Ticker

6/recent/ticker-posts

திலினியின் பண மோசடி! தனியாா் வங்கி அதிகாரிகள் மீது விசாரணை!


திகோ குழுமத்தின் உரிமையாளரான திலினி பிரியமாலியால் பல கோடி ரூபாய் மோசடிக்கு வழிவகுத்த பல தனியார் வங்கி, நிதி நிறுவனங்கள் மற்றும் அடமான நிறுவனங்களின் உயா் அதிகாரிகள்  தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கோடீஸ்வரர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள், நடிகைகள், பிக்குகள் என பல கோடி ரூபா பெறுமதியான பணம் மற்றும் தங்கம் திலினி பிரியமாலிக்கு தனியாா் வங்கிகள், அடமான நிறுவனங்கள் ஊடாக பாிவா்த்தனை செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

திலினி பிரியமாலிக்கு அந்த பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பு அந்த நிதி  நிறுவனங்களின் உயர் அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ளது. மற்றும் அவருக்கு பணம் எவ்வாறு கிடைத்தது? என்பது தொடா்பாக அவர்கள் எந்த விசாரணையும் செய்யவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையான காலப்பகுதியில் திலினி பிரியமாலி இந்த நிறுவனங்களின் ஊடாக 3000 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை குறித்த வங்கிகள் ஊடாக பாிவா்த்தனை செய்துள்ளாா்.  இது பல்வேறு நபர்களிடமிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது. சந்தேகநபருக்கு இவ்வளவு பெரிய தொகை எப்படி கிடைத்தது என்பது குறித்தும், அவர் அந்த பெருந்தொகையான பணத்தை  வைப்பிலிட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் அதிகாரிகள் இது குறித்து விசாரிக்காதது பாரிய பிரச்சினையாக உள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சந்தேகநபர் தனது திகோ குழும வர்த்தகத்தை நடத்தி வந்த உலக வர்த்தக மையத்தில் அமைந்துள்ள மூன்று தனியார் வங்கிகளுடன் நேரடியாக பாரிய பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேக நபரின் பணப் பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக அந்த வங்கிகளின் உயா் அதிகாரிகள் பலர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு எதிர்வரும் காலங்களில் அழைக்கப்படவுள்ளனர்.

Post a Comment

0 Comments