Ticker

6/recent/ticker-posts

“கண்டியில் முச்சக்கர வண்டிகளில் பயணிக்க வேண்டாம்!”


கண்டி நகரில் முச்சக்கரவண்டி சாரதிகளின் அநீதமான செயற்பாடுகளால் இந்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நகரின் முச்சக்கர வண்டிகளில் பயணிக்க வேண்டாம் என தூதரகங்கள் அறிவுறுத்தியுள்ளதாக கண்டி மாநகர ஆணையாளர் இஷான் விஜேதிலக தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் கண்டி நகரம் தொடர்பில் நல்ல கருத்துகள் இல்லை எனவும் ஆணையாளர் தெரிவித்தார்.

கண்டி ஈ.எல். சேனாநாயக்க நூலக கேட்போர் கூடத்தில் நேற்று (29) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே  அவர் இவ்வாறு தொிவித்தாா்.

அவா் தனதுரையில் மேலும் தொிவித்ததாவது,

கண்டி இருளாகவும், அழுக்காகவும், பாதுகாப்பற்றதாகவும், போதைப்பொருள் பாவனை மற்றும் குற்றச்செயல்கள் அதிகம் உள்ள நகரம் எனவும் நெதர்லாந்து உட்பட பல நாடுகளின் தூதரகங்கள் கண்டி சுற்றுலாப் பயணிகளுக்குத் தெரிவித்துள்ளன. 

குறிப்பாக கண்டி நகருக்கு சுற்றுலா பயணிகள் முச்சக்கர வண்டிகளில் பயணிக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டி நகரில் பல முச்சக்கரவண்டி சாரதிகள் ஊழல் மற்றும் நியாயமற்றவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹாலை தோற்கடித்து கண்டியின் தலதா மாளிகை இணையத்தில் முதலிடத்தை எட்டியுள்ளது. நாம் தலதாவை வாழும் புத்தராகக் கருதுகிறோம். உலக பாரம்பரிய நகரமாக இருந்த கண்டி நகருக்கு இந்த நிலை வந்துள்ளதற்கு நாம் அனைவரும் வருந்த வேண்டும்.

கண்டியில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டிகள் இருந்தாலும், எண்ணூறு மட்டுமே உரிமம் பெற்றுள்ளது. மற்ற மாகாணங்களுக்குச் சென்ற வெளிநாட்டவர்கள் அந்த மாகாணத்தில் உள்ள முச்சக்கரவண்டி சாரதிகளின் சேவை மற்றும் நேர்மையைக் கண்டு கவரப்பட்டு அவர்களுக்கு வீடுகளைக் கூட கட்டிக் கொடுத்தனர். வாகனங்களைக்  கூட வாங்கிக் கொடுத்தள்ளனா்.

அந்த நாடுகளுக்கும் இவா்களை அழைத்துச் சென்றுள்ளனா். இவ்வாறு தனிப்பட்ட முறையில் நிறைய உதவிகள் இவா்களுக்குக் கிடைத்துள்ளது. ஆனால் கண்டியின் நிலைமை அவ்வாறல்ல,  சில வெளிநாடுகள் அந்த நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் கண்டி நகருக்குச் சென்றால் முச்சக்கரவண்டிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரித்திருக்கின்றன. இதனை மிகவும் சோகமான நிலையாகவே நாம் பார்க்கின்றோம்.இந்த நிலையை பாதிக்கும் காரணிகள் பல உள்ளன.

முச்சக்கர வண்டி சாரதிகள் மிகவும் சட்டவிரோதமான முறையில் அநீதியான முறையில் செயற்படுகின்றனா்.  இந்த நிலையை அடுத்த ஆண்டு முதல் மாற்றும் நடவடிக்கைகளை தற்போது செயல்படுத்தி வருகிறோம்.

உரிமம் பெற்ற முச்சக்கர வண்டிகளுக்கு தனி வண்ணம் அல்லது தனி அடையாள பேட்ஜ் வழங்குவதன் மூலம், ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்குவதன் மூலம், அந்த முச்சக்கர வண்டிகள் மூலம் சேவையை  பெறும் பொதுமக்களுக்கு எங்கள் பொறுப்பை நிறைவேற்றவுள்ளோம்.

நகரில் பல இடங்கள் இரவில் இருளில் மூழ்கி கிடப்பதாக புகார்கள் வருகின்றன. அடுத்த வருடம் கண்டி ஏரி சுற்றுவட்டம் உட்பட நகரின் வர்த்தகர்களின் பங்களிப்புடன் நகரை ஒளிமயப்படுத்தும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். பெரும்பாலான ஊடகங்கள் கண்டி நகரம் பற்றி மோசமான செய்திகளையே வெளியிடுகின்றன. இதுவே இந்நிலைமைக்கு காரணமாக இருக்கலாம் எனவும் மாநகர ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் கூறியதாவது: நகரில் மோசடி, ஊழல்,  குற்றச்செயல்கள், போதைப்பொருள் கடத்தல் போன்ற சம்பவங்கள் தொடர்பில் ஓரளவுக்கு கட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், ஊடகவியலாளர்கள் எப்போதும் அதிகாரிகளை திருப்தி படுத்தாமல், பொதுமக்களின் நலனுக்காகவே செயற்படுவதாகவும் கூறினர்.

Post a Comment

0 Comments