Ticker

6/recent/ticker-posts

சளியால் சங்கடமா? கருந்துளசியில் தீர்வு!

உடலுக்கு இயற்கையாக வரும் நோய்களை விட, செயற்கையாக வரும் நோய்கள் இன்று அதிகரித்துள்ளன. அதற்கு நாம் சாப்பிடும் உணவும், வாழ்வியல் முறையும் முக்கிய காரணமாக இருக்கிறது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை, ஆட்டிப்படைக்கும் நோய் எது   என்றால், அது சளித்தொல்லை மட்டுமே. சனி விட்டாலும், சளி விடாது என்று கிராமங்களில் பழமொழி  சொல்வதுண்டு. 
சளியை பொருத்த வரை, எந்த மருந்து சாப்பிட்டாலும் அது தற்காலிக நிவாரணம்தான். முழுமையான நிவாரணம் கிடைப்பதில்லை. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் போது, சிகிச்சை எடுத்துக் கொள்ளாமலேயே நோய் நீங்கி விடும். ஆனால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் போது, சளி பிடித்தால் விடாது. சளியை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் காசநோய், நிமோனியா போன்ற பாதிப்பு உண்டாகிவிடும். சளி உண்டாக பாக்டீரியா, பூஞ்சை கிருமிகளினால் உண்டாகும் ஒவ்வாமை முக்கிய காரணமாகிறது. மருந்துகளுக்கு கட்டுப்பட்டாலும், வைரஸ் கிருமிகளால் ஏற்பட்ட சளி, மருந்துகளுக்கு கட்டுப்படுவதில்லை. 

நுரையீரலில் வறட்சி ஏற்படாமல் இருக்க, உடலில் இயற்கையாக உண்டாகும் சளி, அளவுக்கு மீறி, அதிகரித்து வேதனையை உண்டாக்குகிறது. பெருகிய சளியை வெளியேற்றி, மீண்டும் ஒவ்வாமையினால் சளி உண்டாகாமல் தடுக்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும். 

சளி, இயற்கையாக கிடைக்கும் மூலிகை மருந்துகளுக்கு கட்டுப்படும். மஞ்சள், மிளகு, சிற்றரத்தை, பூண்டு, மல்லி, சிறிய வெங்காயம் ஆகியன நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் இயற்கை உணவுகள். இவற்றை அன்றாட உணவில் அதிகம் சேர்த்தால், சளியை கட்டுப்படுத்தலாம். சளியை கட்டுப்படுத்தி முழுமையாக குணப்படுத்தும் இயற்கை மருந்தாக, கருந்துளசி பயன்படுகிறது. இவை சளித் தொல்லையை நீக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, பால், தயிர் போன்ற உணவுகளையும் நன்கு சாப்பிடும் அளவுக்கு, வலு தரும் மூலிகையாக கருந்துளசி பயன்படுகிறது. 

கருந்துளசியின் இலைகள் கபத்தை நீக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. சளிக்கு இரண்டு அல்லது மூன்று கருந்துளசி இலைகளை பசும்பாலில் போட்டு காய்ச்சி குடித்தால், பாலின் ஒவ்வாமையால் ஏற்படும் கபம் நீங்கும். இதை நீரில் போட்டு, கொதிக்கவைத்து ஆவி பிடித்தால், சைனஸ் தொல்லையால் ஏற்பட்ட சளி நீங்கும். அடிக்கடி சளி பிடிக்காமல் இருக்க, ஐந்து  அல்லது பத்து கருந்துளசி இலைகளை, ஒரு லிட்டர் நீரில் ஊறவைத்து அந்த நீரை அருந்தி, பின் இலைகளை மென்று சாப்பிட வேண்டும். 

தினமும் அதிகாலையில், இரண்டு முதல் நான்கு கருந்துளசி இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், ஒவ்வாமை மற்றும் கிருமித் தொற்றினால் ஏற்படும் சளி நீங்கும். 
dinamalar.com

Post a Comment

0 Comments