Ticker

6/recent/ticker-posts

‘மரண தண்டனை நிறைவேற்றம் கிடையாது’ இலங்கையின் நிலைப்பாடு இதுவே: விஜயதாச ராஜபக்ஷ

நீதிமன்றங்களினூடு பாரிய குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகின்ற போதிலும், மரணத்தை தண்டனையாக நிறைவேற்றும் திட்டங்கள் தற்போது இலங்கை அரசாங்கத்திடம் இல்லை என்று நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 
ஐக்கிய நாடுகளில் மரண தண்டனையை தற்காலிகமாக இடைநிறுத்துவது தொடர்பான பிரேரணைக்கு இவ்வருடம் ஆதரவாக வாக்களிப்பதற்கே இலங்கை தீர்மானித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோக குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்கப்பட வேண்டும் என கொண்டு வரப்பட்ட சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “103க்கும் அதிகமான நாடுகள் மரணதண்டனையை நீக்கியுள்ளன. மரண தண்டனை விதிக்கக்கூடாது என்பதே அநேக நாடுகளின் நிலைப்பாடாக இருக்கிறது. பழிவாங்கும் நோக்கத்துடனன்றி திருத்துவதற்காகவே தண்டனை வழங்கப்படுகிறது. இலங்கை போன்ற நாடுகளில் மரண தண்டனை உள்ள போதும் செயற்படுத்தப்படுவதில்லை.
2007, 2008 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் மரணதண்டனையை தற்காலிகமாக நிறுத்தும் யோசனை ஐக்கிய நாடுகளில் முன்வைக்கப்பட்டது. இலங்கையும் இதற்கு ஆதரவாக வாக்களித்தது. 2015இல் இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டால் மரண தண்டனையை நிறைவேற்றுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் பிரேரணைக்கு ஆதரவாக இலங்கை வாக்களிக்கவுள்ளது.
இந்தியாவும் மரணதண்டனையை அகற்றுவது குறித்து ஆராய்ந்து வருகிறது. சீன அரசாங்கமும் மரணதண்டனைக்கான குற்றங்களை குறைப்பது குறித்து ஆராய்கிறது. இலங்கை சர்வதேச மட்டத்தில் மரண தண்டனையை அமுல்படுத்தாதிருக்கும் நிலைப்பாட்டையே முன்வைத்துள்ளது. அண்மைக்காலமாக இடம்பெற்ற சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களையடுத்தே மரண தண்டனை குறித்து அதிகளவில் பேசப்படுகிறது.” என்றுள்ளார்.
4tamilmedia.com

Post a Comment

0 Comments