Ticker

6/recent/ticker-posts

பாடசாலைகளில் அபாயா அணிவதை தடை செய்த பிரான்ஸ்!


முஸ்லிம் பெண்கள் அணியும் தளர்வான, முழு நீள அங்கியான அபாயாவை அரசு நடத்தும் பாடசாலைகளில் பிள்ளைகள் அணிவதை பிரான்ஸ் தடை செய்யும் என்று அந்நாட்டின் கல்வி அமைச்சர் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அடக்கமான உடையாக கருதப்படும் இந்த ஆடைக்கு தற்போது பிரான்சில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

19 ஆம் நூற்றாண்டு சட்டங்கள்  ஊடாக பொதுக் கல்வியிலிருந்த பாரம்பரிய கத்தோலிக்க செல்வாக்கை நீக்கியதில் இருந்து, அரசுப் பாடசாலைகளில் மத அடையாளங்களுக்கு கடுமையான தடையை பிரான்ஸ் அமுல்படுத்தியது. 

பிரான்ஸின் அரச பாடசாலைகளில் பெரிய சிலுவைகள், யூத கிப்பாக்கள் மற்றும் முஸ்லிம்கள் தலையை மூடி அணியும் ஆடைகள்  தடை செய்யப்பட்டுள்ளன.

2004 ஆம் ஆண்டு, பாடசாலைகளில் ஹிஜாப் அணிவதை பிரான்ஸ் தடை செய்தது. மேலும் 2010 ஆம் ஆண்டில், பொது இடங்களில்  முகத்தை  முழுமையாக மூடும் நிகாப், புா்க்கா போன்றவைகள் தடை செய்யப்பட்டன. பிரான்ஸில் முஸ்லிம்களின் சனத்தொகை ஐந்து மில்லியன் என்று கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

"பாடசாலைகளில் இனி அபாயா அணிய முடியாது என்று நான் முடிவு செய்துள்ளேன்" என்று கல்வி அமைச்சர் கெப்ரியல் அட்டல்  பிரான்ஸின்  TF1 என்ற தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 

"நீங்கள் ஒரு வகுப்பறைக்குள் செல்லும்போது, மாணவர்களைப் பார்த்து அவர்களின் மதத்தை  அடையாளம் காணக் கூடாது" என்றும் அவர் கூறியுள்ளார்.

நீண்ட காலமாக பெண்கள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ள பிரெஞ்சு பாடசாலைகளில்,  அபாயா அணிவது குறித்து பல மாதங்களாக நடந்த விவாதத்திற்கு பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.

பிரான்ஸிலுள்ள தீவிர வலதுசாரிகள் இந்த தடைக்கு ஆதரவாக அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர். இது சிவில் உரிமைகளை மறுக்கும்  நடவடிக்கை என்று பிரான்ஸிலுள்ள இடதுசாரிகள் வாதிட்டு வருகின்றனர்.


Post a Comment

0 Comments