Ticker

6/recent/ticker-posts

குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர்!

 


பாறுக் ஷிஹான் 

சமூக ஊடகங்கள் தொடர்பான முறையான கட்டுப்பாடுகள் இல்லாததனால் யாரும் எதனையும் பேசலாம், எதனையும் எழுதலாம் என்ற நிலை உருவாகியுள்ளது என தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.

 புதன்கிழமை (29) மாலை அண்மைக்காலமாக தென்கிழக்கு பல்கலைக்கழகம் தொடர்பான வெளிவரும்  விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் முகமாக விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

உபவேந்தரினைத் தெரிவு செய்வதற்கு இரண்டு வகையான புள்ளியிடல் முறை காணப்படுகிறது. முதலாவது புள்ளியிடல் UGC ஆல் நியமிக்கப்பட்ட குழுவினால் மேற்கொள்ளப்படுவது. இக்குழு UGC ஆல் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களையும் மூதவை நியமன உறுப்பினர்களையும் கொண்டது. இக்குழு அரசியல் செல்வாக்கற்ற சுயாதீனமானவர்களைக் கொண்டது. இரண்டாவது புள்ளியிடல் முறை பேரவை உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படுவது. முதலாவது புள்ளியிடல் முறையில் நான் அதிக புள்ளிகளுடன் முதலிடம் பெற்றேன்.

இரண்டாவது புள்ளியிடலில் சில பேரவை உறுப்பினர்கள் எனக்குப் புள்ளிகளைக் குறைத்து வழங்கினர். அதனால் இரண்டாவது புள்ளியிடலில் மிகச் சிறிய புள்ளி வித்தியாசத்தில் மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்டேன்.
இரு வகைப் புள்ளியிடலிலும் முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களது விபரம் ஜனாதிபதிக்கு அனுப்பப்படும். மூவரில் எவரையேனும் உபவேந்தராக நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு முழு அதிகாரமுள்ளது.

பரிந்துரைக்கப்பட்ட மூவருள் நான் மட்டுமே பேராசிரியராக இருந்தேன். ஏனைய இருவரும் சிரேஷ்ட விரிவுரையாளர்களே. பதவி நிலை, புள்ளிகள் அடிப்படையில் நான் முன்னிலை வகித்தேன். அதனால் ஜனாதிபதி என்னை உபவேந்தராக நியமனம் செய்தார்.

நான் உபவேந்தராக நியமிக்கப்படுவதற்கு முன்னரும் பல கடிதங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது. உபவேந்தராக நியமிக்கப்பட்டு பதவியினை பொறுப்பேற்பதற்கு குறிப்பிட்டகாலம் தாமதிக்க வேண்டியிருந்ததது. இடைக்காலத்தில் எனது நியமனத்தினை இரத்துச் செய்வதற்கு சில குழுவினர் பகீரத முயற்சி எடுத்தனர். எனக்கெதிராக நூற்றுக்கணக்காண பெட்டிசன்கள் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது.
அவர்களது பெட்டிசன்களில் உண்மையில்லாததன் காரணமாக அதிகாரிகள் அதனைக் கருத்திற்கொள்ளவில்லை. இருப்பினும் அவர்களால் எனது பதவியினை இரத்துச் செய்ய முடியவில்லை. பதவியிலிருந்த உபவேந்தரின் பதவிக்காலம் முடிவுற்றதும் நான் பதவியினைப் பொறுப்பேற்றேன். பதவியேற்றதும் பல்கலைக்கழகத்தினை பல்வேறு வழிகளிலும் மேம்படுத்த நடவடிக்கை எடுத்தேன். பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் எனது நிருவாகத்திற்கு முழு ஆதரவினை வழங்கினர்.

பதவியேற்றதும் பல்கலைக்கழக ஆளணியினை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டிருந்த பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டது. மிகவும் வெளிப்படைத்தன்மையான முறையில் நேர்முகத் தேர்வுகள் இடம்பெற்றன. நேர்முகத் தேர்வில் தோல்வியுற்ற பலர் எனக்கெதிராக சமூக ஊடகத்தில் விமர்சனங்களை தொடுக்க ஆரம்பித்தனர். பல்கலைக்கழக நிருவாகத்தினை ஒழுங்குபடுத்துவதற்கும் நான் நடவடிக்கை எடுத்தேன். சில விரிவுரையாளர்களது ஒழுக்காற்று விசாரணைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.

பட்டப்பின்படிப்பினை உரிய காலத்திற்குள் நிறைவு செய்யாதவர்கள் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. முன்னர் சட்டப்படி இராஜினாமாச் செய்தவர்கள் மீண்டும் முறைகேடாக பல்கலைக்கழகத்திற்கு நுழைவதற்கும் முயற்சித்தனர். அத்தகையவர்கள் தொடர்பில் சட்டத்திற்குப் புறம்பாக என்னால் அவர்களை இணைக்க முடியவில்லை. இத்தகையவர்கள் என்னைப் பற்றியும் எனது நிருவாகம் பற்றியும் போலித் தகவல்களை வழங்கிவருகின்றனர்.
தொடர்ச்சியான பெட்டிசன்களை அனுப்பி அதிகாரிகளுக்கு நெருக்கடிகளைத் தோற்றுவிக்கின்றனர்.
சமூக ஊடகங்களினூடாக எனக்கெதிராக போலிப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். சில ஊடகங்களில் தமது செல்வாக்கினைப் பயன்படுத்தி போலிச் செய்திகளை பிரசுரிக்கின்றனர். நான் பதவியேற்றது முதல் இந்தத் தரப்பினர் நாசகார செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது ஒவ்வொரு முயற்சியும் முறைகேடானது என்பதால் அவை முறியறிக்கப்பட்டன. உயர் அதிகாரிகளிடம் தமது தொடர்பினை பயன்படுத்தி இவர்கள் அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றனர். சட்ட ரீதியாக எனக்கு எதிராக நடவடிக்கை எடுக்க எந்த நியாயமான காரணங்களும் இல்லை. அதனால் எனக்கெதிராக எடுக்கப்பட்ட எல்லா முயற்சிகளையும் வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளேன். சில சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் என்னை அகற்ற முயற்சி எடுக்கப்பட்டது. அதற்கு இசைவாக ஊடகச் செய்திகளும் இந்த நாசகாரச் குழுவினால் வெளியிடப்பட்டது. பல்கலைக்கழக உபவேந்தரினை சட்டரீதியாக அகற்றுவதற்கு ஒரு முறை இருக்கிறது. பல்கலைக்கழக நிருவாகம் சீர்குலைந்திருந்தால் மட்டுமே அதனைச் செய்யமுடியும்.
ஆனால் எமது பல்கலைக்கழகம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

விரிவுரையாளர்களும் நிருவாகிகளும் மாணவர்களும் மிகவும் ஒத்துழைப்புடன் செயற்படுகின்றனர். பல்கலைக்கழக கல்வி மற்றும் இதர நடவடிக்கைகளுக்கு எந்தப் பங்கமும் இடம்பெறவில்லை. எந்தவொரு மாணவர் எதிர்ப்பும் பல்கலைக்கழக நிருவாகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட வில்லை.
மொத்தத்தில் பல்கலைக்கழக நிருவாகம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சீர்குலையவில்லை.
இந்நிலையில் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் என்மீது சுமத்தப்பட்டு வருகின்றது.
இந்தக் குற்றச்சாட்டுக்களில் எந்த அடிப்படையும் இல்லை. இவ்வளவு காலமும் நான் பொறுமையாக இருந்தேன்.
இக்குற்றச்சாட்டுக்களை சட்ட ரீதியாக அனுகுவதற்கு நான் நடவடிக்கை எடுத்துள்ளேன். சமூக ஊடகத்தினை தவறாகக் கையாளும் குழுவினர் போலிச் செய்திகளை வெளியிட்டுவருகின்றனர்.
எமது பல்கலைக்கழகத்தினைப் பொறுத்த வரையில் இந்த விடயம் நீண்டகாலமாக இடம்பெற்று வருகிறது. இந்தத் தரப்பினர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டினை நடத்தினர். முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் நாஜிம் அவர்களது நிருவாகத்தினைக் சீர்குலைக்க சதிசெய்தனர். ஊடக மாநாடுகளை நடத்தினர், அரசியல்வாதிகளைச் சந்தித்தனர். நாசகார வேலைகளில் ஈடுபட்டனர்.

இத்தகைய நாசகார வேலைகளில் ஈடுபடுவது இவர்களது வழக்கமாக இருந்து வருகிறது. இவர்கள் தமது கடமைப் பொறுப்புக்களை முறையாக நிறைவேற்றுவதில்லை. உரிய காலங்களுக்குள் தமது பட்டங்களை முடிப்பதில்லை. இந்தத் தரப்பின் நடவடிக்கைகளுக்கு ஒரு சில நிருவாகிகளும் ஊழியர்களும் துணைபுரிகின்றனர். பல்கலைக்கழகத்தினை ஒரு பதட்ட நிலையில் வைத்திருப்பதனை இவர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். ஆனால் இவர்களது இந்த நாசகாரச் செயல்களுக்கு நான் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை.
இந்தப் பல்கலைக்கழகம் வீழ்ச்சியுறுமாக இருந்தால் அதற்கு இந்தத் தரப்பினரே முழு முதற்காரணம். எனது நிருவாகம் தொடர்பாக UGC கோரிய விளக்கங்கள் அனைத்திற்கும் உரிய பதில்கள் வழங்கப்பட்டுள்ளன.
பல்கலைக்கழத்தில் தீர்மானங்கள் கூட்டு அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றன. தற்துணிவு அடிப்படையில் நான் எந்தத் தீர்மானத்தையும் எடுக்கவில்லை.
பல்கலைக்கழக நிருவாகத்தில் பீடாதிபதிகள், துறைத்தலைவர்கள் போன்ற பல பதவிகள் உள்ளன. கீழுள்ள அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெற்று கூட்டு அடிப்படையில் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. எனது நிருவாகத்திற்கு எதிராக எந்த பல்கலைக்கழக அதிகாரிகளும் என்னிடம் முறையிடவில்லை.
எனது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளும் முறையாகக் கையளப்பட்டுள்ளன. எனது நிருவாகம் சட்ட ரீதியாக முன்னெடுக்கப்பட்டது என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது. அதன் காரணமாகவே என்னை பதவியிலிருந்து அகற்றுவதற்கு எதிராக நீதி மன்றத்தினை அனுகியுள்ளேன்.
மனுவினை மேன்முறையீட்டு நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.
என்னை பதவியிலிருந்து அகற்றுவதற்கும் மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையும் விதித்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த சமூக விரோதிகள் மீண்டும் ஊடகங்களைப் பயன்படுத்தி என்னை விமர்சிக்கின்றனர். சில பொறுப்பு வாய்ந்தவர்களும் செய்திகளின் உண்மைத் தன்மையினை அறியாது கருத்துவெளியிடுகின்றனர். இத்தகைய போலிச் செய்திகள் வெளியிடப்படுவது மிகவும் வருந்தத்தக்கது. இந்தப் பின்னணியில்தான் கௌரவ முன்னாள் ஆளுநர் ஒருவரது குற்றச்சாட்டுக்களும் உள்ளன. அவருக்கு வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அவர் தனது கருத்துக்களை வெளியிட்டிருக்க முடியும். கௌரவ முன்னாள் ஆளுநரது குற்றச்சாட்டுக்களில் எந்த உண்மையுமில்லை என்பதைத் தெரிவிக்கின்றேன். இக்குற்றச்சாட்டுக்கள் சமூக மட்டத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடியது. ஆதலால் அக்குற்றச்சாட்டுகளுக்கான பதில்களை வழங்குவதற்கு நான் கடமைப்பட்டுள்ளேன்.

