Ticker

6/recent/ticker-posts

தேர்தல் காலப் பகுதியில் குறைந்தளவு வன்முறை ; ஒத்துழைப்பு வழங்கிய சகலருக்கும் பொலிஸ் திணைக்களம் நன்றி தெரிவிப்பு

( ஐ. ஏ. காதிர் கான் )

மிகவும் அமைதியான தேர்தலொன்றை நடாத்த ஒத்துழைப்பு வழங்கிய அனைத்துத் தரப்பினருக்கும் பொலிஸ் திணைக்களம் நன்றி தெரிவித்துள்ளது. தேர்தல் காலப்பகுதியில் 141 பேர் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டதாகவும், 128 வன்முறைச் சம்பவங்களும் 169 சட்டவிரோத செயற்பாடுகளும் பதிவானதாகவும் பொலிஸ் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
   கொழும்பில் உள்ள பொலிஸ் தலைமையகத்தில் நேற்று முன் தினம்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

    மிகவும் அமைதியான  தேர்தலொன்றை நடத்த முடிந்துள்ளது. வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டது முதல் தேர்தல் வரையும், தேர்தல் தினத்தன்றும் மற்றும் தேர்தலுக்குப் பின்னரும் எவ்வித பாரிய அசம்பாவிதங்களும் வன்முறைச் சம்பவங்களும் பதிவாகவில்லை.    மிகவும் அமைதியான சூழலே கடைப்பிடிக்கப்பட்டது. அதற்காக பொலிஸாருக்கு ஒத்துழைப்புக்களை வழங்கிய அனைத்துத் துறையினருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

   மேற்படி காலப்பகுதியில் 128 வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 169 சட்டவிரோதமான செயற்பாடுகளும் பதிவாகியுள்ளன.

   குறிப்பாக, போஸ்டர் ஒட்டுதல், தேர்தல் அறிக்கைகளைப் பகிர்தல் மற்றும் அனுமதிப் பத்திரமின்றி ஒலி பெருக்கிகள் மூலம் பிரசாரத்தை முன்னெடுத்தமை உட்பட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
  வேட்புமனுத் தாக்குதல் செய்யப்பட்டு தேர்தல் முடிவடைந்த காலப்பகுதி வரை 141 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

   சில முறைப்பாடுகள் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சில முறைப்பாடுகள் தொடர்பில் சட்டமா அதிபர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. சிறிய குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பிடும்போது, இம்முறை மிகவும் அமைதியான தேர்தலாகவும் வன்முறைகள் குறைந்த தேர்தலாகவும் அமைந்துள்ளது. 2015 இல் 579 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்ததுடன், 384 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
   இவ்வாறு அமைதியான தேர்தலை நடத்த, குறிப்பாக ஊடகங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. சட்ட திட்டங்கள் மற்றும் எமது தகவல்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்கள் பிரதான பங்களிப்பை வழங்கின என்றும் அவர் இதன்போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments