Ticker

6/recent/ticker-posts

தாகம் கொண்ட சீனாவின் தண்ணீர் அரசியல்!


2017ம் ஆண்டு ஜுன் மாதம் 6ம் திகதி  இடம்பெற்ற பெற்ற "சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு  இராஜதந்திரம் மற்றும் எல்லை கடந்த நீர்" என்ற தலைப்பில் பாதுகாப்பு சபைக் கூட்டத்தில், அப்போதைய  பொலிவிய நாட்டின் ஜனாதிபதி ஈவோ மொராலஸ் உரையாற்றினாா். அந்த உரையில், 1947 முதல், கடந்த  ஏழு தசாப்தங்களில், தண்ணீர் தொடர்பாக நாடுகளுக்கு இடையே சுமார் 37 மோதல்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.

"தண்ணீர் தொடா்பான தற்போதைய நுகர்வு முறைகள் தடையின்றி இவ்வாறே தொடர்ந்தால், 2025ம்  ஆண்டளவில் உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு தொகை மக்கள் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்வார்கள்” என்று அந்த பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் ஈவோ மொராலஸ் கூறினாா்.


உலகில் வளர்ந்து வரும் நீர் பற்றாக்குறையானது, நில எல்லைகளுக்குட்பட்ட நதிப் படுகைகளைக் கொண்ட  நாடுகளுக்கிடையே, தண்ணீா் தொடா்பான மோதல்களை  உருவாக்கி வருகிறது.


ஆசியாவில் 1.5 பில்லியன் மக்கள் புவியியல் ரீதியாக நாடுகளுக்கு இடையில்   ஊடறுத்து ஓடும் ஆற்றுப் படுகைகளில் வாழ்கின்றனர். இந்த ஆறுகளில் நாடுகளுக்கிடையில் ஒப்பந்தங்களால் நிர்வகிக்கப்படுபவை மிகக் குறைவானவையே. நாடுகளின் எல்லைகளைத் தாண்டி ஓடும் இத்தகைய நதிகள், தண்ணீா் தொடா்பான மோதல்களுக்கு மிகவும் வாய்ப்பாக அமைந்துள்ளன.


நீா் வளம்  உலகின் இயக்கத்திற்கு எவ்வளவு முக்கியமோ, அதே போல உலக அரசியலுக்கும் முக்கியமான உந்து சக்தியாக இருக்கிறது. மூன்றாவது உலக  யுத்தம் தண்ணீா் மீது நாடுகளுக்குள்ள ஆதிக்கத்தின் காரணமாக இடம்பெற வாய்ப்பிருப்பதாக  கூறப்படுகிறது. 


மக்களால் கொடிய தொற்று நோய்கள், யுத்தங்கள்  மற்றும் இயற்கை பேரழிவுகளில் இருந்து கூட தப்பிக்க முடியும். ஆனால்  தண்ணீர் தட்டுப்பாடு என்ற பேரழிவிலிருந்து அவா்களால் தப்பிக்க முடியாது. 


அதிகரித்து வரும் நீாின் மீதான நுகர்வு, சூழல் மாசடைதல் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக இந்த விலை மதிப்பற்ற நீா் வளம் இந்த பூமியிலிருந்து  மிக வேகமாக குறைந்து வருகிறது.


உலகளாவிய ரீதியில் தனிநபருக்குக் கிடைக்கும்  தண்ணீாின் அளவு மிக வேகமாக குறைந்துள்ளது, 1950ம் ஆண்டு  முதல் ஆரம்பித்த  இதன் வீழ்ச்சி 60 சதவீதத்திற்கும் மேலாக சரிந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தொிவிக்கின்றன.


2000 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல், ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் சுத்தமான குடிநீரைப் பெற முடியாமல் தவித்து வருவதாக நெதர்லாந்தில் உள்ள ட்வென்டே பல்கலைக்கழகத்தின் (The University of Twente) நீர் பொறியியல் துறையும், ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் வாட்டர் இன்ஸ்டிட்யூட்டின் நீரியல்துறையும் இணைந்து வெளியிட்ட அறிக்கையின்  படி, உலக மக்கள் தொகையில் சுமார் 66 சதவீதம் பேர் அல்லது நான்கு பில்லியனுக்கும் அதிகமான  மக்கள், கடுமையான தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வாழ்வதாக சுட்டிக்காட்டியுள்ளது.

 

ஆசியாவில் அதிக நீர் தட்டுப்பாடுள்ள நாடாக சீனா மாறும் என்று உலக வங்கியின் நீர் பற்றாக்குறை குறித்த அறிக்கை  சொல்கிறது.


காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து தரவுகளை வெளியிடும் இந்தியாவை தளமாகக் கொண்ட ஒரு முக்கிய சிந்தனைக் குழுவான Strategic Foresight Group, தண்ணீா் தட்டுப்பாடு காரணமாக 2050 ஆம் ஆண்டளவில் அரிசி மற்றும் கோதுமை விளைச்சலில் 30 முதல் 50 சதவிகிதம் வீழ்ச்சியை இந்தியாவும், சீனாவும் சந்திக்கும் என்று கணித்துள்ளது.


புது டில்லியை தளமாகக் கொண்ட கொள்கை ஆராய்ச்சி மையத்தின் (Center for Policy Research) மூலோபாய ஆய்வுகளுக்கான பேராசிரியரும், நீர் பாதுகாப்பு குறித்த  அறிஞருமான பிரம்மா செல்லனே (Brahma Chellaney) ஆசியாவில் தண்ணீருக்கான பதட்டங்கள் அதிகரித்து வருவதாகவும்,  முரண்பட்ட கடல்சார் உரிமை கோரல்கள் மட்டுமல்லாமல், தென் சீனக் கடல் போன்ற பிராந்திய தகராறுகள் அதிக கவனத்தை ஈர்த்திருக்கும் அதே வேளை, நாடு கடந்த நீர் வளங்கள் மீதான நாடுகளுக்கிடையிலான போட்டிகள் பெரும் அச்சுறுத்தலாக மாறியிருப்பதாக கூறியிருக்கிறாா்..


உண்மையில், தண்ணீரின் பெறுமதி எண்ணெய், எரிபொருளுக்கு சமனாக உயர்ந்துள்ளது. உலகின் தண்ணீா் வளத்தை  சூறையாடுவதற்கு பல நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு களத்தில் இறங்கியிருக்கின்றன. பல்தேசிய நிறுவனங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி வணிகப் பொருளாக்கி விற்று வருகின்றன.  தண்ணீா் ஆக்கிரமிப்பில் சீனா மும்முரமாக இறங்கியிருப்பதை அதன் “அணை கட்டும் அரசியல்” வெளிச்சம் போட்டு காட்டி வருகிறது.


இமயமலையில் அமைந்துள்ள  திபெத்திய பீடபூமி, மஞ்சள், யாங்சே, சிந்து, சட்லெஜ், பிரம்மபுத்திரா, சால்வீன் மற்றும் மீகொங் உள்ளிட்ட ஆசியாவின் பத்து முக்கிய நதிகளின் மூல ஊற்றாகும். இதன் காரணமாகவே திபெத் "ஆசியாவின் நீர் கோபுரம்" என்று அழைக்கப்படுகிறது.



பதினொரு நாடுகளை ஊடறுத்து ஓடிக்கொண்டிருக்கும் இந்த ஆறுகள், ஆப்கானிஸ்தானிலிருந்து தெற்காசியாவில் இந்தியா வரையிலும், தென்கிழக்கு ஆசியாவில் வியட்நாம் வரையிலும் இரண்டு பில்லியன் மக்களுக்கு வாழ்வாதாரங்களை வழங்கி வருகின்றன.


புவியியல் ரீதியாக சீனாவின்  அமைவிடம்  காரணமாக, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு  நீரை கொண்டு  செல்லும் பிரதான  ஆறுகளின் ஏகபோக உரிமையை சீனா பெற்றுள்ளது. 


சிந்து மற்றும் பிரம்மபுத்திரா நதிகள் இரண்டும் சீனாவிலிருந்து அதன் எல்லைகள் ஊடாக இந்தியாவிற்குள்  பாய்கின்றன.


உண்மையில், உலகின் வேறு எந்த நாடுகளையும் விட சீனாதான் அதிக நீர் ஆதாரங்களை கொண்ட நாடாக இருக்கிறது. திபெத்திய பீட பூமியின்  நீர் வளத்தை தனது கட்டுப்பாட்டில் சீனா வைத்திருந்த போதிலும், தொழிற்துறை  வளர்ச்சி மற்றும் பாரிய சூழல் மாசடைவின் காரணமாக  அது  பாரிய  நீர் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது.


கடந்த 20 ஆண்டுகளில் சீனாவின் தனி நபருக்கான தண்ணீரின் தேவை 23 சதவீத சரிவை சந்தித்திருகிறது. இதற்கிடையில், சீன நகரங்களில் தண்ணீருக்கான தேவை ஆண்டுதோறும் 10 சதவீதத்திற்கும் அதிகமாகவும், அதன் தொழிற்சாலைகளுக்கு ஆண்டுதோறும் ஐந்து சத விகிதத்திற்கும் அதிகமாகவும் அதிகரித்து வருகிறது.


தண்ணீரின் இந்த விரைவான சரிவு, சீன  மக்களுக்கு  கடுமையான குடிநீர் பற்றாக்குறையை உருவாக்கியுள்ளது.  சீன மக்களில் 25 சதவீதத்திற்கும் அதிகமானோர் குடிநீர் தட்டுப்பாட்டை எதிா்நோக்கியுள்ளனர்.


சீனாவின் 668 பெரிய நகரங்களில் கிட்டத்தட்ட அரைவாசிக்கு மேல் தண்ணீர் பற்றாக்குறையை எதிா்நோக்கியுள்ளதோடு, இதில் 108  நகரங்கள் தீவிரமான தண்ணீா் பற்றாக்குறையை எதிா்கொண்டுள்ளதாக  அடையாளம் காணப்பட்டுள்ளன. 2030 ஆம் ஆண்டில், நாட்டின் வருடாந்திர தண்ணீர் பற்றாக்குறை 200 பில்லியன் கன மீட்டரை எட்டும் என்று சீன அரசாங்கம் கணித்துள்ளது. 



சீனாவின் மோசமான தண்ணீர் பற்றாக்குறை, வரலாறு காணாத சூழல் மாசுபாட்டால் அதிகரித்திருக்கிறது. சீன தொழிற்சாலைகள் இந்த சூழல் மாசடைவிற்கு பிரதான காரணங்களாக இருக்கின்றன.  நாட்டின் குடிநீரில் 70 சதவீதத்தை வழங்கும் சீனாவின் நிலத்தடி நீர்நிலைகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை மாசுபட்டுள்ளன.


சீன உற்பத்தி மற்றும் தொழில்துறை, உலகளவில் பொருளாதாரத்தில் சீனாவை ஜாம்பவானாக எழுந்து நிற்க வைத்தாலும், இயற்கை வளங்களுக்கு அதனால் ஏற்பட்ட அழிவுகளும், மாசடைவுகளும்  சீனாவை மட்டுமல்ல உலகையே  ஒரு பேராபத்தின் பக்கம் நகா்த்தி  வருகிறது. 



உலகில் எண்ணெய்க்கும், எரிபொருளுக்கும் இணையாக தண்ணீா் வளமே அதிக தாக்கம் நிறைந்ததாக கருதப்படுகிறது.  இதன் காரணமாக உலகிலுள்ள மிகப் பொிய நீராதாரங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் வேலைத்திட்டங்களை  சீனா செயற்படுத்தி வருகிறது.


உலகின் மிகப் பிரபலமான மலைத்தொடா்களைக் கொண்ட, அதிக நீா் வளங்களைக் கொண்ட  திபெத்தின் எதிர்காலம் ஆபத்தில் சிக்கியிருக்கிறது. சீனாவின் மிகப் பாரிய அணைகள் உருவாக்கும்  திட்டத்தால் இயற்கை வளங்களுக்கு ஆபத்து  ஏற்பட்டிருக்கிறது.  ஆசியாவில் நீர் ஆதாரங்களைக் கொள்ளையிடும் அரசியல் ஆதிக்க பந்தயத்தில், தூய தண்ணீா் வளத்தை தன்னகத்தே புதைத்து வைத்துள்ள  இந்த பீட பூமி இன்று சிக்கியிருக்கிறது.


