Ticker

6/recent/ticker-posts

சட்ட வைத்திய அதிகாரி ரூஹுல் ஹக் கட்டாய விடுமுறையில் வீட்டுக்கு...!




இலங்கை மருத்துவ சபையால் (SLMC) இடைநிறுத்தப்பட்டிருந்த போதிலும், கடமையில் தொடர்ந்து ஈடுபட்டு சர்ச்சையை உருவாக்கிய கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரி ருஹுல் ஹக், சுகாதார அமைச்சினால் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார அமைச்சினால் எடுக்கப்பட்டுள்ள மேற்படி தீர்மானம் இலங்கை மருத்துவ சபைக்கு கடந்த 17ஆம் திகதி கிடைத்துள்ளது. என்றாலும், கட்டாய விடுப்புக்கான சரியான காரணம் அந்தக் கடிதத்தில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை என அறிய வருகிறது.

எனினும், அரச சேவை ஆணைக்குழுவின் பரிந்துரையின் பேரில்  கட்டாய விடுமுறையில் அனுப்பும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் மருத்துவர் ரூஹுல் ஹக் வழங்கிய பல பிரேத பரிசோதனை அறிக்கைகள் முன்னுக்குப் பின் முரணாக இருந்துள்ளன. 

கொழும்பு லேடி றிஜ்வே மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சையின் போது இரண்டு சிறுநீரகங்களும் அகற்றப்பட்டு ஏழு மாதங்களின் பின்னர் உயிரிழந்த ஹம்தி என்ற  மூன்று வயது சிறுவனின் மரணத்தை தொடர்ந்து இடம்பெற்ற பிரேத பரிசோதனையில் முன்னுக்குப் பின் முரணான அறிக்கையை வழங்கி ரூஹுல் ஹக் சிக்கலில் மாட்டினார். 

ஹம்தியின் மரணம் தொடர்பான வழக்கு கொழும்பு பிரதான நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஹம்தியின் மரணம் தொடர்பாக ரூஹுல் ஹக் வழங்கிய பிரேத பரிசோதனை அறிக்கை உண்மைக்கு புறம்பானது என்ற செய்தியை ஹம்தியின் குடும்பத்தினர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் அம்பலப்படுத்தினர். இவரின் பிரேத பரிசோதனை அறிக்கையை கேள்விக்கு உட்படுத்திய நீதிபதி திருமதி சசிந்ரா ஜயசூரிய  ஹம்தியின் மரணம் தொடர்பாக ஒழுங்கான ஒரு விசாரணையை ஆரம்பிக்குமாறு பொரலை பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

கடந்த காலங்களில் ரூஹுல் ஹக் வழங்கிய பல பிரேத பரிசோதனை அறிக்கைகள் சர்ச்சைகளை கிளப்புவதாக அமைந்திருந்தன. 

இதில் பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் பிரேத பரிசோதனை அறிக்கையும், லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரகச் சத்திரசிகிச்சையின் போது சிறுநீரகங்கள் இரண்டையும் இழந்து மரணித்த  மூன்று வயதுக் குழந்தை ஹம்தியின் மரணமும் பேசு பொருளாகின. 

இது தவிர, 2013 ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் ஐந்து வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த வேளையிலும், 2014 இல் சுதந்திர வர்த்தக வலயத்தில் (FTZ) உணவு விஷமானதின் காரணமாக ஒரு தொழிலாளி இறந்த வேளையிலும் ரூஹுல் ஹக் வழங்கிய பிரேத பரிசோதனை அறிக்கைகள் நம்பகத் தன்மையை இழந்திருந்ததன் காரணமாக கடும் விமர்சனத்திற்கு உள்ளாகின.

ஏற்கனவே ரூஹுல் ஹக்கின் பதவி  2022 டிசம்பர் 20ம் திகதி முதல் எட்டு மாதங்களுக்கு இலங்கை மருத்துவ சபையால் இடை நிறுத்தப்பட்டிருந்தது. அது இந்த ஆகஸ்ட் மாதம் 20 அன்று காலாவதியாக இருந்தது.  இவர் தற்காலிக பதவி நீக்கத்திற்கு உட்பட்டிருந்த நிலையிலேயே  பிரேத பரிசோதனைகளை நடாத்தி வந்துள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments