Ticker

6/recent/ticker-posts

சாகிர் நாயக்கிற்கு அழைப்பு விடுத்திருப்பதால் உலகக் கிண்ண போட்டியை புறக்கணியுங்கள்! பாஜக பேச்சாளா் வேண்டுகோள்


இந்தியாவில் தடை செய்யப்பட்ட மதபோதகர் சாகிர் நாயக், கத்தார் நாட்டில் நிகழும் ஃபிஃபா உலகக் கிண்ண கால்பந்து தொடரின் போது,  மாா்க்க சொற்பொழிவுகள் நிகழ்த்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கத்தார் நாட்டின் அல்காஸ் என்ற அரச விளையாட்டு தொலைக் காட்சி சேவையின்  தொகுப்பாளர் ஃபைசல் அல்ஜாரி உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "மத போதகர் ஷேக் சாகிர் நாயக் கத்தார் வந்துள்ளார். உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் முடிவுறும் வரையில் அவர் மத சொற்பொழிவுகள் நிகழ்த்துவார்" என்று பதிவிட்டுள்ளார்.

கத்தாா் நாட்டின் அரசு ஊடகத்துறை அதன் ட்விட்டர் பக்கத்தில், "ஃபிஃபா உலகக் கோப்பையை ஒட்டி தலைசிறந்த இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான டாக்டர் ஜாகீர் நாயக் கத்தார் வந்துள்ளார்" என்று பதிவிட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து,   சாகிர் நாயக்கிற்கு அழைப்பு விடுத்திருக்கும்  கத்தாா் நாட்டின் செயற்பாட்டைக் கண்டித்து  உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டியை  புறக்கணிக்க வேண்டும் என்று பாஜக தலைவர்களில் ஒருவரான ஸ்ரீ சாவியோ ரோட்ரிக்ஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

“இந்தியாவால் தேடப்படும், சர்ச்சைக்குரிய இஸ்லாமிய போதகர் சாகிர் நாயக்கிற்கு கத்தார் ஃபிஃபா உலகக் கோப்பைக்கு அழைப்பு விடுத்துள்ளதை காரணம் காட்டி, இந்திய அரசாங்கமும், இந்திய கால்பந்து சங்கங்களும் மற்றும் விளையாட்டு நிகழ்வைப் பாா்க்க செல்பவா்களும் இந்த உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட போட்டியை புறக்கணிக்க வேண்டும்” என அவா் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

"FIFA உலகக் கோப்பை ஒரு உலகளாவிய நிகழ்வு. உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் இந்த அற்புதமான விளையாட்டைக் காண வருகிறார்கள், மேலும் மில்லியன் கணக்கானவர்கள் தொலைக்காட்சி மற்றும் இணையத்தில் இதைப் பார்க்கிறார்கள். இந்த நிகழ்வில் சாகிர் நாயக்கிற்கு ஒரு தளம் கொடுப்பது,  ஒரு தீவிரவாதிக்கு தனது தீவிரவாதத்தையும் வெறுப்பையும் பரப்புவதற்கு ஒரு தளத்தை கொடுப்பதாகும்" என்று அவர் கூறியுள்ளார்.

"சாகிர் நாயக் இந்தியச் சட்டத்தின் கீழ் தேடப்படும் நபர். பணமோசடி குற்றங்கள் மற்றும் வெறுப்புப் பேச்சுக்களுக்காக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் ஒரு பயங்கரவாத ஆதரவாளர். உண்மையில், அவர் ஒரு பயங்கரவாதிக்கு குறைவானவர் அல்ல. அவர் பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை வெளிப்படையாக ஆதரித்துள்ளார். இந்தியாவில் இஸ்லாமிய தீவிரவாதம் மற்றும் வெறுப்பை பரப்புவதில் இவா் முக்கிய பங்காற்றியுள்ளாா்" என்றும்  ரோட்ரிக்ஸ் மேலும் கூறியுள்ளார்.


Post a Comment

0 Comments