Ticker

6/recent/ticker-posts

கல்முனை பிராந்திய மீனவர்களுக்கு தொலைத்தொடர்பு நிலையம்; பைசால் காசிம் எம்.பி. நடவடிக்கை


(ஏயெஸ் மெளலானா)


கல்முனைப் பிராந்திய ஆழ்கடல் மீனவர்களின் நலன் கருதி தொலைத் தொடர்பு நிலையம் ஒன்றை அமைப்பதற்கான வேலைத் திட்டத்தை திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொருளாளருமான பைசால் காசிம் மேற்கொண்டு வருகின்றார்.

2010 - 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கடற்றொழில் அமைச்சராக ராஜித சேனாரத்ன எம்.பி. பதவி வகித்தபோது சாய்ந்தமருது பிரதேசத்தில் தொலைத்தொடர்பு நிலையமொன்று அமைக்கப்பட்டது. எனினும் அது சிறிது காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனைப் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக பைசால் காசிம் எம்.பி. அன்மையில் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் பைசால் காசிம் எம்.பி. ஆகியோர் சந்தித்து இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடியிருந்தனர்.

இதையடுத்து இவர்கள் இருவருமாக கல்முனை பிராந்திய மீன்பிடித் திணைக்கள உதவிப் பணிப்பாளர் எஸ். ஸ்ரீரஞ்சனுடன் மேற்கொண்ட தொலைபேசிக் கலந்துரையாடலின் போது கல்முனைப் பிராந்தியத்தை மையப்படுத்தி தொலைத்தொடர்பு நிலையம் ஒன்றை அமைப்பதற்கான திட்ட அறிக்கைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு அமைச்சர் டக்ளஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.

ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு தொலைத்தொடர்பு வசதி மிகவும் முக்கியத்துவமிக்க சாதனமாக கருதப்படுகிறது. ஆழ்கடல் மீனவர்களுடனான தொடர்பாடல்களுக்கும் கடலில் ஏற்படுகின்ற அனர்த்தங்களின் போது உயிரிழப்புக்களையும் படகு உள்ளிட்ட பொருள் சேதங்களையும் தவிர்த்து, பாதுகாப்பாக கரை திரும்புவதற்கும் தொலைத்தொடர்பு நிலையமே முக்கிய பங்காற்றுகிறது.

இவ்வாறு மிகவும் அவசியத் தேவையாக இருந்து வருகின்ற தொலைத்தொடர்பு நிலையம் இப்பிராந்தியத்தில் இல்லாதிருக்கும் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்காக நடவடிக்கை எடுத்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்களுக்கு கல்முனைப் பிராந்திய மீனவர்கள் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments