Ticker

6/recent/ticker-posts

கவிஞர் வைரமுத்து எழுதிய 40 சிறுகதைகளின் தொகுப்பு நூல் கருணாநிதி நாளை வெளியிடுகிறார்

கவிஞர் வைரமுத்து 10 மாதங்கள் எழுதிய 40 சிறுகதைகளின் தொகுப்பு நூலை கருணாநிதி நாளை (சனிக்கிழமை) வெளியிடுகிறார்.

கவிஞர் வைரமுத்து எழுதிய 40 சிறுகதைகளின் தொகுப்பு நூல் வெளியிட்டு விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நாளை மாலை 6 மணிக்கு நடக்கிறது.

விழாவில், தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்துகொண்டு, நூலின் முதல் பிரதியை வெளியிடுகிறார். அதனை நடிகர் கமல்ஹாசன் பெற்றுக்கொள்கிறார். டாக்டர் சுதா சேஷய்யன், பேராசிரியர் பர்வீன் சுல்தானா ஆகியோர் நூல் குறித்து திறனாய்வு உரையாற்றுகின்றனர். கவிஞர் வைரமுத்து ஏற்புரை ஆற்றுகிறார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை வெற்றி தமிழர் பேரவையினர் செய்து வருகின்றனர்.

கவிஞர் வைரமுத்து எழுதிய முதல் சிறுகதைகள் தொகுப்பு இதுவாகும். இந்த அனுபவம் குறித்து கவிஞர் வைரமுத்து கூறியதாவது:-

புதுமைப்பித்தன் இறந்த ஆண்டில்தான் நான் சிறுகதை எழுத வந்தேன் என்ற ஜெயகாந்தன் வாக்குமூலத்தை போல, ஜெயகாந்தன் வாழ்ந்த இறுதி ஆண்டில் தான் நான் சிறுகதை எழுத வந்தேன்.

என் முன்னோடியால் எழுதப்படாத மிச்சத்தையும், அவர்களால் வாழப்படாத வாழ்க்கையையும் என் சிறுகதைகளில் நான் கலைப்படுத்தி இருக்கிறேன்.

இது 10 மாதங்களில் எழுதப்பட்டது தான். ஆனால், இதை எழுதுவதற்கு காலம் என்னை 60 ஆண்டுகள் தயாரித்திருக்கிறது. இதில், புத்தரையும் எழுதி இருக்கிறேன். கசாப்பு கடைக் காரனையும் எழுதி இருக்கிறேன்.

வாழ்க்கை இரும்படித்துக் கொண்டிருக்கும்போது இலக்கியம் பூப்பறித்துக் கொண்டிருக்க முடியாது. அதனால் எரியும் பிரச்சினைகளும் எழுதப்பட்டுள்ளன. கவுரவக் கொலைகள் என்று தப்பாக உச்சரிக்கப்படும் காதல் கொலைகள் முதல் இலங்கை இனப்படுகொலை வரை எழுதி இருக்கிறேன்.

ஒவ்வொரு சிறுகதையையும் 10 முதல் 12 முறை திருத்தி இருக்கிறேன். வார்த்தைகளை தங்க நாணயம்போல செலவழித்து இருக்கிறேன். 

இவ்வாறு அவர் கூறினார்.

கவிஞர் வைரமுத்து எழுதி, கருணாநிதி வெளியிடும் 17-வது நூல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments