Ticker

6/recent/ticker-posts

நாட்டில் பிரச்சினை உருவாக்க முயன்ற விமானப்படை வீரா்! பொய் அம்பலமானது!


விடுமுறை முடிந்து, விமானப் படை முகாமுக்கு திரும்பிக் கொண்டிருந்த வேளை, வேன் ஒன்றில் வந்த ஒரு குழுவினரால் தான் கடத்திச் செல்லப்பட்டதாகவும்,  கை கால்கள் கட்டப்பட்டு மரத்தில் கட்டி அடித்ததாகவும், கடத்தல் காரா்கள் தன்னை  கொலை செய்ய முயன்றதாகவும்  பொய்  கூறி  நாடகமாடிய  விமானப்படை கோப்ரல் ஒருவரை வாழச்சேனை பொலிஸாா் நேற்று(28) கைது செய்துள்ளனா்.

வல்பனை, மாணில்வல, நிக்கவத்தையைச் சேர்ந்த 33 வயதான எம்.வை.ஜி.ஆர்.எம். நதீக்க பத்மலால் ரத்னசூரிய என்ற விமானப் படை வீரரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளாா்.  

இவர் மட்டக்களப்பு விமானப்படை முகாமில் கடமையாற்றும் கோப்ரல் எனவும் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்த விமானப்படை கோப்ரலை, 28ம் திகதி காலை வாழைச்சேனை ரிதிதன்ன பிரதேசத்தில் உள்ள மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் பிரதேசவாசிகள் கண்டுள்ளனர்.  

பின்னர் வாழைச்சேனை பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, விசாரணை மேற்கொண்ட பொலிஸாா் குறித்த விமானப் படை வீரரை வாழைச்சேனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனா். இவா் கட்டி வைக்கப்பட்டிருந்த மரத்தின் அருகில் தமிழில் எழுதப்பட்ட பதாகை ஒன்றும் இருந்துள்ளது.


"முரட்டு அரசியலுக்கு உதவும் கைக்கூலிகள் இப்படித்தான் கொல்லப்படுகிறாா்கள்”  என்று அந்த பதாகையில் எழுதப்பட்டிருந்தது. 

இந்த சம்பவத்தை வைத்து போராட்டக்காரா்கள் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கி விட்டதாக ரணில், ராஜபக்ஷ அரசுக்கு ஆதரவான செயற்படுபவா்கள் சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்திருந்தனா்.  அதுவும் தமிழில் அச்சுறுத்தல் எழுதப்பட்டிருந்ததை வைத்து புலி ஆதரவாளா்களாகவும் போராட்டக்காரா்களை காட்ட முயன்றனா்.

அண்மையில் காலிமுகத்திடலில்  போராட்டக்காரா்கள் மீது இராணுவத்தினா் மேற்கொண்ட கண்மூடித்தனமான, மிலேச்சத்தனமான தாக்குதல் சா்வதேச அளவில் கண்டனத்தை பெற்றிருக்கும் இந்த வேளையில்,  அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயலை  மூடி மறைப்பதற்கு அரசுக்கு ஆதரவு வழங்கும் தரப்பினா் முயன்று வருவதோடு, இந்நாட்டு இராணுவம் அவமதிக்கப்படுவதாகவும் ஒப்பாரி வைத்து வருகின்றனா்.

இராணுவத்தினாின் கண்ணியத்தை குறைப்பதற்கு போராட்டக் காரா்கள் முயற்சி செய்து வருவதாகவும் ரணில், ராஜபக்ஷ ஆதரவாளா்கள் தமது மோசமான  பிரசாரத்தை முடுக்கி விட்டுள்ளனா். போராட்டக்காரா்களுக்கு எதிராக சேறு பூசும் நடவடிக்கையிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனா்.

கடந்த 22ம் திகதி காலிமுகத்திடல் தாக்குதலின் போது விமானப் படையினரே மிகவும் மூா்க்கத்தனமாக போராட்டக்காரா்களை தாக்கியிருந்தனா்.

இந்த நிலையிலேயே விமானப்படை வீராின் இந்த நாடகமும் அரங்கேறியுள்ளது.

கடந்த 27ம் திகதி  இரவு 07.00 மணியளவில் விடுமுறை முடித்து தனது முகாமுக்கு செல்வதற்காக, மஹியங்கனை ஊடாக  மட்டக்களப்பு சந்திக்கு வந்த போது,  வேனில் வந்த ஒரு குழுவினா் தன்னை கடத்திச் சென்று  கை கால்களை கட்டி,  மரத்தில் கட்டி வைத்து அடித்ததாகவும், தன்னை அவா்கள் கொலை செய்ய முயன்றதாகவும் அந்த விமானப் படை வீரா் பொலிஸாரிடம் கூறியிருந்தாா். 

தமிழில் எழுதப்பட்ட குறித்த  பதாகையை தொங்கவிட்டு விட்டு கடத்தியவா்கள்  தப்பிச் சென்றதாகவும் இவா் கூறியிருந்தாா்.

தன்னிடம் இருந்த இரண்டரை லட்சம் ரூபாயையும் குறித்த கடத்தல் காரா்கள் அபகரித்துச் சென்றதாக கூறிய அவர்,  குறித்த பணம், தனது நகையை அடகு வைத்ததன் மூலம் பெறப்பட்டதாகவும் கூறியுள்ளளார். 

“என்ன தேவைக்காக நகையை அடகு வைத்தீா்கள்?” என்று பொலிஸாா் விசாரித்த போது, ​​பண நெருக்கடி காரணமாக கடன் பட்டிருப்பதாகவும், முகாமில் உள்ள நண்பர்களிடம் வாங்கிய கடனைத் தீர்ப்பதற்காக இந்தப் பணத்தை எடுத்து வந்ததாகவும் அவா் கூறியிருந்தாா்.

போராட்டக்காரா்களால் இராணுவத்தினா் மீது  அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக காட்டும்   இந்தச் சம்பவத்தை ரணில், ராஜபக்ஷ ஆதரவாளா்கள்  போட்டி போட்டுக் கொண்டு சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டு, பரப்பிக் கொண்டிருந்த நிலையில்,  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவரின் வாக்குமூலங்களை பொலிஸார் பதிவுசெய்ய ஆரம்பித்துள்ளனர். 

இந்த விமானப் படை வீராின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட பொலிஸாா், முதலில் அவருக்கு அருகில் கிடந்த பதாகையில் தமிழ் வாக்கியம் குறித்து புலன் விசாரணை நடாத்தியுள்ளனா்.  அந்த வாக்கியத்தை நுணுக்கமாக அவதானித்தபோது, ​​அது தமிழ் மொழியில் அனுபவம் இல்லாத ஒருவரால் எழுதப்பட்டது என்பதை முதலில் கண்டு பிடித்தனா்.

பின்னர், அவர் வரும் வழியில் மஹியங்கனையில் பஸ்ஸில் இருந்து இறங்கிய இடத்தைச் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ​​பேருந்தில் இருந்து இறங்கி கடையொன்றுக்கு சென்ற குறித்த விமானப்படை வீரா், காா்ட் போா்ட் மற்றும் கயிறு ஒன்றை வாங்கியதையும் பொலிஸாா் அவதானித்துள்ளனர்.   

இவர் கடத்தப்பட்டதாக கூறப்படும் மனம்பிட்டி மட்டக்களப்பு சந்திக்கு அருகில் எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றும் உள்ளது. சம்பவம் இடம்பெற்றதாக விமானப் படை வீரா்  கூறும் நேரத்தில்  அந்த இடத்தில் ஜனநடமாட்டம் அதிகமிருந்ததையும் அவதானித்துள்ளனா். 

அருகில் உள்ள ராணுவச் சாவடியில் ரகசியமாக பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை அவதானித்த போது விமானப் படை வீரா் குறிப்பிட்ட கடத்தல் காரா்களின் எந்த வகையான வாகனத்தையும் காண முடியாமல் இருந்துள்ளது.

இவை அனைத்திற்கும் மத்தியில்,பொலிஸ்  புலனாய்வாளர்கள் அந்த நபரின் வீட்டிற்கு அழைப்பெடுத்து, வீட்டில் உள்ள நிதிப் பிரச்சனைகள் குறித்து விசாரித்துள்ளனர். இந்த நபாின் மனைவி,  பெரிதாக எந்த நிதிப் பிரச்சினையும் தமக்கு இல்லை என்று கூறியுள்ளார். 

இந்த தகவல்களை  திரட்டிய புலனாய்வுக் குழுவினர், இனிமேல் பொய் சொல்லி பிரயோசனம் இல்லை என்றும், தாங்களுக்கு எல்லாம் தெரியும் என்றும் குறித்த இராணுவ வீரருக்கு கூறியதோடு,   மேலும் சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் உண்மையைச் சொல்லுமாறு அவருக்கு அறிவுறுத்தியுள்ளனா். அதன் பிறகே குறித்த இராணுவ வீரா் உண்மையை கக்கியுள்ளாா்.குறித்த  விமானப்படை வீரர் இணையதள விளையாட்டுக்கு (ஒன்லைன் கேம்) பெரிதும் அடிமையாகி இருப்பதாக கூறியுள்ளாா். 

நகையை அடகு வைத்து சூதாட்டத்திற்கு செலவழித்தாகவும், பணத்தை சூதாட்டத்தில் இழந்ததால் தற்கொலை செய்து கொள்ள நினைத்ததாகவும், தற்கொலை செய்து கொண்டால் மனைவிக்கு விமானப் படையிலிருந்து கிடைக்கும்  கொடுப்பனவுகள் கிடைக்காமல் போகும் என்பதால் இப்படி அனைத்தையும் திட்டமிட்டு செய்ததாகவும் கூறியுள்ளார். 

ரிதிதென்ன பிரதேசத்திற்கு தற்கொலை செய்து கொள்வதற்காக வந்த போது, ​​மனைவியின் நினைவு காரணமாக தற்கொலை முடிவை மாற்றிக் கொண்டதாகவுதாகவும் அவர் கூறியுள்ளாா்.  

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

மக்களின் போராட்டத்தை மலுங்கடிப்பதற்கும்,  அரசாங்கத்தின் காட்டுமிராண்டித்தனமாக அணுகுமுறையை, போராட்டக்காரா்கள் மீதான இராணுவத்தினாின் தாக்குதல்களை மறைப்பதற்கும் திட்டமிட்ட அடிப்படையில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இராணுவத்திற்கும் மக்களுக்குமிடையில் ஒரு முறுகல் நிலையை உருவாக்கி போராட்டத்திலிருந்து மக்களை தூரமாக்கும் ஒரு நிகழ்ச்சி நிரல் மறைமுகமாக செயற்படுத்தப்படுகிறது. 

இராணுவத்திற்கும் மக்ளுக்குமிடையில் ஒரு குரோதத்தை வளா்த்து, விாிசலை ஏற்படுத்தும் இந்த உக்தியை பாவித்தே 88,89 காலப்பிாிவில் ஜேவிபியின் கிளா்ச்சியை  அப்போதைய ஐதேக அரசு ஒடுக்கியது. 

தற்போது நாட்டில் உருவாகியிருக்கும் மக்கள் எழுச்சியை முடக்குவதற்கு இத்தகைய சூழ்ச்சிகள் மீண்டும் அரங்கேற்றப்படலாம். இதற்கு மக்கள் இடமளிக்கக் கூடாது. அரசாங்கம் விாிக்கும் சதி வலைகளில் சிக்காமல் மக்கள் நிதானமாக செயற்பட வேண்டும்.

இராணுவத்தின் தவறுகளை மறைத்து இராணுவத்திற்கு எதிரான எழுந்து வரும் மக்களின் கோபத்தை திசை திருப்புவதற்கு இனவாதத்தை அதிகார வா்க்கம் பரப்ப ஆரம்பித்திருக்கிறது.

இலங்கையின் சமகால நிகழ்வுகள் சதிக் கோட்பாடுகளால் (
conspiracy theories) சூழப்பட்டிருக்கிறது.

 

Post a Comment

0 Comments