Ticker

6/recent/ticker-posts

உலமா சபைக்கு உஸ்தாத் மன்சூரின் பதில்!






உலமா  சபைக்கும்  உஸ்தாத் மன்சூருக்கும் இடையில் அண்மைக்காலமாக கருத்து முரண்பாடுகள் அதிகரித்து வருகின்றன.  முஸ்லிம் தனியார் சட்ட சீர்த்திருத்தம் முதல்  மத்ஹப் வேறுபாடுகள், சமகால முஸ்லிம் சமூகம் எதிா்கொள்ளும் பிரச்சினைகள்  தொடா்பான கருத்துக்கள் வரை  முரண்பாடுகள் நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றன. 

வளர்ந்து வரும் உலமா சபையுடனான இந்த கருத்து முரண்பாடு தொடா்பாக  உஸ்தாத் மன்சூர் வெளியிட்டுள்ள கருத்தை இங்கு தருகிறோம்.
கடந்த நவம்பர் மாதம் 23-11-2018 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அஸருக்குப் பிறகு அக்குறணை ஜாமிஆ ரஹ்மானிய்யா மத்ரஸாவில் M.A.M Mansoor ஆகிய என்னைப் பற்றி 'உஸ்தாத் மன்சூரின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்' எனும் தலைப்பில் அக்குறணை ஜம்மியத்துல் உலமா சபை விளக்கக் கூட்டம் நடாத்தியிருக்கின்றது. இக்கூட்டம் உலமாக்களுக்கு மாத்திரம் என்பதாகவே இடம் பெற்றிருக்கிறது.
அவர்கள் சர்ச்சைக்குறிய கருத்துக்கள் எனக் குறிப்பிட்டவை ஷாபி மத்ஹபுக்கு உள்ளே இருந்தும், அதற்கு வெளியே இருந்தும் அஹ்லுஸ் சுன்னா, வல் ஜமாத்திற்குட்பட்ட விதத்தில் நான் முன்வைத்தக் கருத்துக்களாகும். அவை குர்ஆன், சுன்னா மற்றும் இமாம்களின் கருத்துக்களுக்கு, இஸ்லாமிய அகீதாவிற்கு எந்த விதத்திலும் முரண்பட்டவை அல்ல. இருப்பினும் அவை குர்ஆன், சுன்னா மற்றும் இமாம்களின் கருத்துக்களுக்கு முரணான கருத்துக்களாகச் சித்தரித்து நான் இஸ்லாத்திற்கு முரணான கருத்துக்களை சொல்வதாக என் மீது இக்கூட்டத்தின் போது குற்றம் சுமத்தியுள்ளனர்.
அக்குரணை உலமா சபையின் இந்த கூட்டத்தை பற்றி பேசுவதற்கு முன்னர் கடந்த 2017 ஏப்ரல் மாதம் கடுகஸ்தோட்ட மஹாவலி ரீச் (Mahaweli Reach) ஹோட்டலில் நடந்த கூட்டத்தை பற்றி சற்று விளக்குவது பொருத்தம் என்று கருதுகிறேன்.
மஹாவலி ரீச் ஹோட்டலில் இடம்பெற்ற கூட்டத்தை United Akurana எனும் அமைப்பு ஏற்பாடு செய்து இருந்தது. அதில் பின்வரும் சகோதரர்கள் நடுவர்களாக இருந்தனர்.
1. கலாநிதி ஷேய்க் மஸாஹிர்
2. சகோதரர் இர்பான் காதர்- Helping Hands
3. வைத்தியர் சரூக் ஷஹாப்தீன்.
4. வைத்தியர் பைஸல்.
5. விரிவுரையாளர் நவாஸ் - தென்கிழக்குப் பல்கலைக்கழகம்.
6. மெளலவி சரூக் - முன்னால் அக்குறனை ஜம்மிய்யதுல் உலமா தலைவர்.
7. சகோதரர் ரிஸா - Emirates
அக்குரணை உலமா சபைக்கும் எனக்கும் இருக்கும் கருத்து முரண்பாடுகளை இருதரப்பினரும் அமர்ந்து பேசித் தீர்த்துக் கொள்வதே கூட்ட ஏற்பாட்டாளர்களின் நோக்கமாக இருந்தது.
குறித்த கூட்டத்திலும் மேற்குறித்த சர்ச்சைகளே (உதாரணமாக பெண்கள் முகத்தை திறக்கலாம் என்ற கருத்து, அரபு மத்ரசாக்களில் கற்பிக்கப்படும் சட்டப்புத்தகமான பத்ஹுல் முஈன் போன்ற புத்தகங்கள் மீதான விமர்சனம்) எனக்கு எதிரான குற்றச்சாட்டுகளாக உலமா சபையினர் முன் வைத்தனர்.
[1] இதற்கான எனது பதில் உலமா சபையினரின் மறுப்புகளை எழுத்து மூலமாக, அல்லது ஒலி வடிவில் தந்தால் நான் அதனை எந்த மாற்றமும் இன்றி எனது இணைய தளத்திலேயே வெளியிடுகிறேன் என்பதாக இருந்தது. அவ்வாறு பதிவிடுவதன் மூலம் மக்கள் இரண்டு பக்க ஆதாரங்களையும் பார்த்து எது சரி, எது பிழை என்பதை மக்களே முடிவு செய்து கொள்ளட்டும் என்பதே நோக்கமாக இருந்தது. ஆனால் இதனை உலமா சபை ஏற்றுக் கொள்ளவில்லை.
[2] என் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்க மூன்று மாத காலம் அவகாசம் கேட்க்கப்பட்டது ஆனால் ஒரு தெளிவான முடிவு அதிலும் எட்டப்படவில்லை.
[3] மத்ரஸாவில் கற்பிக்கப்படும் நூல்கள் [உதாரணமாக பத்ஹுல் முஈன்] குறித்த விமர்சனங்கள் எதையும் மக்கள் பொது மன்றங்களில் இதன் பிறகு நான் முன் வைக்க மாட்டேன். இந்த இடத்தில் இந்த பிரச்சினையை முடித்துக் கொள்ளலாம் என்று கூறினேன்.
மூன்றாவதாக முன்வைத்த இந்த முடிவுக்கு உலமா சபை ஒத்துக் கொண்டது.
மஹாவலி ரிச் ஹோட்டல் கூட்டத்தில் இருந்து இதுவரையிலும் நான் ஒப்பந்தப்படி மத்ரஸாக்களின் பாடத் திட்டங்கள் குறித்தோ, உலமாக்கள் குறித்தோ எந்த விமர்சனங்களையும் எங்குமே முன் வைத்திடவில்லை.
பூரணமாக ஒப்பந்தத்தை பேணி நடந்து வந்திருக்கிறேன்.
இவ்விடத்தில் இன்னுமொரு உண்மையையும் சொல்லவேண்டும். அதாவது அக்கூட்டத்தில் ஷாபி மத்ஹ்புக்கு வெளியிலிருந்து கருத்துக்கள் சொல்லக்கூடாது என்றும், சட்டம் தொடர்பாக எக்கருத்துக்களைச் சொல்வதாக இருந்தாலும் ஜம்மிய்யதுல் உலமாவினூடாகவே சொல்ல வேண்டும் என்று என்னிடம் கூறினார்கள் ஆனால் இதனை நான் ஒத்துக்கொள்ளவில்லை.
ஷாபி மத்ஹபுக்கு வெளியிலிருந்து அடுத்த மத்ஹபுகள், அறிஞர்களது கருத்துக்களை நிலைமை. சந்தர்ப்பம், ஆதாரபூர்வத்தன்மை என்பற்றைக் கவனித்து முன்வைக்கவேண்டி வரும் பட்ச்சத்தில் அவற்றை கண்டிப்பாக முன்வைப்பேன், ஒரு போதும் ஷாபி மத்ஹபுடன் மட்டும் சுருங்கியிருக்க மாட்டேன் என அன்று அவர்களிடம் தெளிவாகச் கூறினேன்.
ஆனால் இப்பொழுது அக்குறணை உலமா சபை தன்னிச்சையாக அந்த ஒப்பந்தத்தை மீறி இருக்கிறது.
நான் அரபு மத்ரஸாக்களின் பாட நூல்கள் பற்றியும், அவற்றின் இமாம்கள் பற்றியும் தரக்குறைவாகப் பேச மாட்டேன் என்று கூறினேன். ஆகவே உலமா சபையும் என்னைப் பற்றிய குற்றச்சாட்டுக்களை மீண்டும் மீண்டும் பேசாமல் இருப்பதுதானே முறை...?
ஆனால் உலமா சபை இந்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது.
சமூகப்பிளவுகள், கடும் சர்ச்சைகளைத் தவிர்க்கும் நோக்கில் நான் தொடர்ந்தும் பேசாமலே இருந்தேன். எனினும் நிலமை கடுமையாக்கப் பட்டிருப்பதால் இனி பதில்களை அளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உட்படுகின்றேன். எனவே இன்ஷா அல்லாஹ் வெகு விரைவில் என்மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுக்களுக்கும் அல்குர்ஆன் திறந்த கல்லூரிஊடாக பதிலளிக்கப்படும்.
மனிதன் என்ற ரீதியில் நான் சில போது தவறிழைத்திருக்கலாம். அவ்வாறு என்மீது தவறு உள்ளது என்று நியாயமாக நிரூபிக்கப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்வதற்கு ஒரு போதும் தயங்க மாட்டேன் என்றும் நான் உறுதியாகச் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.
அல்லாஹ் எம்மை நன்மைகளின் பால் இணைத்து வைக்கட்டும்..!
-உஸ்தாத் மன்சூர்

Post a Comment

1 Comments

  1. I think this type of disputes and debate is not needed at all...
    The crudidbiltiy and reputation of Ustaz is well known among academic and schoalrs ...to read him; to understnad him they need to have some level of deep knowledge ..
    This is nothing useless argument..
    It is better for Usthaz to leave it ..

    ReplyDelete