Ticker

6/recent/ticker-posts

தமிழிலும் தேசிய கீதம் பாடலாம்! ஜனாதிபதி நடவடிக்கை

இலங்கையின் தேசிய கீதத்தை தமிழில் பாட எந்தத் தடையும் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்து நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பவுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன. 

பாடசாலைகள் மற்றும் அனைத்து நிறுவனங்களிலும் 1951ம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து இலங்கையின் தேசிய கீதம் தமிழில் இசைக்கப்பட்டு வந்தது. 
எனினும் 2010ம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் தேசிய கீதத்தை தமிழில் இசைப்பதில் சர்ச்சை ஏற்பட்டது. 

இந்தநிலையில் இது குறித்து ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தேசிய நிறைவேற்று குழுவில் முன்வைத்த கேள்விக்கு அமைய ஜனாதிபதி இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். 

இது தொடர்பாக ஒரு சுற்றறிக்கை ஜனாதிபதி செயலகத்தால் அனுப்பி வைக்கப்படும் எனவும் தேசிய பாதுகாப்பு சபையிலும் இதுபற்றி அறிவிப்பேன் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக மனே கணேசன் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார். 

ஸ்ரீலங்கா மாதா என்ற சுதந்திர இலங்கையின் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் ஆனந்த சமரக்கோன் இயற்றி இருந்தார். 

பின்னர் ஸ்ரீ லங்கா தாயே.. என இதனை இலங்கைக் கவிஞர் எம்.நல்லதம்பி தமிழில் மொழி பெயர்த்தார். 

சிங்களப் பதிப்புக்கே அரசியல் அமைப்பில் அங்கீகாரம் இருந்த போதும், பல தசாப்தங்களாக இலங்கையின் தேசிய கீதம் இரு மொழிகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. 

இந்தநிலையில் 2009ம் ஆண்டு இலங்கையில் நிலவிய யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர், ஜாதிக ஹெல உறுமய போன்ற, தேசிய சுதந்திர முன்னணி போன்ற சிங்களக் கட்சிகள் தமிழில் தேசிய கீதம் பாடுவதை தடைசெய்ய வலியுறுத்தின. 

இதன்படி 2010ம் ஆண்டு டிசம்பர் 12ம் திகதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் உள்விவகார அமைச்சராக இருந்த ஜோன் செனவிரத்ன தமிழில் தேசிய கீதத்தைப் பாட அனுமதிக்க முடியாது என்ற வகையில், அமைச்சரவைப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்தார். 

இதன் பின்னர் தமிழில் தேசிய கீதத்தை இசைப்பதில் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டு வந்தன. 

அத்துடன் தமிழர் தரப்பில் தென்னாபிரிக்கா, கனடா போன்ற நாடுகளில் பல்வேறு மொழிகளில் தேசிய கீதம் இசைப்பதை மேற்கோள் காட்டி பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டும் வந்தன. 

இந்தநிலையில் கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலை அடுத்து புதிதாக ஆட்சியமைத்த மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இலங்கையின் புதிய அரசாங்கம் தற்போது தேசிய கீதத்தை தமிழில் இசைக்க அனுமதியளித்துள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, நிறைவேற்று அதிகாரத்தை முற்றாக நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். 

அரசியலமைப்புத் திருத்தம் தற்போது அவசியமான காரணியாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இன்று முற்பகல் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

தான் கடந்த காலங்களில் மேற்கொண்ட வௌிநாட்டு விஜயங்களின் போது, நாடு எதிர்நோக்கியுள்ள சவால்கள் பற்றி நன்கு உணர்ந்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார். 

விஷேடமாக குறித்த சவால்களுக்கு முகம்கொடுத்து முன்னோக்கி செல்வது மிக முக்கியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments