Ticker

6/recent/ticker-posts

முஸ்லிம்களின் பள்ளிவாசல்களுக்கு தீ வைக்கப்படும் சூழ்நிலையை உருவாக்கிய ஞானசார தேரரை ஏன் கைது செய்ய முடியாது? சந்திரிகா கேள்வி!


பௌத்தத்தை இழிவுபடுத்துவதாகக் கூறப்படும் கருத்தை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட நகைச்சுவை கலைஞா் நதாஷா எதிரிசூரியவின் நடவடிக்கைகளுடன் ஒப்பிடுகையில்  ஞானசார தேரரின் செயற்பாடுகள் மோசமானவை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கருத்து வெளியிட்டுள்ளார். 

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், இஸ்லாத்தை மிகவும் தீவிரமான முறையில் விமர்சித்ததாகவும், முஸ்லிம்களின் வணக்க ஸ்தலங்களுக்கு தீ வைக்கப்படும் சூழ்நிலையை உருவாக்கியதாகவும், பௌத்தத்தை அவமதித்தமைக்காக  நதாஷாவை கைதுசெய்யமுடியும் என்றால் ஏனைய மதங்களை அவமதித்த ஞானசாரரை ஏன் கைதுசெய்ய முடியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி  சந்திரிகா குமாரதுங்க தனது டுவிட்டர் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

நதாஷா  பௌத்தைஅவமதித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரை கைதுசெய்ய முடியும் என்றால் இஸ்லாமிய மதத்தை அவமதித்த பள்ளிவாசல்கள் உட்பட மத ஸ்தலங்களை எரியூட்டிய ஞானசார தேரர் உட்பட ஏனையோரை ஏன் கைதுசெய்ய முடியாது  என முன்னாள் ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், பௌத்தம் மற்றும் அனைத்து மதங்களும் சம அளவில் மிகுந்த மரியாதையுடன் கவனிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

“ஒவ்வொரு குடிமகனுக்கும் அவர்கள் விரும்பும் எந்த மதத்தையும் நம்புவதற்கும் பின்பற்றுவதற்கும் புனிதமான உரிமை உள்ளது.  பௌத்த தத்துவத்தின் உள்ளார்ந்த அடிப்படை அன்பும், இரக்கமும் சகிப்புத்தன்மையும்  என்றும் அவர் கூறியுள்ளார்.

ஞானசார தேரரால் கடந்த காலங்களில் முஸ்லிம் மற்றும் தமிழ் குடிமக்களுக்கு எதிராக வெறுப்புணர்வை பரப்பிய சம்பவங்கள் நதாஷாவின் வார்த்தைகளை விட மோசமானவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவர் ஷாபிக்கு எதிராக பொய்களை தெரிவித்து நாடு முழுவதும் அதனை பரப்பி நல்லமனிதரின் வாழ்க்கையை அழித்த அயோக்கியர்களிற்கு என்ன நடந்தது எனவும் கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி குற்றவாளிகளை கைதுசெய்து தண்டிப்பதற்கு ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிற்கு இன்னமும் காலம் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு அவர் செயற்பட்டால் அதுவே உண்மையான ஜனநாயக நாடாக காணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 இலங்கை பௌத்தர்களாகிய நாங்கள் பௌத்தகொள்கைகளை நேர்மையாக பின்பற்றினால் இன்றுள்ளது போல நாடு குழப்பத்தில் காணப்படாது எனவும் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பௌத்தம் உயர்ந்த  மதிப்பை பெறவேண்டியது அவசியம் ஆனால் ஏனைய அனைத்து மதங்களும் சமமான முக்கியத்துவத்தை பெறவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments