Ticker

6/recent/ticker-posts

கோத்தாவின் அலி சப்ரி, சிரிமாவோவின் பதியுத்தீன் மஹ்மூதுக்கு நிகராவாரா?

- கலாநிதி அமீர் அலி

முஸ்லிம்கள் இல்லாத அமைச்சரவையை விரும்பிய சிங்கள-பௌத்த கடும்போக்கு தேசியவாதிகளின் கடுமையான எதிர்ப்பிற்கு மத்தியில், 26 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையில் ஒரே முஸ்லிம் அமைச்சராக அலி சப்ரி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டமை, அரசாங்கத்தில் அவரது எதிர்கால வகிபாகம், சமூகத்திற்கான அவரது சேவை மற்றும் நாட்டிற்கான பங்களிப்பு பற்றிய பல சர்ச்சைகளைத் தூண்டிவிட்டுள்ளன.
ஏற்கெனவே, சிலர் அலி ஸப்ரி நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டதையும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கா லக்ஷ்மன் கதிர்காமரை வெளியுறவு அமைச்சராக நியமனம் செய்ததையும் ஒப்பீடு செய்து, இவை இரண்டு நியமனங்களும் குறிப்பிட்ட முஸ்லிம் மற்றும் தமிழ் அமைச்சர்களின் சமூக நலன்களைப் பாதிக்கும் வகையிலான அரசாங்கத்தின் கடும்போக்கானதும் சர்ச்சைக்குரியதுமான சில தீர்மானங்களை அமுல்படுத்தும் நோக்கில் வழங்கப்பட்டவை அன்றி வேறில்லை என்ற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர்.

இரண்டு அமைச்சர்களின் அறிவு மற்றும் தொழில்சார் திறனைப் பொறுத்தவரை எந்தவொரு குறைபாட்டையும் காண முடியாது. எவ்வாறாயினும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான லக்ஷ்மன் கதிர்காமரின் சிலுவைப் போர், அவரை தமிழ் தேசியவாதிகளின் பார்வையில் தமிழ் சமூகத்தின் எதிரியாகக் காட்டியது. இதேபோல், கோத்தாபய மற்றும் அவரது அமைச்சரவை பௌத்த மேலாதிக்கவாதிகளின் அழுத்தத்தின் கீழ் ஒரு நாடு-ஒரு-சட்டம் என்ற கொள்கையை அமல்படுத்துவதாயின்; சர்ச்சைக்குரிய முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் (MMDA) போன்ற முஸ்லிம் தனிப்பட்ட சட்டங்களை ஒழிப்பது மட்டுமன்றி முஸ்லிம் மத்ரஸாக்கள் மற்றும் முஸ்லிம் பொதுப் பள்ளிக்கூடங்களின் இருப்புக்கான பகுத்தறிவுரீதியான மறுஆய்வும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த தீவிர நடவடிக்கைகளில் சிலவற்றைச் செய்யக்கூடிய ஒருவராக அலி ஸப்ரி இருப்பாரா? இது போன்ற மாற்றங்களைச் செய்ய அவர் தனது சொந்த சமூகத்திடமிருந்து ஆதரவைப் பெறுவாரா? என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அலி ஸப்ரி, கதிர்காமர் என்போருக்கு அப்பால் 1960-1963 மற்றும் 1970-77 காலப்பகுதியில் கல்வி அமைச்சராகவும் 1963-1965 வரை சுகாதார அமைச்சராகவும் சிரிமாவோ அம்மையாரால் நியமிக்கப்பட்ட பதியுத்தீன் மஹ்மூத் என்ற மற்றொரு அமைச்சரும் இருந்தார்.

ஒரு சில ஊடக நேர்காணல்கள் மற்றும் பொது உரைகள் மூலம் பதியுத்தீன் மஹ்மூத் மீது அலி ஸப்ரி மிகுந்த மரியாதை வைத்திருந்ததையும் அவரது தந்தையின் நல்ல நண்பராக இருந்தார் என்பதையும் அறிய முடிகிறது. எனவே, பதியுத்தீன் மஹ்மூத் என்ன செய்தார், எவ்வாறு தனது குறிக்கோளை அடைந்துகொண்டார் என்பதையும் அவர் செயல்பட்ட சூழ்நிலைகளையும் அவருக்கு நினைவூட்டுவது பொறுத்தமாக இருக்கும். எவ்வாறு கடும் போக்கு சிங்கள-பௌத்த தேசியவாதிகளின் கடுமையான எதிர்ப்பின் மத்தியில் ஸப்ரி நியமிக்கப்பட்டாரோ அதைப் போலவே, பதியுத்தீன் மஹ்மூத் தனது அரசியல் வாழ்க்கையின் பிற்கால கட்டங்களில் அமைச்சவையிலும் வெளியிலும் இதேபோன்ற சூழலை எதிர்கொண்டார். மேலும், அலி ஸப்ரிக்கு பின்னால் கோத்தாபய உறுதியாக இருப்பது போல் சிரிமாவோ அம்மையார் பதியுத்தீன் மஹ்மூத் அவர்களுக்கு ஆதரவாக இருந்தார்.

இருப்பினும், 1970களை விட, 2020 மற்றும் அதற்குப் பின்னரான காலப்பகுதி அடிப்படையில் வேறுபட்டவையாக இருந்தன. சிங்கள மற்றும் தமிழ் ஆகிய இரு சமூகத்திலுமிருந்த தேசியவாத சக்திகள் சிரிமாவோ அம்மையாரின் ஆதரவைப் பெற்ற பதியுத்தீன் மஹ்மூதைத் தாக்க முஸ்லிம் பழமைவாத சக்திகளுடன் கைகோர்த்த போதிலும் அன்றைய தேசியவாத சக்திகள் குறிப்பாக பௌத்த தீவிரவாத சக்திகள், அவர்களின் தற்போதைய அவதாரங்களைப்போல அத்துனை கொடூரமானதாகவும் வன்முறை சார்ந்ததாகவும் இருக்கவில்லை.

பௌத்த தேசியவாதத்தின் தன்மையின் இந்த ஆக்கிரமிப்புரீதியான உருமாற்றம்தான் அலி ஸப்ரியின் அமைச்சர் பதவிக்கு சவாலாக அமைவதோடு தனது சமூகத்திற்கான சேவை செய்யும் அவரது ஆற்றலையும் வெகுவாகப் பாதிக்கிறது.
பதியுத்தீன் மஹ்மூதைப் பொறுத்தவரை, அவர் அடிப்படையில் ஒரு தேசாபிமானியாகவும் தொலைநோக்குள்ளவராகவும் இருந்தார். விட்டுக்கொடுப்பில்லாத தேசாபிமானியாகவும், முற்போக்கான மற்றும் நவீனத்துவத்தின் தீவிர ஆதரவாளராகவும் தனது சொந்த அந்தஸ்தை விட்டுக் கொடுக்காது பல மட்டங்களில் தனது சொந்த சமூகத்திற்கு அவரால் செய்ய முடிந்தது. அவர் ஒரு அமைச்சராகவும் சமூகத் தலைவராகவும் ஆற்றிய பணிகளை ஒரு சில வார்த்தைகளால் அல்லது பத்திகளால் விவரித்துவிட முடியாது. ஆயினும்கூட, அவரது பன்னிரண்டு ஆண்டு அமைச்சராகப் பணியாற்றிய வரலாற்றிலிருந்து ஓரிரு மைல்கற்கள் அவர் விரும்பியதை எவ்வளவு தந்திரோபாயமாக அடைந்தார் என்பதை வெளிப்படுத்துகிறது.

கல்வி அமைச்சராக, தனியார் பாடசாலைகளை தேசியமயமாக்குவதற்கான நடவடிக்கைகளை அவர் தனியாக பொறுப்பேற்றதோடு சுகாதார அமைச்சராக அரச மருத்துவர்களால் மேற்கொள்ளப்பபட்ட தனியார் மருத்துவ சேவைகளை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை அச்சமின்றி செயல்படுத்தினார். இவை பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் கீழ் மாற்றப்பட்டனவாயினும், இவற்றையும் சர்ச்சைக்குரிய ஏனைய நடவடிக்கைகளையும் குறிப்பாக கல்வி தொடர்பான விடயங்களை செயல்படுத்துவதில், பதியுத்தீன் மஹ்மூத் தனது சொந்த சமூகத்தின் முழு ஆதரவைக் கொண்டிருக்கவில்லை.

கொழும்பு ஸாஹிரா கல்லூரியைக் கையேற்பதற்கான நீதிமன்றப் போராட்டங்கள் அவரது சமூகத்தின் எதிர்ப்பை விளக்குகிறது. முஸ்லிம் பாடசாலை பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இசை மற்றும் நடனம் அறிமுகப்படுத்தப்பட்டமை அவர் எதிர்கொண்ட மற்றொரு பிரச்சினையாகும். இது அவருக்கு அனைத்து பழமைவாத முஸ்லிம் சக்திகளின் கோபத்தை சம்பாதித்துக் கொடுத்தது. அந்த நேரத்தில் பிற்காலத்தில் ஒரு முஸ்லிம் அரசியல் கட்சியைத் தோற்றுவித்த, வளர்ந்து வரும் முஸ்லிம் தலைவர்களில் ஒருவர் கூட, முல்லாக்களுடன் கைகோர்த்து அமைச்சரைக் கண்டித்தார். இதேபோல், தமிழ் சமூகமும் ஒருபோதும் பதியுத்தீன் மஹ்மூதை ஆதரிக்கவில்லை, பல்கலைக்கழக நுழைவுக்கான தரப்படுத்தல் திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது, குறிப்பாக வட பகுதி தமிழ் சமூகத்தின் பரம எதிரியாக மாறினார்.
எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு முஸ்லிம் தொலைநோக்கு பார்வையாளரான பதியுத்தீன் மஹ்மூத் தனது மக்களை ஒரு 'வணிக சமூகம்' என்ற நிலையை மாற்ற விரும்பினார். அவர் தனது மக்களை தேசிய மட்டத்தில் நிகழும் மாற்றங்களுக்கு ஏற்ப வேறு திசையில் வழிநடத்த விரும்பினார். இதனை மனதிற்கொண்டு 1972 ஆம் ஆண்டு அவரது கொழும்பு இல்லத்தில் முக்கிய முஸ்லிம் தலைவர்களை பிற்பகல் தேநீர் விருந்தொன்றுக்கு அழைத்து, பிற்போக்குவாதிகளுடன் இணைந்து தனது அரசாங்கத்தின் பொருளாதார சீர்திருத்தங்களை எதிர்ப்பதில் உள்ள ஆபத்துகளை உணர்த்தி எச்சரித்தார். பொருளாதார மீட்சிக்கான பிற வழிகளை ஆராயுமாறு தலைவர்களைத் தூண்டினார். அவரும் கல்வியை ஒரு வழியாகத் தேர்ந்தெடுத்து, அதன் மூலம் முஸ்லிம் சமூகத்தை அறிஞர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தொழில் வல்லுநர்கள் அடங்கிய ஒரு வகுப்பினராக உருவாக்க விரும்பினார். இன்றைய முஸ்லிம் மகா வித்யாலயங்கள் மற்றும் ஒரு முஸ்லிம் புத்திஜீவிகளின் தோற்றம் ஆகியவை பதியுத்தீன் மஹ்மூத் அவர்களின் தொலைநோக்கின் அமைதியான சான்றுகள் எனலாம். இதையெல்லாம் செய்வதில், அவர் தனது கட்சித் தலைவரான சிரிமாவோ அம்மையாரின் பூரண நம்பிக்கையைப் பெற்றிருந்தார்.

பதியுத்தீன் மஹ்மூத் அவர்களின்; பிரதான கவலையாக இருந்தது பெரும்பான்மை சமூகத்தின் எதிர்ப்பைப் பற்றியது அல்ல. அவருடைய பிரதமரின் ஆதரவுடன் அவற்றை அவரால் சமாளிக்க முடிந்தது, ஆனால் தனது சொந்த சமூகத்திலிருந்து வந்த எதிர்ப்பைப் பற்றியே அவர் கவலை கொண்டார். அதனை சமாளிப்பதற்காகவே அவர் இஸ்லாமிய சோஸலிச முன்னணியை (Islamic Socialist Front) உருவாக்கினார், அதன் பின்னால் முஸ்லிம் ஆசிரியர்கள், மாணவர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பொதுவாக முஸ்லிம் இளைஞர்களை அணிதிரட்டினார். இஸ்லாமிய சோஸலிச முன்னணியின் எழுச்சி, ஐ.தே.க.வின் முக்கியஸ்தர்களில் ஒருவரான எம். எச். முகமதுவின் கீழ், மார்க்சிச எதிர்ப்பு முன்னணியை உருவாக்க தூண்டியது. அதன் பின்னால் அனைத்து மத பழமைவாதிகளும் திரண்டனர். அலி ஸப்ரியின் தேசிய முஸ்லிம் கூட்டமைப்பு (National Muslim Collective Forum )இஸ்லாமிய சோஸலிச முன்னணியின் புதிய பதிப்பா? என்பதை வரலாறு தீர்மானிக்கட்டும்.

சுருக்கமாக, கோத்தாபயவின் அலி ஸப்ரி ஆற்றல் மிக்கவர், புத்திசாலி, தொழில்சார் வல்லுர் மற்றும் சிரிமாவோ அம்மையாரின் பதியுத்தீன் மஹ்மூதைப் போன்று, அவர் 'கட்டுப்பாடான நல்லொழுக்கமுள்ள' சமுதாயத்தைப் பற்றிய கோத்தாபயவின் சொந்த தொலைநோக்கிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முஸ்லிம் சமூகத்தை ஒரு புதிய திசையில் இழுக்க விரும்புகிறார். ஆனாலும், அவர் எதிர்கொள்ளும் சவால்கள் வலிமைமிக்கவை. தீவிர எதிர்ப்பைக் காட்டும் சிங்கள-பௌத்த இன-தேசியவாதம் மற்றும் இஸ்லாமிய பழமைவாதம் அவற்றில் இரண்டாகும், இதற்கு மேலதிகமாக தமிழ் சமூகத்துடனான நல்லிணக்க பிரச்சினையும் உள்ளது. வடக்கு மற்றும் கிழக்கில் பொருளாதார வளர்ச்சியே நல்லிணக்கத்திற்கான ஒரே வழி என்று கோத்தாபய நம்புகிறார். இது குதிரைக்கு முன்னால் வண்டியைக் கட்டுவது போல சிக்கலானதாகவே இருக்கும்.

கோத்தாபயவுக்கும் தமிழ் சமூகத்திற்கும் இடையிலான ஒரு பாலமாக அலி ஸப்ரியால் இருக்க முடியுமா? அமைச்சரவையில் உள்ள ஒரே முஸ்லிம் அமைச்சர் என்பதால், அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக அவரது செயல்திறனைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும், மேலும் அவர் சிரிமாவோ அம்மையாரின் பதியுத்தீன் மஹ்மூதுடன்; பொருந்தி வருவாரா என்றும் பார்க்கலாம். பதியுத்தீன் மஹ்மூத் தனது சமூகத்தின் நிலையை முன்னேற்றுவதற்காக எவ்வளவோ செய்தும் முடிவில் 1977 ஆம் ஆண்டு அவர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தபோது சமூகம் அவரை நிராகரித்தது. முஸ்லிம்களின் நன்றியுணர்வு பற்றிய இந்த உண்மையை அலி ஸப்ரி நன்கு அறிந்திருக்க வேண்டியது அவசியம்.
*Dr. Ameer Ali, School of Business and Governance, Murdoch University, Western Australia
Translation:
Razeen Mohamed

Post a Comment

1 Comments