Ticker

6/recent/ticker-posts

இந்திய பிரதமருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் இன்று பேச்சுவார்த்தை

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
இன்று முற்பகல் 10 மணிக்கு இந்திய அரசாங்கத்தின் அணி வகுப்பு மரியாதையை ஜனாதிபதி ஏற்கவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர்
தர்மஸ்ரீ பண்டார ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையான ராஷ்டபதி பவனில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட இந்திய அரசின் உயர்மட்ட அதிகாரிகள் பலரும் பங்கேற்கவுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மகாத்மா காந்தி சமாதிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மலரஞ்சலி செலுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் புதுடில்லி நகரில் தங்கியுள்ள ஹோட்டலில் நடைபெறவுள்ள சினேகபூர்வ சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தை இன்று மாலை நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து இரு தரப்பு உடன்படிக்கைகள் சிலவும் கைச்சாத்திடப்பட உள்ளன. மேலும் இந்த சந்திப்பின் போது இருநாட்டு மீனவர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என கடற்றொழில் மற்றும் நீர் வள இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி குறிப்பிட்டார்.
இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபடுவதை தடுக்க  முடியும் என நம்புவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இரு நாட்டு மீனவர்களும் கடல் எல்லையை மீறுகின்றமை பாரிய பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று நடைபெற்வுள்ள பேச்சுவார்த்தையின்போது இந்த பிரச்சினைக்கு ஆக்கபூர்வமான தீர்வு கிடைக்கும் என கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயத்தை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் இரு நாடுகளிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்த மீனவப் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தேசிய அருங்காட்சியகத்தையும் இன்று ஜனாதிபதி   உள்ளிட்ட குழுவினர் பார்வையிடவுள்ளனர்.
நாளை புத்தகயாவில் நடைபெறவுள்ள விசேட மத அனுஷ்டானங்களில் கலந்துகொள்ளவுள்ள ஜனாதிபதி நாளை மறுதினம் திருப்பதி தேவஸ்தானத்தில் நடைபெறும் பூஜை வழிபாடுகளை அடுத்து நாடு திரும்பவுள்ளார்.

Post a Comment

0 Comments