எனது கல்விசார் நேர்மைத் தன்மை தொடர்பில் சில குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். எனது கல்விசார் விடயங்களில் எனக்கு மிகுந்த நம்பிக்கையிருக்கிறது. எனது முதுதத்துவமாணி ஆய்வேடு, ஆய்வுச் சுருக்கம், ஆய்வுக் கட்டுரைகள் தொடர்பில் கேள்வி எழுப்புகின்றனர். முதுதத்துவமாணி ஆய்வேட்டின் ஓரிரு பக்கங்களை எடுத்துக்கொண்டு அவை பிரதிசெய்யப்பட்டது என்கின்றனர். பிரதியீடு செய்யப்படுவது தொடர்பில் சில நெறிமுறைகள் உலகளாவிய ரீதியாகக் காணப்படுகிறது. அந்த நெறிமுறைகளுக்கு உட்பட்டே எனது ஆய்வேடு தயாரிக்கப்பட்டுள்ளது.
எனது ஆய்வேடு 2008-2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாக சமூகவியல் கண்ணோட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு.

சமூக ரீதியிலும் பிராந்திய அடிப்படையிலும் மிகவும் பெறுமதிவாய்ந்த ஆய்வாக அது உள்ளது. ஒரு பல்கலைக்கழக மேற்பார்வையாளரின் கீழ் எனது ஆய்வேடு தயாரிக்கப்பட்டது. எனது ஆய்வேட்டினை இரு பரீட்சகர்கள் மீளாய்வு செய்து அதன் தரத்தினை மதிப்பிட்டுள்ளனர். எனது ஆய்வேட்டில் சுமார் 40000 இற்கு மேற்பட்ட சொற்கள் உள்ளன. அவற்றுள் சில நூறு சொற்களை வைத்துக்கொண்டு வேண்டுமென்றே குற்றம்சாட்டுகின்றனர். சமூக விஞ்ஞான ஆய்வுகளில் ஒரு குறிப்பிட்ட அளவான பிரதியீட்டிற்கு அனுமதியுள்ளது.

உலகளாவிய ரீதியாக உள்ள நியமங்களை நீங்கள் பார்க்கமுடியும்.
இலங்கையில் நடைமுறையில் உள்ள சட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டே எனது ஆய்வேடு தயாரிக்கப்பட்டது.
அதேவேளை, ஒரு கட்டுரைச் சுருக்கம் தொடர்பாகவும் விமர்சிக்கின்றனர்.
ஒரு கட்டுரையில் மிக மிக சிறிய பகுதியே சுருக்கம். ஆய்வுச் சுருக்கத்தில் ஒரு சில வசனங்களில் ஒருமைத் தன்மை காணப்படுவதனை குற்றமாகக் கருதுகின்றனர்.
சில வசனங்கள் ஆய்வாளர்களிடையே ஒத்துப்போவது உண்டு. அது அங்கீகரிக்கப்பட்ட எல்லையினை மீறாத வரையில் குற்றமாகக் கருதப்படுவதில்லை. பல ஆய்வாளர்கள் சேர்ந்து மேற்கொண்ட ஆய்வின் சுருக்கமே அது.

ஆய்வின் 99% பகுதியினை விடுத்து சில வசனங்களின் ஒத்த தன்மையினைக்கொண்டு குற்றம்சாட்டுகின்றனர். ஏனைய கட்டுரைகள் தொடர்பில் போலியாக சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். குறித்த குற்றச்சாட்டுக்களுக்கும் என்னைப் பதவி விலக்கக் கோருவதற்கும் சட்டத்தில் எந்த இடமுமில்லை. சட்டத்தின் வாயிலாக எதிர்கொள்ளமுடியாதவர்கள் இழுக்கினை ஏற்படுத்துவதற்காக இதனைச் செய்கின்றனர். நேர்முகத் தேர்வில் ஒருவருக்கு அநீதியிழைக்கப்பட்டால் அவர் நீதிமன்றத்தினை நாடமுடியும். பல்கலைக்கழகத்தில் உள்ள ஒருவருக்கு அநீதியிழைக்கப்பட்டால் அவரும் நீதிமன்றத்தினை நாடமுடியும்.

ஆனால் அத்தகையோர் சட்டத்தினூடாக பரிகாரம் தேடுவதனை விடுத்து, சமூக ஊடகங்களில் எழுதுகின்றனர். இதிலிருந்து இந்தச் செய்திகளின் உண்மைத் தன்மையினைப் புரிந்து கொள்ள முடியும். எனது ஆய்வுகள் வலைத்தளத்தில் காணக் கிடக்கின்றது. அனைவரும் அதனை எடுத்துப் படிக்கமுடியும்.

எனது பதவிக்காலத்தில் வழங்கப்பட்ட பதவியுயர்வுகள் சுற்றுநிரூபங்களுக்கு உட்பட்டே வழங்கப்பட்டுள்ளன. பதவியுயர்வினை வழங்குவதில் நீண்ட நடைமுறை காணப்படுகின்றது. பேராசிரியர் பதவியுயர்வு முறையில் ஒருவர் விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பது முதலாவது படிமுறை. குறித்த விண்ணப்படும் தொடர்பில் மூதவைக்கு அறிவிக்கப்படும். மூதவை குறித்த விண்ணப்பத்தில் உள்ள விடயங்களை மீளாய்வதற்கானவர்களை பிரேரிக்கும்.

பல்கலைக்கழக மூதவையில் மீளாய்வு அங்கத்தவர்கள் பிரேரிக்கப்படுவர். அது மிகவும் வெளிப்படையானது. மூதவை உறுப்பினர்களது ஒரு கருத்தின் அடிப்படையில் மீளாய்வாளர்கள் தெரிவுசெய்யப்படுகின்றனர். மீளாய்வு செய்பவரில் மூதவைக்கு நம்பிக்கை இல்லையெனில் மூதவை ஆட்சேபனைகளை தெரிவிக்கமுடியும். பின்னர் விண்ணப்பங்கள் அடங்கிய ஆவணம் குறித்த பீடத்தில் 30 நாட்கள் வைக்கப்படும்.

30 நாட்களில் குறித்த விண்ணப்பத்தினை கல்வியியலாளர்கள் பார்வையிட அனுமதியளிக்கப்படும். கல்வியியலாளர்கள் விண்ணப்பத்தினை பார்வையிட்டு தமது ஆட்சேபனைகளை அனுப்பமுடியும். 30 நாட்களுக்கு பின்னர் விண்ணப்பம் மீளாய்வுக்கு அனுப்பப்படும். விண்ணப்பத்தில் உள்ள ஆய்வு விடயங்கள் தொடர்பிலான பரிசீலனையினை 02 புலமையாளர்கள் மேற்கொள்வர். அவர்கள் சுற்றுநிருபத்திற்கு ஏற்ப தமது புள்ளியினையிட்டு அறிக்கையினை சமர்ப்பிப்பர். இருவரது அறிக்கைகளும் கிடைக்கப்பெற்றதன் பிற்பாடு இறுதி தெரிவுக்குழு கூட்டப்படும். இறுதித் தெரிவுக்குழுவில் உள்ளவர்கள்
o உபவேந்தர்
o பீடாதிபதி
o பதிவாளர்
o துறைத்தலைவர்
o மூதவை நியமனம் செய்யப்பட்ட இருவர்
o பேரவை உறுப்பினர் இருவர்
o பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட இருவர் தெரிவுக்குழு முன்னிலையில் விண்ணப்பதாரி நேர்முகத் தேர்வினை எதிர்கொள்வார்.

இறுதியிலையே அனைத்து உறுப்பினர்களதும் ஏகோபித்த தீர்மானம் பெறப்படும். ஒருமித்த கருத்தின் அடிப்படையிலையே பதவியுயர்வு தொடர்பான தீர்மானம் எடுக்கப்படுகிறது. இத்தெரிவின் போது தெரிவுக்குழுவில் ஆட்சேபனைகளைத் தெரிவிப்பதற்கு முழுச்சுதந்திரம் உள்ளது. தெரிவுக் குழுவின் முடிவு மீண்டும் பேரவைக்குப் பரிந்துரை செய்யப்படும். பேரவையிலும் குறித்த பரிந்துரை தொடர்பாக ஆட்சேபனைகளைத் தெரிவிக்கமுடியும். இறுதியாக பேரவை அனுமதியுடன் நியமனங்கள் வழங்கப்படுகின்றன.

இவ்வாறாக ஒவ்வொரு பதவியுயர்வுக்கும் ஒரு நீண்ட நடைமுறை உள்ளது. பதவியுயர்வுகள் ஓரிரு நாட்களில் வழங்கப்படுவதில்லை. பல மாதங்களாக அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டே பதவியுயர்கள் வழங்கப்படுகின்றன.
எனவே பதவியுயர்வு என்பது இரவோடு இரவாக தனியாக உபவேந்தர் மட்டும் செய்கின்ற விடயமல்ல. பல்கலைக்கழகத்தில் பதவியுயர்களை வழங்கும்போது நண்பர்கள், நண்பர் அல்லாதவர்கள் என்று பார்ப்பதில்லை. பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு வருடமும் பல பதவியுயர்கள் இடம்பெறுகின்றது.

பதவியுயர்வுகள் வழங்குவது பல்கலைக்கழகத்தில் ஒரு வழக்கமான நடைமுறையாக உள்ளது. எனது காலத்தில் சட்டத்திற்கு உட்பட்டு, பேரவை அனுமதியுடனையே பதவியுயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் பதவியுயர்வுக்கு இந்த நடைமுறையே பின்பற்றப்படுகிறது. சுற்றுநிருபங்களுக்கு அப்பால் சென்று பதவியுயர்வுகளை வழங்கமுடியாது. அதற்கு எனது அதிகாரிகள் என்னை இடமளிக்கப்போவதில்லை.

பதவியுயர்வுக்குப் பின்பற்றப்படுவதுபோன்று சில சட்ட நடைமுறைகள் நியமனத்திற்கும் உண்டு. விண்ணப்பங்கள் தேசியப் பத்திரிகைகளில் கோரப்பட்டு, விண்ணப்பதாரிகளிடமிருந்து பெறப்படுகின்றன. விண்ணப்பங்கள் உரிய துறைத்தலைவர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்படும். அவர்களது அவதானங்களைப் பெற்றதன் பின்னர் நேர்முகத் தேர்வுக்கான கடிதங்கள் அனுப்பப்டும். நேர்முகத் தேர்வுக் குழுவில் உபவேந்தர் தலைமையில்
o குறித்த பீடத்தின் பீடாதிபதி
o குறித்த துறையின் தலைவர்
o மூதவை உறுப்பினர்
o பேரவை உறுப்பினர்
o பதிவாளர் அடங்கிய குழு
- மேற்குறிப்பிட்ட தெரிவுக்குழு விண்ணப்பதாரிகளை நேர்முகத் தேர்வுக்கு உட்படுத்தும்.

நேர்முகத் தேர்வில் விண்ணப்பதாரிகளின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்.
அவர்களது ஆற்றல்களை வெளிப்படுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும். தெரிவுக் குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக புள்ளிகளை இடுவர்.
பின்னர் மொத்தப் புள்ளிகளும் கணக்கிடப்பட்டு முதல் இடங்களைப் பெறுபவர் தெரிவுசெய்யப்படுவர்.
அத்தகைய குழு ரீதியான தெரிவின் மூலமே நியமனங்கள் வழங்கப்படுகின்றன. இத்தகைய நியமனங்களையும் பல்கலைக்கழகப் பேரவை அங்கீகரிக்க வேண்டும்.
என்னால் வழங்கப்பட்ட எந்த நியமனங்களிலும் நான் பக்கச்சார்பாக செயற்படவில்லை.

வழங்கப்பட்ட நியமனங்கள் அனைத்தும் குறித்த துறைகளின் தேவைப்பாட்டிற்கு ஏற்ப இடம்பெற்றுள்ளன. நேர்முகத் தேர்வில் பங்குபற்றியவர்களுள் தகுதியானவர்களே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தோல்வியுற்றவர்கள் தெரிவுக் குழுவின் முடிவில் திருப்தியுறாதபோது நீதிமன்றத்தினை நாடமுடியும். நீதிமன்றத்தினை நாடி குறித்த பதவிகளை மீளப்பெற்ற நிகழ்வுகளும் இலங்கையில் இடம்பெற்றுள்ளன. நான் பக்கச்சார்பாக செயற்பட்டிருந்தால் அதனை நீதிமன்றத்தில் நிரூபிக்கமுடியும்.
அதனை விடுத்து ஊடகங்களில் கருத்துக்களை பரப்புரை செய்வது தவறான நடைமுறையாகும்.

உபவேந்தர் என்ற அடிப்படையில் சட்டத்திற்கு உட்பட்டே நான் செயற்பட முடியும். வழங்கப்பட்ட நியமனங்கள் தொடர்பில் திருப்தி இல்லை என்றால் சட்டத்தினை அணுகி இருக்கமுடியும். பக்கச்சார்பான நியமனங்கள் என்ற கதை நேர்முகத் தேர்வில் தோல்வியுற்றவர்களது வாதம் மட்டுமே. அதில் எந்தவிதமான பக்கச்சார்புகளும் இடம்பெறவில்லை. தெரிவு செய்யப்பட்டவர்கள், தெரிவு செய்யப்படாத அனைவரது ஆவணங்களும் உள்ளன.

தேவையானவர்கள் அவற்றினை சட்ட நெறிமுறைகளினூடாகப் பார்வையிடமுடியும். அதில் எந்தவித ஒழிவு மறைவுகளும் இல்லை.
குறித்த நபர்கள் நீதிமன்றத்தினை அனுகி தோல்வியுற்றதன் பின்னரே போலிப் பிரச்சாரங்களைத் தொடுத்துள்ளனர். நான் வழங்கிய நியமனங்கள் எவற்றிலும் முறைகேடாக நடந்துகொள்ள வில்லை. அத்தகைய முறைகேடுகள் எவையும் எனது கவனத்திற்குக் கொண்டுவரப்படவில்லை. எனவே பக்கச்சார்பான நியமனங்கள் என்பது என்னை அகற்றுவதற்கு சோடிக்கப்பட்ட கட்டுக்கதை.

ஐபெட் விடயம் உலக வங்கியின் நிதித் திட்டத்தினூடாக இடம்பெற்றது.
அதில் எந்தவிதமான நிதி மோசடிகளிலும் நான் ஈடுபடவில்லை.
உலக வங்கியின் நிதித் திட்டத்தினை கையாளுவதற்கு தகுதிவாய்ந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்னர்.
பொருட்களை கொள்வனவு செய்வதற்கும் நிதியினைக் கையாள்வதற்கும் தனியான அதிகாரிகள் உண்டு. பொருட்கள் கொள்வனவுக்கு முன்னர் துறைசார் நிபுணர் குழுவொன்றின் அங்கீகாரமும் பெறப்படுகின்றது. ஐபெட் விடயம் தொடர்பான சர்ச்சை உள்ளக கணக்காய்வாளர்களினால் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஐபெட்டுக்கான எந்த நிதியும் குறித்த வழங்குனர்களுக்கு வழங்கப்படவில்லை. அதில் எந்த ஊழலிலும் நான் ஈடுபடவில்லை. நிதியும் விரயம் செய்யப்படவில்லை.

எனது இடையீட்டின் மூலமே வழங்குனருக்கான நிதி வழங்கள் தடுக்கப்பட்டுள்ளது. ஐபெட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அவ்வாறே உள்ளது. விசாரணைகள் முடிவுறும் வரை குறித்த நிதி வழங்கப்படுவதும் என்னால் தடுக்கப்பட்டுள்ளது. அதில் நான் என்ன நிதி மோசடியினைச் செய்துள்ளேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஐபெட் வழங்கிய நிறுவனம் தொடர்பான விசாரணைகளுக்கு அதிகாரிகளைப் பணித்துள்ளேன். குறித்த நிறுவனத்திற்கும் குறித்த பொருள் கொள்வனவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.இதுவிடயத்தில் எந்த முறைகேடுகளும் இடம்பெறக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

இவை தொடர்பான விடயங்களை எமது அதிகாரிகளிடம் நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும். எனவேதான் என்னை பதவியிலிருந்து அகற்றுவதற்கு நியாயமான காரணங்கள் இல்லாத நிலையில், சோடிக்கப்பட்ட இத்தகைய குற்றச்சாட்டுக்களைக் கொண்டு எனக்கெதிராக சேறு பூச ஆரம்பித்துள்ளனர்.

அதன் மூலம் என்னை நிலைகுலையச் செய்து எனது நிருவாகத்தினை சீரழிக்க முயற்சிக்கின்றனர். ஆனாலும் எனது நிருவாகம் எந்தவிதமான இடைஞ்சல்களும் இன்றி சிறப்பாக இடம்பெற்றுவருகின்றது.

எமது பல்கலைக்கழகத்தில் பதிவாளர் மற்றும் நிதியாளர் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளது. வெற்றிடங்கள் ஏற்பட்டதும் பதில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். நியமித்த கையோடு நிரந்தர அதிகாரிகளை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். நிதியமைச்சின் சுற்றுநிருபம், ஏனயை சுற்றுநிருபவங்களுக்கு ஏற்பவே நடவடிக்கை எடுக்கமுடியும். இன்றைய பொருளாதார நெருக்கடி நிலையில் நியமனங்களை செய்வதற்கு உரிய அனுமதி பெறப்பட வேண்டும்.
அத்தகைய அனுமதியினைப் பெறுவதற்கான ஆவணங்கள் முகாமைத்துவ சேவைகள் திணைக்கத்திற்கு எம்மால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த அனுமதி கிடைத்ததும் முறைப்படி நியமனங்கள் இடம்பெறும்.

அனுமதிக்காக நாங்கள் காத்துக்கொண்டிருக்கின்றோம். அனுமதி கிடைத்ததும் விண்ணப்பங்கள் கோரப்பட்டு உரியவர்கள் தெரிவு செய்யப்படுவர்.
அதில் எந்தவிதமான சோடிப்புக்களும் இல்லை. ஏனைய பல்கலைக்கழகங்களிலும் இந்த நடைமுறையே பின்பற்றப்படுகிறது.
எனவே இந்த விடயத்திலும் எந்தவிமான உண்மைகளும் இல்லை.

UGC விசாரணை தொடர்பில் எனக்குத் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. நீதியான விசாரணை என்றால் இரு தரப்பினரது கருத்துக்களும் உள்வாங்கப்பட வேண்டும்.
அவ்வாறானதொரு இருபக்க விசாரணை ஒன்று இடம்பெற வில்லை. அத்தகைய விசாணைகள் இடம்பெறுகிறபோது அதற்கு முழு ஒத்துழைப்பினையும் வழங்கத் தயார். UGC விசாரணை அறிக்கை தொடர்பாக பேசப்படுகின்றது. அத்தகைய அறிக்கை தொடர்பில் எந்த விடயமும் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்படவில்லை.
அதிகாரிகளுக்கு தொடர்ச்சியாக அனுப்பப்டும் பெட்டிசன்கள் அவர்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்தக்கூடும்.

சட்ட ரீதியாக எதனையும் எதிர்கொள்ளமுடியாதவர்களே பெட்டிசன்களை அனுப்புகின்றனர்.
வெளியிலுள்ள தமது முகவர்களைப் பயன்படுத்தி அதிகாரிகளுக்கு அழுத்தங்களைக் கொடுக்கின்றனர்.
UGC எனக்குமிடையிலான நிருவாக ரீதியான தொடர்பாடலில் எந்தச் சிக்கலும் இல்லை. UGC இன் அறிவுறுத்தல்கள், ஏனைய சட்ட ஒழுங்குகளுக்கும் உட்பட்டு எனது நிருவாகம் இடம்பெறுகிறது. UGC இனால் கேட்கப்பட்ட விளக்கங்களுக்கு உரிய பதில்கள் அவ்வப்போது வழங்கப்பட்டுள்ளன.

எமது பல்கலைக்கழகத்தின் தரநிலையினைக் குறைப்பதற்கு நான் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்தக் கருத்திலும் எந்த உண்மையும் இல்லை. ஏற்கனவே இந்தப் பல்கலைக்கழகம் 3வது இடத்தில் இருந்ததாக ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தப் பல்கலைக்கழம் இந்த நிலையினை அடையவில்லை.பல்கலைக்கழகங்களின் தரநிலையினைத் தீர்மானிப்பதில் பல காரணிகள் செல்வாக்குச்செலுத்துகின்றன.

ஆய்வு வெளியீடுகள் அவற்றுள் முக்கிய பங்காற்றுகின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் ஆய்வு நடவடிக்கைகள் குறைந்துள்ளன. ஆய்வுகளுக்கான நிதி ஒதுக்கீடுகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. முன்பு போன்று ஆய்வு மாநாடுகளுக்கு நிதிகளை ஒதுக்கீடு செய்யமுடியாத நிலையில் நாம் உள்ளோம்.
எம்மால் உழைக்கப்படும் பணமும் மிகவும் குறைவானது. ஏனைய பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடும்போது நாம் குறைந்த பீடங்களைக் கொண்டுள்ளோன்.

எமது விரிவுரையாளர் தொகையும் மிகவும் சொற்பமானது. வரையறுக்கப்பட்ட கற்கைநெறிகள் மட்டுமே இங்கு வழங்கப்படுகின்றன.
வெளிநாட்டு மாணவர்களின் வருகையும் வரையறுக்கப்பட்டுள்ளது.
இத்தகைய காரணிகளே பல்கலைக்கழகத்தின் தரத்தில் பாதிப்புச்செலுத்துகிறது.
பல்கலைக்கழகத்தின் தரநிலையினை மேம்படுத்துவதில் உபவேந்தர் மட்டுமல்ல,
பல்கலைக்கழக ஒட்டுமொத்த சமூகமும் அதற்காக உழைக்க வேண்டும். பல்கலைக்கழகத்தின் தரநிலையினை மேம்படுத்துவதற்காக புதிய பீடங்களை அமைக்க வேண்டும், விரிவுரையாளர்களை ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட செய்வதற்கான தூண்டுதல்களிலும் நான் ஈடுபடுகின்றேன்.

உண்மையில் பல்கலைக்கழக தரநிலையில் நாம் பெரிய வீழ்ச்சி எதனையும் சந்திக்கவில்லை. ஆனால் நாம் இருக்கின்ற நிலை போதுமானது அன்று. அதனை முன்னேற்ற வேண்டும். அதற்கு பல்கலைக்கழகத்திலுள்ள அனைவரது கூட்டு முயற்சியும் அவசியம். அதேபோல் அவ்வப்போது பல்கலைக்கழகங்களின் தரநிலையில் மாற்றம் ஏற்படுவது வழக்கம். கடந்த 05 ஆண்டுகால பல்கலைக்கழகங்களின் உலகத் தரப்படுத்தலைப் பார்த்தால் இதனை புரிந்துகொள்ளலாம்.

இதில் நான் எந்தத் தவறினையும் செய்யவில்லை. என்னை ஊடகங்களின் முன்னிலையில் குற்றவாளியாக்குவதற்கு இந்தச் சோடிப்புக்களைச் செய்கின்றனர்.
உண்மை நிலையினை யாரும் பேசுவதில்லை.

ஹஜ் புனித யாத்திரைக்காகச் செல்லவிருந்த என்னை நாட்டைவிட்டு தப்பியோட முயற்சித்ததாக சித்திரிக்கின்றனர். சவுதி மன்னரின் அழைப்பின் பேரில் இம்முறை ஹஜ் கடமையினை நிறைவேற்ற தெரிவுசெய்யப்பட்டேன். ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்காக விடுமுறை அனுமதியினை ஜனாதிபதியிடமிருந்து பெற்றிருந்தேன். எனக்கு சட்டப்படி விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. ஆனால் நான் நாட்டைவிட்டு ஓடப்போவதாக எனக்கெதிராக பெட்டிசன்களை அடித்து தடுத்து நிறுத்தியுள்ளனர்.

எனது பயணத்திற்கு வழங்கப்பட் அனுமதியினை இறுதித் தருவாயில் கென்செல் செய்வதற்குச் செய்துள்ளனர். எனக்கு வழங்கப்பட்ட விடுமுறையினை உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் இரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்தார். கௌரவ அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்கவே எனது விடுமுறை இரத்துச் செய்யப்பட்டது. ஹஜ் கடமைக்கான வாய்ப்பினைப் பெறுவது ஒரு முஸ்லிமின் வாழ்க்கையில் ஒரு பாக்கியம். அந்தக் கடமையினை நிறைவேற்றுவதற்காக நான் சென்றேன். ஆனால் எனது மார்கக் கடமையினை நிறைவேற்றாமல் தடுப்பதற்கும் இவர்கள் முயற்சித்துள்ளனர்.

நாட்டை விட்டுத் தப்பியோடு எந்த எண்ணமும் எனக்கில்லை. தவறுகள் எதனையும் செய்யாத நிலையில் நான் ஏன் நாட்டைவிட்டு தப்பியோட வேண்டும். எந்தவொரு விடயத்திலும் நியாயமான பக்கச்சார்பற்ற விசாரணைகளை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். நான் இந்தப் பல்கலைகழகத்தின் பழைய மாணவன். இந்தப் பல்கலைக்கழத்தின் மீது எனக்கு மிகப்பெரிய பற்று இருக்கின்றது.
காழ்ப்புணர்வுள்ள சிலரது போலிப் பிரச்சாரங்களுக்காக எனது நிறுவனத்தினைக் கைவிடுவதற்கு நான் தயாரில்லை. என்னை நம்பியிருக்கின்ற பல்கலைக்கழக சமூகத்திற்காக முழு முச்சுடன் இயங்குவதிலையே எனது கவனமுள்ளது.

அண்மையில் சாய்ந்தமருதில் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அந்தத் தாக்குதலை உபவேந்தரின் சகோதரர் மேற்கொண்டார் என சமூக ஊடகங்களில் செய்தி பிரசுரமானது. அதில் எந்த உண்மையும் இல்லாத நிலையில் எனது சகோதரர் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டார். அந்தச் சம்பவத்தினைக் கொண்டு என்னையும் எனது சகோதரரையும் கொலைகாரர்களாக இவர்கள் சித்திரித்தனர். பொலிசாரினதும் நீதிமன்றத்தினதும் வேலையினை மேற்படி சமூக ஊடகச் செய்தியாளர்கள் செய்தனர்.
தற்சமயம் எனது சகோதரர் பிணையில் வெளிவந்துள்ளார்.
சந்கேத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்ட ஒருவருக்கு எதிராக பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்தது.

இவ்வாறு சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டாலும் பதவியிலிருந்து தற்காலிகமாக பதவியிலிருந்து இடை நிறுத்த வேண்டும் என பல்கலைக்கழக சட்டம் சொல்கிறது. எனது சகோதரர் என்றும் பாராமல் அவரை பதவியிலிருந்து இடைநிறுத்தி சட்டத்தினை அமுல்படுத்தியுள்ளேன்.
எனது சகோதரர் விடயத்தில் நான் எந்தவிதமான பாரபட்சங்களும் காட்டவில்லை. குறித்த தாக்குதல் முயற்சியின் உண்மைத் தன்மையினை நீதிமன்றம் தீர்மானிக்கும்.

ஒரு குழுவினர் என்னை கொலைகாரனாக சித்திரித்து எனது பிறப்பு, குடும்பத்தினை மானபங்கப்படுத்துகின்றனர்.
இவர்களுக்கு எதிராக நான் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளேன்.
இவர்கள் எனக்கெதிராக செய்திகளைப் பிரசுரிப்பதனை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

கடந்த காலங்களிலும் இவர்கள் இந்தக் கைங்கரியத்திலேயே ஈடுபட்டனர். மொத்தத்தில் என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. ஊடகங்களில் மக்களின் கவனத்தினைப் பெறுவதற்காக சோடிக்கப்பட்டது. காழ்ப்புணர்வு கொண்ட மிகச் சிலரது நடவடிக்கையே இது. இவர்கள் தொடர்பிலும் இவர்களது செயற்பாடுகள் தொடர்பிலும் ஊடகங்களின் கவனம் திரும்ப வேண்டும். இத்தகையோர் தமது சட்ட மீறல்களையும் ஊழல்களையும் மறைக்கவே என்மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். பல்கலைக்கழகமும் பல்கலைக்கழக நிருவாகமும் முன்னெப்போதும் இல்லாதவகையில் மிகவும் வினைத்திறனாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. பல்கலைக்கழக சூழலில் கடந்த சில வருடங்களாக அமைதியான சூழல் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

எனவேதான் சமூக ஊடகங்களிலும் ஏனைய ஊடகங்களிலும் வெளிவருகின்ற போலியான, இட்டுக்கட்டப்பட்ட, மோசடியான கருத்துக்களில் யாரும் ஏமாந்து விடமாட்டார்கள் என நான் நம்புகிறேன். இந்த உண்மை பலருக்கு தெரியும். ஆனால் பொது வெளியில் அவற்றினை வெளியிடுவதற்கு அஞ்சுகின்றனர். ஏனெனில் பல்கலைக்கழகத்திற்கு வெளியே உள்ள சிலர் சமூக ஊடகங்களில் அவர்களையும் அவர்களது குடும்பத்தினையும் மானபங்கப்படுத்துவர் என்ற அச்சத்தில் உள்ளனர். உண்மைகள் ஒரு நாள் வெளிவரும். சமூக ஊடகங்கள் தொடர்பான முறையான கட்டுப்பாடுகள் இல்லாததனால் யாரும் எதனையும் பேசலாம், எதனையும் எழுதலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. செய்திகளின் உண்மைத் தன்மைகளுக்கு அப்பால் எல்லாம் செய்திகள் என்ற நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தானது. சமூக மாற்றத்தில் இது எதிர்வினையாற்றக்கூடும்- என்றார்.

Post a Comment

0 Comments