Ticker

6/recent/ticker-posts

தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு அநீதி; உடன் தலையிடுமாறு ஹக்கீம், றிஷாத் ஆகியோரிடம் கோரிக்கை!

விரைவில் வழங்கப்படவிருக்கும் பட்டதாரி நியமனத்திற்கான நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படாமல் தென்கிழக்குப் பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு பாரிய அநீதியிழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம், இது விடயத்தில் உடனடியாக தலையிட்டு பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இவ்விடயத்தை வலியுறுத்தி மேற்படி மன்றத்தின் செயலாளர் கலீல் எஸ்.முஹம்மட் இன்று செவ்வாய்க்கிழமை (06) அமைச்சர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

"2012 ஆம் ஆண்டு பயிலுநர் ஆட்சேர்ப்புத் திட்டத்திற்குள் உள்வாங்கப்படும் சந்தர்ப்பத்தை இழந்தவர்களான 2012.03.31 ஆம் திகதிக்கு முன்னர் பட்டத்தைப் பூர்த்தி செய்துள்ள மற்றும் 1745/11 ஆம் இலக்க 2012.02.14 ஆம் திகதிய அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைப் பிரமாணக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகளைப் பூர்த்தி செய்த பட்டதாரிகளை பயிலுநர் பயிற்சிக்காக ஆட்சேர்ப்புச் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் அதற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 2015.10.10 ஆம் திகதி பொது நிர்வாக அமைச்சில் நடத்தப்படவுள்ளதாக அந்த அமைச்சு அறிவித்துள்ளது.

இருந்த போதிலும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2012 ஆம் ஆண்டு வெளிவாரி பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பட்டமானது அந்த பல்கலைக்கழகத்தின் நடைமுறைக்கு ஒப்ப அதன் திகதி (effective date ) 01.04.2012 என குறிப்பிடப்பட்டுள்ளதால் அவர்கள் இந்நேர்முகப் பரீட்சைக்கு தோற்றும் வாய்ப்பை இழந்துள்ளனர். 

ஏனெனில் 2012.03.31 ஆம் திகதிக்கு முன் பட்டத்தைப் பூர்த்தி செய்துள்ள பட்டதாரிகள் மாத்திரமே நேர்முகப்ப் பரீட்சைக்கு அழைக்கப்ட்டுள்ளனர். 
இதனால் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற 170 இற்கும் மேற்ப்பட்ட பட்டதாரிகள் தொழில் வாய்ப்பைப் பெறுகின்ற அறிய சந்தர்ப்பத்தை இழந்துள்ளனர். இவர்களுள் பெரும்பாலானோர் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த ஒரு நாள் வித்தியாசத்தினால் இந்த பட்டதாரிகள் அனைவரினதும் தலைவிதி முழுமையாக மாறும் ஒரு துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அத்துடன் இது அவர்களது தனிப்பட்ட வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் மீண்டும் தங்களது தொழில் வாய்ப்புக்காக பல வருடங்கள் ஏங்கித்தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இவர்கள் 170 தனி நபர்கள் என்பதற்கு அப்பால் இவர்களில் தங்கி வாழும் குடும்பங்கள் நிறையவே இருக்கலாம் என உணரப்படுவதனால் இவர்களது தனிப்பட்ட வாழ்வியல் மற்றும் சொந்த நலனை கருத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் குறித்த இந்த திகதி நிர்ணயத்தை மாற்றம் செய்வதற்கு அமைச்சரவை தீர்மானம் ஒன்றினால் முடியும் எனக் கருதுகின்றோம்..

எனவே 01.04.2012 ஆம் திகதியினை கருத்தில் கொள்ளும் வகையில் இவ்விடயத்தை அமைச்சரவைக்கு கொண்டு சென்று அநீதியிழைக்கப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு தீர்வு கிடைக்க ஆவன செய்யுமாறு எமது சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் தயவாய் வேண்டிக் கொள்கிறது" என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments