Ticker

6/recent/ticker-posts

நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் மத்திய கிழக்கிலுள்ள இலங்கையரை அழைத்துவர ஆவன செய்யுங்கள்” – ஜனாதிபதிக்கு ஹாபிஸ் எம்.பி கடிதம்!

 


கொரோனா வைரஸ் தொற்றினால் நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் மத்திய கிழக்கிலுள்ள இலங்கையரை அழைத்துவர அவசர ஏற்பாடுகளைச் செய்யுமாறு கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜப‌ஷவுக்கு, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தவிசாளரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் கடிதம் அனுப்பியுள்ளார்.

 

அக்கடிதத்தில் ஹாபிஸ் நஸீர் எம்.பி தெரிவித்துள்ளதாவது,

 

எவரும் எதிர்பாராமல் பரவிய கொரோனா வைரஸால் உலகமே முடங்கி, மக்கள் வீடுகளை விட்டு வௌியேறாமல் இருந்தனர். ஒவ்வொரு நாடுகளும் இப்பாதிப்பிலிருந்து தப்பிப்பதற்கு  நடவடிக்கை எடுத்தது மட்டுமன்றி, தொடர்புகளையும் துண்டித்தன. இதனால் விமான நிலையங்கள்துறைமுகங்கள் மூடப்பட்டு, நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. இது பலரை நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வைத்தது மட்டுமன்றி, வௌிநாடுகளில் வாழும் உறவினர்களை நினைத்தும் கவலைப்பட வைத்துள்ளது.

 

இந்நிலையில், மத்திய கிழக்கில் தொழிலுக்காகச் சென்றுள்ளவர்கள் பற்றியும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். நாட்டின் அந்நியச் செலாவணியில் அதிகளவு பங்களிக்கும் மத்திய கிழக்கு தொழிலாளர்களை நாம் கைவிட முடியாது. வசதியுள்ளவர்கள் அங்கிருந்து வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்து நாடு திரும்பினாலும் விடயம் தெரியாத, வசதி குறைந்த எமது உழைப்பாளர் படை, மத்திய கிழக்கில் நிர்க்கதிக்குள் தவிக்கின்றது. தூதரகங்களுடன் தொடர்புகொள்ள முடியாமலும்வேலை செய்த இடங்களில் கைவிடப்பட்டும் இவர்கள் அலைக்கழிவதாக எமக்குச் செய்திகள் கிடைக்கின்றன. எனவே, இவர்களை உடன் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்ய வேண்டும்.

 

அதிலும், அங்குள்ள பெண் தொழிலாளர்களின் நிலைமைகள் இன்னும் பரிதாபமாக உள்ளமை எம்மைக் கவலைப்படுத்துகிறது. இவ்விளம் தாய்மார்களின் பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் இவர்களை எதிர்பார்த்து ஏங்குகின்றனர். எனவே, அங்குள்ள இலங்கைக்கான தூதரகம் துரிதமாகச் செயற்பட்டு, இவ்வாறானவர்களின் தகவல்களைப் பெற்று, நாட்டுக்கு அனுப்பும் பணிகளில் ஈடுபடுவது துரிதப்படுத்தப்படல் அவசியம்.

 

குறிப்பாக, வறுமைக் குடும்பங்களிலிருந்து பிழைப்புக்காகவும் குடும்பத்தை காப்பாற்றுவதற்கும் மத்திய கிழக்கு சென்றுள்ள எமது உடன்பிறப்புக்களை தொடர்ந்தும் நிர்க்கதிக்குள்ளாக்கக் கூடாது. குறிப்பாக, பெண்கள் தலைமைதாங்கும் குடும்பத்திலிருந்து சென்றுள்ள இப்பெண் தொழிலாளிகள், ஏற்கனவே பல வருடங்கள் உறவுகள்குடும்பங்களைப் பிரிந்த துயருடனே நீண்டகாலம் பணியாற்றியுள்ளனர். எனவே, இவர்களது கடவுச்சீட்டு, விமானச் சீட்டு உள்ளிட்டவற்றில் ஏற்பட்டுள்ள சட்டச் சிக்கல்களை இல்லாமலாக்கி, உடன் நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென அக்கடிதத்தில் ஹாபிஸ் நஸீர் எம்.பி தெரிவித்துள்ளார்.

 

இந்தக் கடிதத்தின் பிரதி வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  

Post a Comment

0 Comments