Ticker

6/recent/ticker-posts

கோடீஸ்வரர் வர்த்தகர் வீட்டில் கைப்பற்றப்பட்ட புதிய வகை போதைப்பொருள்!


இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்படாத புதிய வகை போதைப்பொருள் ஒன்று மொரட்டுவை சமன்புர பிரதேசத்தில் உள்ள கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் வீட்டில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் பணக்காரர்கள் பயன்படுத்தும் 4எம்எம்சி என்ற இந்த வகை போதைப்பொருள் ஐஸ் மருந்தை விட 6 மடங்கு வலிமை வாய்ந்தது என பொலீசார் தெரிவித்துள்ளனர்.

இனந்தெரியாத போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் வலான ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், மொரட்டுவ சமன்புர பிரதேசத்தில் அமைந்துள்ள கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் மூன்று மாடி வீடொன்றை  விசேட பொலிஸ் குழுவினர் சோதனையிட்டுள்ளனர்.

அங்கு குறித்த கோடீஸ்வர வர்த்தகரின் 29 வயது மகன் இந்த போதைப் பொருட்களை பொதி செய்து கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.

4எம்எம்சி எனப்படும் இந்த போதைப்பொருள் உலகம் முழுவதிலும் உள்ள பணக்காரர்களால் பயன்படுத்தப்படுவதாகவும், இதுவே முதன்முறையாக இந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபரிடம் 100 கிராமுக்கு மேற்பட்ட போதைப்பொருட்கள் காணப்பட்டதுடன், அவற்றை பொதி செய்து  கவனமாக சிறுவர்களின் விளையாட்டு பொருட்களில் பதுக்கி வைத்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடம் நடத்திய விசாரணையின் பின்னர், போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வந்த முக்கிய சந்தேக நபரான மற்றொரு கோடீஸ்வர வர்த்தகர் அத்திடியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.

அப்போது குறித்த தொழிலதிபர் 10 லட்சம் ரூபாயை பொலிஸாருக்கு வழங்க முயன்றதாகவும் அறிய வருகிறது.

அத்திடியைச் சேர்ந்த தொழிலதிபர் மூலம் குறித்த போதைப் பொருள்கள் மாலத்தீவுக்கு அனுப்பப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இந்த கடத்தல் மட்டுமின்றி, இந்த தொழிலதிபர்கள்  இருவரும் குஷ் என்ற போதைப்பொருளையும் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டதுடன், கடத்தலுக்கு உறுதுணையாக இருந்த மற்றொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த போதைப்பொருள் இதுவரை நாட்டில் கண்டுபிடிக்கப்படாததால் இவற்றின் பெறுமதியை  கூற முடியாதுள்ளதாக என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மற்றும் போதைப் பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக மொரட்டுவ மற்றும் தெஹிவளை பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பிரதான சந்தேகநபர்கள் இருவரும் மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், அவர்களை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்த பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments