாக அகற்றப்பட்டிருந்தால், அந்த  விடயம் கட்டாயமாக குறிக்கப்பட்டிருக்க வேண்டும்.  ஆனால்  அகற்றப்பட்ட ஆரோக்கியமான சிறுநீரகம் பற்றிய தகவல்கள் எதுவுமே ஹம்தியின் மருத்துவ ஆவணங்களில் இடம்பெறாமல் மறைக்கப்பட்டதற்கான காரணம் என்ன?

அறுவைச் சிகிச்சையின் பின்னர் பெத்தொலொஜி பரிசோதனைக்கு ஹம்தியின் இடது பக்க சிறுநீரகத்தை மட்டுமே அனுப்பியிருக்கிறார்கள். மருத்துவர்கள் சொல்வது போல  இரண்டு சிறுநீரகங்களும் தவறுதலாக அகற்றப்பட்டிருந்தால், இவை இரண்டும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும் அல்லவா?  அப்படி இரண்டு சிறுநீரகங்களும் அனுப்பப்படாமைக்கான காரணம் என்ன?

ஹம்தியின் இரண்டு சிறுநீரகங்களும் ஒன்றோடொன்று இணைந்திருந்ததாக (Horseshoe kidney) மருத்துவமனை நிர்வாகம் இப்போது கதை விட ஆரம்பித்திருக்கிறது. அப்படியென்றால், ஒன்றோடொன்று இணைந்திருந்த இரண்டு சிறுநீரகங்களிலிருந்து இடது பக்க சிறுநீரகத்தை மட்டும் வெட்டியெடுத்து பரிசோதனைக்கு அனுப்பினார்களா? 

அப்படி இடது சிறுநீரகத்தை வெட்டியெடுத்து அனுப்பியதற்கான எந்த சான்றுகளும் பெத்தொலொஜி அறிக்கையில் இல்லை என்று மருத்துவரும் சட்டத்தரணியுமான வை.எல்.எஸ். யூசுப் கடந்த 9ம் திகதி நீதிமன்றில் தெளிவு படுத்தினார். இடது பக்க சிறுநீரகம் வெட்டி பிரிக்கப்பட்டதற்கான எவ்வித ஆதாரமும் இல்லையென்றும் அவர் கூறினார்.

ஹம்தியின் வலது பக்கத்தில் நல்ல நிலையில் இயங்கிவந்த சிறுநீரகத்தை தவறுதலாக அகற்றியிருந்தால் அந்த சிறுநீரகத்தை பெத்தொலொஜி பரிசோதனைக்கு அனுப்பாமல் இருந்ததற்கான காரணம் என்ன?  

அகற்றப்பட்ட வலது பக்க சிறுநீரகத்தை தமக்கு காட்டுமாறு ஹம்தியின் பெற்றோர் விடுத்த கோரிக்கைக்கு இன்று வரை மருத்துவமனை நிர்வாகம் செவிசாய்க்காமல் இருப்பதன் இரகசியம் என்ன?  போன்றே ஆயிரம் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

என்றாலும், ஹம்திக்கு இழைக்கப்பட்ட அநீதி,  இப்போது நீதிமன்றில் போய் நின்றிருக்கிறது. இந்த அநீதிக்கு சார்பாகவும், உண்மைக்கு புறம்பாகவும் மருத்துவ சொல்லாடல்களை வைத்து கதை விட்டுக் கொண்டு குற்றத்தை மறைக்க முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நீதிமன்றில் வந்து நின்று சாட்சி சொல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஹம்திக்கு மட்டுமல்ல இனி இந்நாட்டிலுள்ள எந்த குடிமகனுக்கும்  இந்த துர்ப்பாக்கிய நிலை வரவே கூடாது.  ஹம்திக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருப்போம்!

அஸீஸ் நிஸாருத்தீன்


Post a Comment

0 Comments