Ticker

6/recent/ticker-posts

மொட்டுக் கட்சியின் தீவிர இனவாத பிரசாரத்தை முறியடிக்க ஐதேக தலைமை முன்வராததும் தோல்விக்கு காரணம் | முஜீபுர் றஹ்மான்.

சிறுபான்மை மக்கள் இன ரீதியாக சிந்தித்து ஒருபோதும்  வாக்களிக்கவில்லை.  அவர்கள் கொள்கைக்கு முக்கியத்துவம் அளித்து தமது வாக்குகளை பிரயோகித்தனர் என்பதை  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச புரிந்து கொள்ள வேண்டுமென கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய கொழும்பு தொகுதியில் பிரதான அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

அத்துடன் இனவாத ரீதியிலான பொதுஜன பெரமுனவின் போலிப் பிரசாரங்களை முறியடிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் சிங்கள தலைவர்கள் முயற்சிக்காததன் காரணமாகவே இத்தகைய  தோல்வியை சந்திக்க நேரிட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தேர்தல் முடிவுகள் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

70%  வீதமான பெரும்பான்மையினரின் வாக்குகளுடன் குறிப்பிட்ட தொகை சிறுபான்மை வாக்குகள் அவருக்குக் கிடைத்தது.  இதன் காரணமாகவே அவர்  ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.  ஆனால்  அவரின் பதவியேற்பு நிகழ்வின் போது சிறுபான்மையினரின் ஆதரவு கிடைக்கவில்லை என்று அவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை மக்கள் ஒருபோதும் இனரீதியாக வாக்குகளை அளிக்கவில்லை. இந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்களும்,  முஸ்லிம்களும் போட்டியிட்டார்கள். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளருக்கோ,  தமிழ் வேட்பாளருக்கோ முஸ்லிம்களோ, தமிழர்களோ வாக்களிக்க வில்லை.  மாறாக ஒரு சிங்கள தலைவருக்கு அவர்கள் வாக்களித்துள்ளனர்.

இந்நாட்டிலுள்ள சிறுபான்மை சமூகங்கள்  பெரும்பான்மையினர் உடன் இணைந்து வாழவே விரும்புகின்றனர்.  இந்த ஜனாதிபதித் தேர்தலில் இதனை மீண்டும் தெளிவு படுத்தி இருக்கின்றனர்.  வடக்கு கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் வாழும் சிறுபான்மை சமூகங்கள்  சிங்கள-பௌத்த இனத்தவரான  சஜித் பிரேமதாசவுக்கு பெருமளவில் தமது வாக்குகளை வாரி வழங்கியள்ளனர்.

சஜித்துக்கு அளிக்கப்பட்ட வாக்குகளை  சிலர் இனரீதியில் வாக்குகள் வழங்கப்பட்டு  இருப்பதாக குறிப்பிடுகின்றனர்.  எனினும் இது தர்க்க ரீதியில் முரண்படும் ஒரு கூற்றாகும்.  சிறுபான்மை சமூகங்கள்  வாக்களித்தது ஒரு சிங்கள பௌத்த இனத்தைச் சேர்ந்தவருக்கு  என்பதை இவர்கள்  புரிந்து கொள்ள வேண்டும்.

கோத்தாபய தரப்பினர் கடந்த உயிர்த்த ஞாயிறு  தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம்கள் மீது வெறுப்பு பிரச்சாரத்தை திட்டமிட்டு முன்னெடுத்தனா். இதனால் அவர்களிடம் இருந்து முஸ்லிம் சமூகம் ஒதுங்கி நின்றது. அது போல கடந்த கால கசப்பான சம்பவங்களால் தமிழர்களும் ஆதரவு அளிக்க முன்வரவில்லை. இவ்வாறு பொதுஜன பெரமுனவின் கொள்கைகளை தமிழர்களும் முஸ்லிம்களும் ஏற்றுக் கொள்ளாத நிலையில் அவர்கள் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்தனர். பௌத்த சிங்கள மக்கள் மத்தியில் பொது ஜன பெரமுனவின் சிறுபான்மையினருக்கு எதிரான மோசமான முறையில் பிரசாரங்களை முன்னெடுத்த உயிர்த்த  ஞாயிறு தாக்குதலையடுத்து இது மேலும் தீவிரமடைந்தது.  டாக்டர் ஷாபி விவகாரத்தை பூதாகரமாக்கி அதில் அரசியல் லாபம் அடைந்தனர்.  இந்த இனவாத பிரசாரத்தை  எதிர்கொள்வதற்கோ, முறியடிப்பதற்கொ   ஐக்கிய தேசிய கட்சியில் உள்ள சிங்கள தலைவர்கள்  முன்வரவில்லை. 

ஐதேக தலைவா்கள் இனவாதத்தை தோற்கடிக்க பின்வாங்கினர், இதனாலேயே சிங்கள மக்கள் ஒரு பக்கத்துக்கு தள்ளப்பட்டனர். இதனை ஓர் ஆரோக்கியமான நகர்வாக கருத முடியாது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச சிறுபான்மையினரை தூரப்படுத்தித்திப் பார்க்காமல் அவர்களின் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் இதுவே இந்நாட்டில் எதிர்காலத்தில் ஐக்கியத்தை ஏற்படுத்த வழிவகுக்கும் என்றும் தெரிவித்தார்

Post a Comment

0 Comments