Ticker

6/recent/ticker-posts

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவப் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ.முபாரக் அவர்கள் காலமானார்.

 


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவப் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ.முபாரக் அவர்கள் சற்று முன்னர் கொழும்பில் காலமானார்.

அஷ்-ஷைக் முஹம்மத் மக்தூம் அஹ்மத் முபாரக் அவர்கள் இந்நாட்டு மூத்த ஆலிம்களில் ஒருவர்.
1949 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 05 ம் திகதி பிறந்த இவர் 1969 ஆம் ஆண்டு மகரகம கபூரிய்யா அறபுக் கல்லூரியின் ஷரீஆ கற்கையை பூர்த்தி செய்த ஆலிமாவார். பின் 1978 ஆம் ஆண்டு தமது கலைமானி பீ.ஏ பட்டப்படிப்பை மதீனா ஜாமிஆ இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் பூர்த்தி செய்தார்.
அன்று முதல் இன்று வரை ஓயாது சமூகத்திற்கான அவருடைய குரலும், வளமும் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருந்தது.
1991 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவராகவும், 2003 முதல் 2009 வரை அதன் கௌரவ உப தலைவராகவும், 2009 முதல் இதுவரை அதன் கௌரவ பொதுச் செயலாளராகவும் செயற்பட்டு வந்தார். மட்டுமல்லாமல் 1979 ஆம் ஆண்டு முதல் அதன் ஃபத்வாக்குழு உறுப்பினராகவும், 1971 முதல் 1973 வரை அரச பள்ளிக் கூடத்தின் அறபுப் பாட ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். 1981 முதல் சுமார் 32 ஆண்டுகள் தாம் ஆலிம் பட்டம் பெற்ற மஹரகம கபூரிய்யா கலாபீடத்தின் அதிபராகவும், சுமார் இரண்டரை ஆண்டுகள் ஜாமிஆ நழீமிய்யாவின் பகுதி நேர விரிவுரையாளராகவும், 2002 ஆம் ஆண்டு முதல் இஸ்லாமிய வங்கிகளுக்கான ஷரீஆ ஆலோசகராகவும், மல்வான பின் பாஸ் மகளிர் அறபுக் கல்லூரியின் நிர்வாக சபை உப தலைவராகவும் செயற்பட்டும் வந்தார்.
தலைநகரில் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 485 தலைப்புக்களில் குத்பாப் பிரசங்கங்களைச் செய்து வந்த இவர் சிறந்த வானொலிப் பேச்சாளருமாவார். இதுவல்லாமல் சுமார் 7 சர்வதேச மாநாடுகளில் பங்குபற்றியுமுள்ளார். பன்முகப்படுத்தப்பட்ட இவர் ஒரு எழுத்தாளரும் கூட. இவரால் பல நூற்களும், கட்டுரைகள் எழுதப்பட்டுமுள்ளன.
இப்படிப்பட்ட ஒரு ஆளுமையை இந்நாடு இழப்பதானது முழு நாட்டு முஸ்லிம் சமூகத்திற்கான பேரிழப்பாகும்.
அல்லாஹுதஆலா அன்னாரை ஏற்று உயர்ந்த சுவனபதியைக் கொடுப்பானாக..!
(நன்றி -தையிப் ஹைதர் அலி அல்-ஹலீமி-)

Post a Comment

0 Comments