Ticker

6/recent/ticker-posts

பணிப்பெண்ணின் கையை துண்டித்த சவுதி எஜமான்!

சவுதி அரேபியாவில் இந்தியா தமிழ் நாட்டுப் பெண் ஒருவர் முதலாளியால் கை வெட்டப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக அவரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது சகோதரி கோரிக்கை விடுத்துள்ளார். வேலூர் மாவட்டம் மூங்கிலேறி கிராமத்தை சேர்ந்தவர் கஸ்தூரி முனிரத்தினம் (55). சமீபத்தில் இவர் வீட்டு வேலைக்காக சவுதி அரேபியாவுக்கு சென்றார். அங்கு உள்ளூர் அதிகாரிகள் வெளிநாட்டு ஊழியர்களின் நிலை குறித்து வீடுவீடாக சென்று ஆய்வு நடத்தியுள்ளனர். அப்போது தனது முதலாளி தன்னை சித்ரவதை செய்வதாக அவர்களிடம் கஸ்தூரி முறையிட்டுள்ளார்.


இதனால் ஆத்திரமடைந்த முதலாளி, கஸ்தூரியின் வலதுகையை வெட்டியுள்ளார். தற்போது ஆபத்தான நிலையில் கஸ்தூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்த கஸ்தூரியின் உறவினர்கள் அவரை தமிழகத்திற்கு மீட்டுக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்திய மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக கனிமொழி எம்.பி.யும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில், சென்னையில் வசித்து வரும் கஸ்தூரியின் சகோதரி விஜயலட்சுமி இது குறித்து கூறுகையில், ‘என்னுடைய சகோதரி கஸ்தூரி 3 மாதத்துக்கு முன்பு தான் சவுதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்காக சென்றார். அங்கு அவருடைய முதலாளி தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார். 

மேலும் சாப்பாடு அளிக்காமல் பட்டினி போட்டுள்ளார். இதுபற்றி உள்ளூர் அதிகாரிகளிடம் கஸ்தூரி முறையிட்டார். இதனால் ஆத்திரமடைந்த முதலாளி, என்னுடைய சகோதரியின் வலது கையை வெட்டி உள்ளார். தற்போது அவர் ரியாத் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தகவல் அவரை வெளிநாட்டுக்கு அனுப்பிய ஏஜெண்டு மூலம் எங்களுக்கு தெரியவந்தது. எனவே என்னுடைய சகோதரி நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார். 

தமிழகப்பெண் சவுதியில் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் தனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘ரியாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் இந்த சம்பவம் குறித்து சவுதி வெளியுறவு அலுவலகம் மூலம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக பெண்ணின் கையை வெட்டியவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யவும், கடும் தண்டனை அளிக்கவும் இந்தியா வலியுறுத்தி உள்ளது' என்றார்.

Post a Comment

0 Comments