Ticker

6/recent/ticker-posts

ரணிலின் ஆபத்தான சமிக்ஞை பற்றி சட்டத்தரணி சாலிய பீரிஸ்!


இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு நீதித்துறையின் சுதந்திரம் இன்றியமையாதது எனவும், நீதித்துறையின் மீது நிறைவேற்று அதிகாரத்தின் தலையீடு பாரிய பிரச்சினைகளை உருவாக்கும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு அரச நிறுவனங்கள் அரசியல் மயப்பட்டதே பிரதான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி சட்டத்தரணி சாலி பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்தக் கடன் மறுசீரமைப்பு மற்றும் ஈபிஎஃப் மீதான கடன் மறுசீரமைப்பின் தாக்கம் குறித்து  நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அப்படியானால் ஜனாதிபதி கொடுக்கும் சமிக்ஞை என்ன? நீதிமன்றம் என்ன சொன்னாலும் ஏற்க மாட்டேன் என்பதுதான் அந்த சமிக்ஞை. இது எவ்வளவு பயங்கரமான விடயம்? உண்மையில் இது நீதிமன்றத்திற்கு விடுக்கும் அச்சுறுத்தலாகும். 

கடந்த மார்ச் மாதம் இந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் நிதி அமைச்சருக்கு உத்தரவிட்டது. தற்போதைய ஜனாதிபதியே நிதியமைச்சராக பதவி வகிக்கிறார். உள்ளாட்சி தேர்தலுக்கு பணம் தேவை. அதற்கான பணத்தை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் நிதியமைச்சருக்கு உத்தரவிட்டது. இதுவரை நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. 

இந்த நாட்டின் ஜனநாயகத்திற்கு நீதித்துறையின் சுதந்திரம் முக்கியமானது. நாம் அனுபவிக்கும் மனித உரிமைகள், நாம் அனுபவிக்கும் மனித சுதந்திரம், நாம் அனுபவிக்கும்  வாக்குரிமை, இவையனைத்தும் இந்நாட்டின் நீதித்துறையின் சுதந்திரத்தை  சார்ந்துள்ளது என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ்  தெரிவித்தார்.

Post a Comment

0 Comments