Ticker

6/recent/ticker-posts

மே 09 அலரி மாளிகைக்கு முன்பாக இடம்பெற்ற எதிா்ப்பு நடவடிக்கை ! ஹந்துங்கொடவுக்கு பிணை!


கடந்த வருடம் மே மாதம் 09 ஆம் திகதி அன்று அலரி மாளிகைக்கு முன்பாக இடம்பெற்ற எதிா்ப்பு நடவடிக்கைகளை வன்முறையை தூண்டும்   வகையில் காணொளி ஒன்றை உருவாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டு  குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் தா்சன ஹதுங்கொடவை ஐந்து லட்சம் ரூபாய் கொண்ட இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே நேற்று (06) உத்தரவிட்டுள்ளார். 

இச்சம்பவம் தொடர்பில் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடைக்கு அமைய வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய சந்தேகநபர் நேற்று (06) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு குடியகழ்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியதை அடுத்து மேற்படி பிணையை வழங்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மே 19ஆம் திகதி பொலிஸ் மா அதிபரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும், அதன் பிரகாரம் சந்தேகநபர் கடந்த வருடம்  மே 31ஆம் திகதி திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு 0425 மணியளவில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். 

மேலதிக வாக்குமூலங்களைப் பதிவுசெய்வதற்காக ஜனவரி 20ஆம் திகதி ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் அவர் ஆஜராகவில்லை எனவும் மேலதிக விசாரணைகளின் போது சந்தேகநபர் வெளிநாடு சென்றுள்ளதாக தொிய வந்ததாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் அறிவித்தது.

இதன்படி, நீதிமன்றில் பெற்றுக்கொள்ளப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை உத்தரவுக்கு அமைய சந்தேகநபர் டுபாயில் இருந்து  நாடு திரும்பிய போது கைது செய்யப்பட்டதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில்  அறிவித்தது. சந்தேக நபருக்கு சாா்பாக  நீதிமன்றில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி சமிந்த அத்துகோரள, தா்சன ஹந்துங்கொட  முன்னர் எற்பாடாகியிருந்த  ஒரு காரியத்திற்காக துபாய் சென்றதாக  தெரிவித்தார். 

விசாரணைக்கு உதவும் நோக்கத்தில் திரும்பி வந்த தனது கட்சிக்காரருக்கு பிணை வழங்குமாறும், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் கணினி குற்றச் சட்டத்திற்கு பொருந்தாது என்றும் அவா் வாதிட்டாா்.  சட்டத்தரணியின் வாதங்களை கருத்தில் கொண்ட நீதிமன்றம், பிணை வழங்கியதோடு வழக்கை மே 17ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

Post a Comment

0 Comments