Ticker

6/recent/ticker-posts

“அரகலய” போராட்டத்தில் கலந்து கொண்டு காயமுற்ற ஓய்வு பெற்ற இராணுவ வீரா் மரணம்!


கடந்த ஆண்டு ஜுலை 9ம் திகதி  கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த “அரகலய” போராட்டத்தின் செயற்பாட்டாளர்களில் ஒருவரான ஓய்வுபெற்ற இராணுவ கொமாண்டோ வீரா் உயிரிழந்துள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாத்தறை தெவிநுவர வெலிமடுவ பகுதியை சோ்ந்த  59 வயதான டி.ஜே.எல்.  ஜயசேன என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

ஜூலை 9 ஆம் தேதி, கோட்டை ஜனாதிபதி மாளிகையைக் கைப்பற்றுவதற்காக பாதுகாப்புச் சுவர்களை உடைத்து முன்னேறிச் சென்ற போராட்டக்காரா்களில் இவரும் ஒருவராவார்.

மத்திய வங்கிக்கு அருகாமையில் உள்ள வாயில்கள் ஊடாக ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைய முற்பட்ட அவர், அருகில் இருந்த சுவரில் ஏறிய போது, ​​தாக்குதலுக்கு இலக்காகி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

மண்டை ஓட்டில் பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட  ஜயசேன வைத்தியசாலையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டிருந்தாா்.

வீட்டில் இருந்தபோது மீண்டும் சுகவீனமடைந்த ஜயசேன கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


Post a Comment

0 Comments