இந்தியா, நேபாளம், பூடான் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் இமயமலையிலிருந்து இறங்கி வரும் ஆறுகளின் அரவணைப்பில்  தங்கள் பொருளாதாரங்களை கட்டமைப்பதற்கு புதிய மின்சார ஆதாரங்களைத் தேடுக்கொண்டிருக்கின்றன.


இந்த நிலையில், திபெத்திலிருந்து பெருகியோடும்  முக்கிய நதிகளில் இருந்து  அதிகளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய சுமார் 100 அணைகளை நிா்மாணிக்க சீனா திட்டமிட்டுள்ளது.


திபெத்திலிருந்து தென்கிழக்கு ஆசியா வழியாக தெற்கே பாயும் மீகொங் நதியின் குறுக்கே  60 அல்லது அதற்கு மேற்பட்ட அணைகளை உருவாக்க சீனா  தயாராகியுள்ளது. திபெத்திய பீடபூமியிலிருந்து ஓடும் அனைத்து முக்கிய ஆறுகளிலும் பல அணைகளைக் கட்டும் பணிகளை சீனா செய்து வருகிறது.


மீகொங், பிரம்மபுத்திரா, யாங்சே மற்றும் மஞ்சள் ஆறு போன்ற  உலகின் மிகப்பெரிய  நதிகளின்  தலைப்பகுதியாக திபெத்திய பீட பூமி கருதப்படுகிறது.  இயற்கையின் வளமாகவும், வரப்பிரசாதமாகவும் கருதப்படும் இந்த பூமியில் அணைகளை கட்டுவது  பேரழிவுகளையும், பின்விளைவுகளையும் ஏற்படுத்தும்  என்று கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் நீர் வள ஆராய்ச்சியாளர் டஷி செரி (Tashi Tseri) கூறியுள்ளார்.


"சீனா, வரலாற்றில் மிகப்பெரிய தண்ணீர் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. பீடபூமியில் உள்ள ஆறுகளை தடுப்பது மட்டுமல்லாமல், அது நிதியுதவி செய்து, பாகிஸ்தான், லாவோஸ், பர்மா மற்றும் பிற இடங்களில் மிகப் பாரிய அணைகளை உருவாக்கி, அதிகாரத்தைக் கைப்பற்ற ஒப்பந்தங்களைச் செய்து வருகிறது" என்று இந்திய புவியியல் மற்றும் அரசியல் ஆய்வாளர் பிரம்மா செல்லனே கூறியுள்ளார்.


இந்தியாவுடனான சீனாவின்  தகராறுகள், எல்லைப் பிரச்சினையாக மட்டுமில்லாமல் இயற்கை வளமான  தண்ணீருக்கான போராட்டமாக உருவெடுத்து வருகிறது. பிராந்தியத்தில் தண்ணீா் தொடா்பான தனது மேலாதிக்கத்தை நிலை நிறுத்த சீனா கடுமையாக செயற்பட்டு வருகிறது.


நவீன ஆயதங்கள் மட்டுமல்லாது, நீர் வளம் என்பது கூட,   புவியரசியலில் மைய நிலையை தொட்டிருப்பதையே  சீனாவின் இந்த தண்ணீா் மீதான மேலாதிக்கம் பிரதிபலிக்கின்றன.  சீனாவின், இந்த பாரிய அணைகளை கட்டும் திறனும்,  சக்தியும் பிராந்தியத்தில் ஆயுதங்கள் இல்லாத மௌன போர் சூழல் ஒன்றை உருவாக்கியிருக்கிறது.


