Ticker

6/recent/ticker-posts

கைதான மௌலவிக்கு மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியல்


 (பாறுக் ஷிஹான்)

மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பில் கைதான மௌலவியை மீண்டும்  14 நாட்கள்  விளக்கமறியலில்  எதிர்வரும் ஜனவரி  மாதம் 18 திகதி வரை வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு   வியாழக்கிழமை (04)  கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன்   முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் பொலிஸாரின்  சமர்ப்பணங்கள் மற்றும் பாதிக்கபட்ட தரப்பினர் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் உட்பட ஏனைய விடயங்களை ஆராய்ந்த நீதிவான் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.


இதன் போது பாதிக்கபட்ட சிறுவனின் குடும்பம் மற்றும் சாய்ந்தமருது மரைக்காயர் சபை, ஜம்யதுல் உலமா சபையின் சார்பில் ஆஜரான   சட்டத்தரணி ஷஃபி எச் இஸ்மாயில் இந்த வழக்குடன் நேரடியாக தொடர்புபட்ட சாட்சிகள் ஊடகங்களுக்கு கருத்துக்களை கூறுவதால் வழக்குத்தொடுப்பு தரப்பிற்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் விளக்கி கூறியதோடு  இவ்வாறான ஊடக  போட்டிகளால் சாட்சிகளின் நம்பகத்தன்மை வழக்கு நடவடிக்கையின் போது கேள்விக்கு உட்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால்  இவ்வழக்கு  முடியும் வரை இந்த வழக்குகளோடு தொடர்பற்ற நேரடி சாட்சிகள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதை தடை செய்யும் முகமாக ஒரு கட்டளையை தாக்குமாறு நீதிமன்றினை கோரியிருந்தார்.இதனை கருத்தில் கொண்ட நீதிவான் சாய்ந்தமருது பொலிஸாருக்கு இவ்விடயம் குறித்து பாதிக்கப்பட்டவர்களது முறைப்பாடுகளை பெற்று மன்றிற்கு அறிக்கை சமரப்பிக்க  நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் மனுதாரர் சார்பாக  சிரேஸ்ட சட்டத்தரணி எப்.எம்.ஏ அன்சார் மௌலானா சட்டத்தரணி ஷஃபி எச். இஸ்மாயில் சவுத் முஹமட் ஆஜராகி இருந்தனர்.சந்தேக நபர் சார்பாக சட்டத்தரணி  ஏ.எல்.எம். றிபாஸ்  பிரசன்னமாகி இருந்தார்.

குறித்த வழக்கினை சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்சுதீன்  நெறிப்படுத்துதலின் கீழ் நீதிமன்ற உத்தியோகத்தர் முபாறக் நெறிப்படுத்தி இருந்தார்.அத்துடன் இம்முறை  குறித்த வழக்கு ஆரம்பம் முதல் நிறைவடையும் வரை மரணமடைந்த சிறுவனின் குடும்பத்தினருடன்  சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசல் மற்றும்  ஜம்மியதுல் உலமா சபையினர் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

இதே வேளை இன்று சந்தேக நபரான மௌலவிக்கு மற்றுமொரு  மாணவனை கொடூரமாக  தாக்குதல் மேற்கொண்டு  காயப்படுத்திய சம்பவம் தொடர்பான   மற்றுமொரு வழக்கும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments