Ticker

6/recent/ticker-posts

ஜமால் கஷோக்ஜி கொலை வழக்கு: 5 கைதிகளின் மரண தண்டனையை குறைத்தது செளதி நீதிமன்றம்

 


செளதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி, துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள செளதி தூதரகத்தில் கொல்லப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து பேரின் தண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறையாக குறைத்துள்ளது.

இதேபோல, குற்றம்சாட்டப்பட்டிருந்த மேலும் ஒருவருக்கு 10 ஆண்டு சிறையும், இருவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. தண்டனை குறைப்புக்கு ஆளானவர்களின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டிருந்த அனைவரையும் மன்னிப்பதாக கஷோக்ஜியின் குடும்பம் முடிவு செய்ததால் அவர்களின் தண்டனை குறைக்கப்பட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

ஆனால், "நீதித்துறையை கேலிக்கூத்தாக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவு அமைந்துள்ளது" என்று கஷோக்ஜியை திருமணம் செய்து கொள்ளவிருந்த அவரது தோழி ஹாட்டீ யு செங்கிஸ் கூறியுள்ளார்.

செளதி அரசின் தீவிர விமர்சகரான ஜமால் கஷோக்ஜி, துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள செளதி தூதரகத்தில் சில செளதி ரகசிய உளவுப்படையினரால் கொல்லப்பட்டதாக துருக்கி குற்றம்சாட்டியது.

இந்த விவகாரத்தில் பல மாதங்களாக துருக்கி சுமத்திய குற்றச்சாட்டுகளை மறுத்து வந்த செளதி அரசு, ஒரு கட்டத்தில் வலுவான காணொளி ஆதாரங்களை துருக்கி வெளியிட்ட பிறகு, ஆத்திரமூட்டல் நடவடிக்கையால் கஷோக்ஜியை செளதி அதிகாரிகள் கொல்ல நேர்ந்ததாக ஒப்புக் கொண்டது.

எனினும், சர்வதேச அழுத்தத்துக்கு அடிபணிந்த செளதி அரசு, துருக்கியால் குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிரான வழக்கை தமது நாட்டிலேயே நடத்துவதாக அறிவித்தது. பிறகு , குற்றம்சாட்டப்பட்ட 11 பெயர் குறிப்பிடாத தனி நபர்களுக்கு எதிரான வழக்கை செளதி நீதிமன்றம் விசாரித்தது.

இதேவேளை, செளதியிலேயே விசாரணை நடத்தும் முடிவை ஏற்க மறுத்த ஐ.நா சிறப்பு பிரதிநிதி ஏக்னெஸ் கல்லாமார்ட், நடந்த கொலைக்கு செளதி அரசே பொறுப்பாளி என குற்றம்சாட்டப்படும்போது, திட்டமிட்டே வேண்டுமென்ற நடத்தப்பட்ட செயலால்பாதிக்கப்பட்டவர் கஷோக்ஜி என்று கருத்து கூறியிருந்தார்.

செளதி பட்டத்து இளவரசர் உள்பட செளதி ராஜ்ஜியத்தில் உயர் பொறுப்பில் உள்ளவர்களுக்கு எதிரான வலுவான ஆதாரம் உள்ளதாகவும் கல்லமார்ட் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், செளதி பட்டத்து இளவரசர் அந்த குற்றச்சாட்டை மறுத்தார். இதற்கிடையே, இளவரசரின் இரு உதவியாளர்கள் உள்பட 18 பேருக்கு எதிராக துருக்கியில் தனியாக நடந்து வரும் கஷோக்ஜி படுகொலை வழக்கில், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத நபர்களாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் கருதப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. bbc.com

Post a Comment

0 Comments