Ticker

6/recent/ticker-posts

இஸ்ரேலை கதற வைத்த “பா்ஹா”...!

 


Zafar Ahmed

'Farha' என்ற ஒரு ஜோர்தானிய மொழித் திரைப்படம் இன்று ஒட்டுமொத்த இஸ்ரேலையும் கதற வைத்துக் கொண்டிருக்கிறது.இஸ்ரேல் கலாசாரா அமைச்சர் திட்டுகிறார். நிதியமைச்சர் ட்விட்டரில் புலம்பித் தீர்க்கிறார்.

ஏற்கனவே ஐரோப்பா, மற்றும் ஆசிய பசுபிக் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்ட 'பர்ஹா' பல விருதுகளைக் குவித்து இருந்தது. இத்தனை நாளாய் வெறும் உலக சினிமா வட்டத்திற்குள்ளே சுற்றிக் கொண்டிருந்த 'பர்ஹா' சென்ற வாரம் நெட்பிளிக்ஸில் வெளிவந்து ஒரேயடியாக பல நூறு மில்லியன் பேரைப் போய்ச் சேர்ந்திருக்கிறது.
சாமானியர்களின் அத்தனைபேரின் மொபைலுக்குள் 'பர்ஹா ' அடங்கிவிட்டதுதான் இஸ்ரேலின் சீற்றத்தின் பின்னணி.
சில இஸ்ரேலிய மாடல்களும் பிரபலங்களும் நெட்பிளிக்ஸ் அக்கவுண்ட்களை unsubscribe செய்து கொண்டிருக்கிறார்கள். பர்ஹாவில் அப்படி என்னதான் இருக்கிறது? யார் இயக்குநர்? இப்பதட்டத்தின் பின்புலம் என்ன ?
ஜோர்தானில் வசித்து வரும் darin j. sallam என்ற முப்பத்தைந்து வயது இளம் பெண் இயக்குநர்தான் இக்கலவர சுனாமியின் சுமாத்ரா பூகம்பம். டாரின் கையில் எடுத்தது அப்படியொரு கனமான சப்ஜக்ட். உலக சரித்திரத்தில் நடந்த மாபெரும் நில அபகரிப்பான இஸ்ரேலின் உருவாக்கமும், அதன் பின்னர் ஏற்பட்ட 'நக்பா' எனப்படும் பேரழிவுகளும் ஒரு டீன் ஏஜ் பெண்ணின் வாழ்க்கையை எப்படிப் புரட்டிப் போட்டது என்பதுதான் பர்ஹாவின் கதை.
பலஸ்தீன் கிராமம் ஒன்றில் இருக்கும் மத்ரசா ஒன்றில் குர் ஆன் போதனைகளைக் கற்றுவரும் பர்ஹாவிற்கு நகரத்திற்குச் சென்று படித்துச் சாதிக்க வேண்டும் என்று வேட்கை. அதை அடையவிடாமல் தந்தை குறுக்கே நிற்கிறார்.தந்தையுடன் பல தடவை முறுகிக் கொள்கிறாள் பர்ஹா. கடைசியில் அவள் கனவுகள் நிஜமாகும் தருணம் வரும் போது விதி இன்னொரு புறத்தில் பெரும் அட்டூழியத்தைச் செய்துவிடுகிறது.
1948 மே இல் இஸ்ரேல் உதயமான போது அதுவரை பஞ்சாயத்து செய்து வந்த பிரிட்டன் ஓடி ஒளிகிறது.ஐந்நூறு பலஸ்தீன் கிராமங்களும்,பத்து நகரங்களும் ஒரேயடியாய் ஆக்கிரமிக்கப்பட்டன.ஏழரை லட்சம் பேர் அகதிகளாகினர்.பதின் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவிகள் கொல்லப்பட்டார்கள்.ஆக மொத்தத்தில் எழுபத்தெட்டு வீதமான பலஸ்தீன் நிலப்பரப்பு இஸ்ரேல் வசமானது.
பர்ஹா வாழும் கிராமம் இஸ்ரேலிய கமாண்டர்களால் சூழப்படுகிறது.அல்லோலகல்லோலப்பட்டு சிதறி ஓடுகிறார்கள் கிராமவாசிகள்.நகரத்திற்குச் செல்லும் ஒரு டப்பா ஜீப் வண்டியில் ஏறித் தப்பிச் செல்லுமாறு வேண்டுகிறார் பர்ஹாவின் தந்தை. ஆனால் அவள் தந்தையைப் பிரிய முடியாது என்று மறுத்துவிடுகிறாள்.தந்தைக்கு வேறு வழி தெரியவில்லை.பர்ஹாவை வீட்டிற்குள் போட்டுப் பூட்டிப் பத்திரப்படுத்திவிட்டு எங்கோ கிளம்பிச் சென்றுவிடுகிறார் . பூட்டிய வீட்டின் ஓட்டை உடைசல்களிலிருந்து பர்ஹா பார்க்கும் வெளியுலகப் பயங்கரங்கள்தான் மிச்சம் மீதி..
ஹிட்லரால் கொத்துக் கொத்தாய்க் கொல்லப்பட்ட யூதர்களின் பரிதாபகரமான வாழ்க்கைப் போராட்டங்களைப் பற்றி ஆஸ்கார் விருது பெற்ற பல சினிமாக்கள் வந்துள்ளன. எழுதப்பட்ட இலக்கியங்கள் எத்தனையோ புனித அவார்ட்களைப் பெற்று இருக்கின்றன. 'Anne Frank' என்ற யூத டீன் ஏஜ் பெண்ணின் டயரி என்றைக்கும் வெகு பிரசித்தம். தன்னைச் சுற்றி நடக்கும் திகிலை அடைக்கப்பட்ட ஒரு வீட்டிலிருந்தவாறு எழுத்தில் வடிப்பாள் அந்தச் சிறுமி. ப்ராங்கும் குடும்பமும் கடைசியில் ஜெர்மன் படைகளால் கொல்லப்பட்டன. ப்ராங்கின் வயதுதான் பர்ஹாவிற்கும். ப்ராங்கை ஆவணப்படுத்தப் பெரும் பிரயத்தனம் செய்த இஸ்ரேலுக்கு பர்ஹாவை ஜீரணிக்க முடியவில்லை.
கடந்த மாதம் இஸ்ரேலில் நடந்த பொதுத் தேர்தலில் அதன் சரித்திரத்தில் என்றைக்கும் இல்லாதளவுக்கு தீவிர மதவாத யூத சக்திகளின் கையோங்கி இருந்தது.அவர்களின் தயவில் தான் இம்முறை பெஞ்சமின் நெத்தன்யாகு பிரதமராகியிருக்கிறார். இப்படியொரு பரபரப்பில் தான் பர்ஹா நெட்பிள்க்ஸைக் கலக்கிக் கொண்டிருக்கிறது.
'இந்தப்படத்தைப் பற்றிச் சொல்லுங்கள்.இதனால் உங்களுக்கு ஏதும் பிரச்னை வராதா?' என்று டாரினிடம் மீடியாக்கள் குடைந்த போது சொன்ன பதில் தான் கெத்து.
'2023ம் ஆண்டு ஆஸ்கார் விருது பரிந்துரைக்காக பர்ஹாவை அனுப்புவேன்.நான் ஒன்றும் கற்பனைக் கதையை எடுக்கவில்லை. இது எனது அம்மாவின் நண்பியின் கதை. உண்மையைச் சொல்லவும் எழுதவும் நான் ஏன் தயங்க வேண்டும்.யாருக்குப் பயப்பட வேண்டும் ? '

நன்றி : ஸபா் அஹ்மத் - (முகப்புத்தக பதிவு)

Post a Comment

0 Comments