Ticker

6/recent/ticker-posts

மலையகத்தில் விளையாட்டுத்துறையை மேம்படுத்த நடவடிக்கை!


மலையகத்தில் உதைப்பந்தாட்டம் உள்ளிட்ட விளையாட்டுத்துறையை மேம்படுத்துவது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து கூட்டு பொறிமுறை ஒன்று உருவாக்குப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

 

அத்துடன், இலங்கையில் தேசிய மட்டத்தில் உள்ள விளையாட்டு வீரர்களின் ஆலோசனைகளும், ஒத்துழைப்புகளும் பெறப்படும் எனவும் தெரிவித்தார்.

 

அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும், அட்டன் பகுதிகளில் உள்ள உதைப்பந்தாட்ட கழகத்தின் தலைவர்களும், செயலாளர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று கொட்டகலையில் நடைபெற்றது.

 

இதன்போது உதைப்பந்தாட்ட மேம்பாடு உட்பட விளையாட்டு துறை அபிவிருத்தி சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டன. கழக உறுப்பினர்கள் தமது தரப்பு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

 

அவற்றை பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், விளையாட்டுத்துறை அமைச்சருடன் இது விடயம் சம்பந்தமாக பேச்சு நடத்தப்படும் எனவும் அமைச்சர் இதன்போது உறுதியளித்துள்ளார்.

 

இந்த சந்திப்பின் போது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஷ்வரன், அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான அர்ஜூன் ஜெயராஜ், தயாளன் குமாரசுவாமி, கொட்டகலை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ராஜமணி பிரசாத், இ.தொ.காவின் இளைஞர் அணியின் சிரேஷ்ட அமைப்பாளர் நிஷாந்தன், அட்டன் உதைப்பந்தாட்ட அமைப்பின் செயற்குழு உறுப்பினர்கள் என முக்கியஸ்தர்கள் கலந்துக் கொண்டனர்.

 

Post a Comment

0 Comments