தெற்காசியாவில் வளா்ந்து வரும் தண்ணீர் பற்றாக்குறை மிகவும் சவால்கள் மிக்கதாகும். தண்ணீா் வளம் அனைத்து இயற்கை வளங்களிலும் பெறுமதிமிக்கதாகும்.  நீரின் மீது கொண்டுள்ள சீனாவின் மேலாதிக்கம் மற்றும் பிராந்திய ரீதியில் அது செலுத்தும் அழுத்தங்கள் இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக இந்தியா கருதுகிறது.


அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தல் மற்றும்  கையகப்படுத்தல் என்ற கொள்கையின் அடிப்படையிலேயே சீனாவின் அரசியல் அமைந்தள்ளது. வளர்ந்து வரும் அதன் கடல்சார் அபிலாஷைகளும் மற்றும் இராணுவ சக்தியை வெளிப்படுத்தும் திறனும், ஒரு முக்கிய மூலோபாய ஆர்வத்தை இலக்காக கொண்டிருக்கிறது.  வளங்களை தன்னகத்தே வைத்துக் கொள்வதை மையமாகக் கொண்ட அதன் வணிக ரீதியிலான ஆா்வம் கூட, பிராந்திய மேலாதிக்கத்தை நிறுவுவதற்கான உந்துதலாக வெளிப்பட்டு வருகின்றன.




உலகின் பல நாடுகளினூடாக ஊடறுத்து செல்லும் நதிகளை, சீனா புவியியல் ரீதியாக தனக்கு கிடைத்திருக்கும்  அனுகூலங்களைப் பயன்படுத்தி  கட்டுப்படுத்தி வருகிறது. திபெத் தன்னாட்சி பிராந்தியத்தின்  மீது தனது கட்டுப்பாட்டை விரிவுபடுத்தியதற்கும் இதுவே காரணமாகும்.  இந்தியாவின் முக்கிய நதிகளான சிந்து, கங்கை மற்றும் பிரம்மபுத்திரா அனைத்தும் சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியுடன் தொடா்புபட்டுள்ளன.


சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவை சிந்து நதிப் படுகை,  இணைக்கிறது. அதே நேரத்தில் பிரம்மபுத்திரா மற்றும் கங்கை நதிகள்,  சீனா, பூட்டான், இந்தியா மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளை இணைக்கின்றன.


புவிசார் அரசியலில், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல்கள் நிலவுகின்றன. இந்தியா தனது  தேவைகளுக்காக பாகிஸ்தானின் நேச நாடான சீனாவை சார்ந்து இருப்பது, நீர் தொடா்பான மோதல்களுக்கான சாத்தியக் கூறுகளை அதிகப்படுத்தியிருக்கின்றன.


பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷுடனான நீர் ஒப்பந்தங்களில் இந்தியா சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்டிருந்தாலும், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நீர் ஒப்பந்தம் இல்லாததால், நாடுகடந்த நதிகளைக் கட்டுப்படுத்துவதில்  சீனாவின் ஆதிக்கமே மேலோங்கி இருக்கிறது.


மிக நீண்ட ஆறுகளின் தண்ணீரை அணைகள் மூலம் கட்டுப்படுத்தி தன்னகத்தே வைத்துக் கொள்ளும் அரசியலை சீனா செய்து வருகிறது. உலகின் மிக பிரமாண்டமான அணைகளை  நிா்மாணிக்கும்  நாடாக சீனா உள்ளது. இதன் மூலம்  சுற்றுச்சூழலை சீர்குலைப்பதாகவும்,  ஆற்றுப்படுகைகளிலுள்ள மக்கள் மீது  கட்டாய இடமாற்றத்தை திணிப்பதாகவும் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு (Human Rights Watch) சீனா மீது குற்றம் சாட்டியுள்ளது. 


பிரம்மபுத்திரா போன்று நாடு கடந்து பாயும் ஆறுகளில் சீனாவின் "அணை கட்டும் அரசியல்"  இயற்கை வளத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தி வருவது மட்டுமல்லாமல், இந்தியாவின் தேசிய மற்றும் நீர் பாதுகாப்பிற்கும், உணவு உற்பத்திக்கும் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அச்சுறுத்தலாகவும் இந்தியாவால் பார்க்கப்படுகிறது.

.

Post a Comment

0 Comments