Ticker

6/recent/ticker-posts

பூனையாக பதுங்கிய வடமாகாண சபை புலியாக மாறிவிட்டது: ஞானசார தேரர்

இனவாத பிரிவினைக்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் வட மாகாண சபையும் முயற்சிப்பதாக பொதுபல சேனா அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
நேற்று நடைபெற்ற பொதுபல சேனா அமைப்பின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வட மாகாண சபையின் செயற்பாடுகள் அண்மைக் காலங்களில் மிகவும் மோசமானதாகவுள்ளன.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் வட மாகாண சபையும் இனவாத பிரிவினைக்கு முயற்சிக்கின்றது என்பது அண்மையில் வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் மூலம் தெரிவந்துள்ளது.
கடந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் வட மாகாணத்தை சரியாக கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தார்.
யுத்தத்தை வென்றவுடன் வடக்கிற்கு உரிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதுடன் நாட்டின் நிலைமைகள் மீண்டும் பின்நோக்கி நகர்கின்றன. 2002ஆம் ஆண்டில் நாடு எவ்வாறானதொரு அரசியல் சூழ்நிலையில் இருந்ததோ அவ்வாறானதொரு நிலைமை தற்போது மீண்டும் உருவாகி வருகின்றது.
அன்று மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியின் ஆட்சியில் பூனைகள் போல் பதுங்கி கொண்ட வட மாகாண சபை இன்று மீண்டும் புலிகளாக மாற ஆரம்பித்து விட்டது.
வடமாகாண சபையில் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானமானது இலங்கைக்கு மிகவும் அச்சுறுத்தலான ஒன்றாகும். இவ்விடயத்தினை சாதாரணமாக எடுத்துக்கொண்டால் நாடு பாதாளத்தின் பக்கமே கொண்டு செல்லப்படும்.
வட மாகாண சபையின் இனப்படுகொலை தொடர்பில் பிரேரணை கொண்டுவரப்பட்டமை சர்வதேசத்தினை மகிழ்விக்கவேயாகும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் அமைதி காக்கின்ற நிலையில் கூட்டமைப்பின் தலைமையில் இருந்து சம்பந்தனை ஓரங்கட்டிவிட்டு சி.வி.விக்னேஸ்வரனை கூட்டமைப்பின் தலைவராக்கும் முயற்சிகள் சர்வதேச மற்றும் புலம்பெயர் புலி அமைப்புகளினால் முன்னெடுக்கப்படுகின்றது.
இன்னும் சிறிது காலத்தில் இது நடந்தே தீரும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments