Ticker

6/recent/ticker-posts

இந்தோனேசிய சுனாமிக்குக் காரணம் என்ன?

இந்தோனேசியாவின் சுந்தா கடல் ஜலசந்தியில் ஏற்பட்ட படுபயங்கரமான சுனாமிக்கு இதுவரை 281 பேர் பலியாகியுள்ளனர், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கவே வாய்ப்பு என்பதோடு, எரிமலை வெடிப்பினால் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 20 மீ உயரத்துக்கு பேரலைகள் எழும்பி 281 பேர் பலியானதோடு சுமார் ஆயிரக்கணக்கானோர் காயமடைய, 11,600 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

ஜாவா தீவின் மேற்கு முனையில் உள்ள பண்டேக்ளாங் மாவட்டத்தில் படுமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.  இங்கு மட்டுமே சுமார் 207 பேர் பலியாக, 775 பேர் காயமடைந்துள்ளனர்.
கடலுக்கடியில் உள்ள அனாக் கிராக்கதோவ் என்ற எரிமலை திடீரென வெடித்து சாம்பல் புகையைக் கக்கியுள்ளது. எரிமலையின் ஒரு பகுதி உடைந்து கடல் நீருக்குள் விழந்து அதிகொதிநிலை எரிமலைக் குழம்பும், உடைந்து விழுந்ததால் எழும்பும் குளிர்ந்த கடல்நீரும் ஒன்றிணைந்து பெரும் ஆற்றலை வெளிப்படுத்தி கடலடி நிலச்சரிவு ஏற்பட்டு ராட்சத கொலைகார அலைகள் உருவானதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏன் எச்சரிக்கை அமைப்பு இல்லை?
கடலடி நிலநடுக்கங்களினால் ஏற்படும் ஆட்டம் காரணமாக சுனாமி உருவாகுமா உருவாகாதா என்பதை கணித்து விட முடியும் எனும் போது, எரிமலை சீற்றங்களினால் சுனாமி ஏற்படும் என்பது இப்போதுதான் அதிர்ச்சியளித்துள்ளது.  எரிமலை அனாக் கிராக்டோவ் எரிமலையைச் சுற்றி  ‘பூயீ நெட்வொர்க்’இருந்திருந்தால் ஓரிரு நிமிடங்களுக்கு முன்னால் கூட அலை வருவதை ஓரளவுக்கு அறிய முடியும் என்று மெல்போர்ன் பல்கலைக் கழக உதவிப் பேராசிரியர் டேவிட் கென்னடி கூறுகிறார். “இதனை அமைப்பது அதிக செலவு பிடிக்கும் ஒன்று, ஆகவே எல்லா இடங்களிலும் இதனை அமைப்பது என்பது சாத்தியமாகாத ஒன்று” என்கிறார் டேவிட் கென்னடி.
இந்தோனேசியாவில் மொத்தம் 147 எரிமலைகள் உள்ளன, இவற்றில் 76 எரிமலைகள் கொழுந்து விட்டு கனன்று கொண்டிருக்கின்றன.
அனாக் கிராக்கத்தோவ் வரலாறு:
பசிபிக் ரிம் ஆஃப் பயர் என்ற கடலடி பூகம்ப நடவடிக்கையின் ஒருபகுதியே அனாக் கிராக்கத்தோவ். அதாவது ஆஸ்திரேலிய-இந்தோனேசிய கண்டத்தட்டு, யூரேசியன் கண்டத்தட்டுக்கு அடியில் செல்லும் பகுதியாகும் இது.

“அவ்வாறு ஒரு கண்டத்தட்டு இன்னொரு கண்டத்தட்டுக்கு அடியில் செல்லும்போது, கிட்டத்தட்ட அது அடுப்புப் போன்ற பகுதிக்குச் செல்லும் போது உருகத் தொடங்குகிறது இதனால் எரிமலைகள் உருவாகின்றன. இதில் உயர்ந்த அளவு சிலிகா உள்ளது, இந்த சிலிகா வாயுக்களையும் நீரையும் தன்வசம் அடைத்துக் கொள்வது. இவை ஒரு பாகுத்தன்மையிலான பிசுபிசுப்புடன் இருக்கும். இவைதான் மிகப்பெரிய எரிமலை சீற்றத்துக்கு காரணமாகின்றன. இது அனைத்து பழைய கடலடித் தரைகளையெல்லாம் ஒன்றகாகக் கலக்குகிறது” என்று கூறுகிறார் டேவிட் கென்னடி.
1883-ம் ஆண்டு இதே கிராக்கதோவ் எரிமலை சீற்றம் 36.6 மீ சுனாமி பேரலைகளை உருவாக்கியதில் சுமார் 36,000 பேர் பலியாகினர். கிராக்கத்தோவ் தீவு முழுதுமே ஆவியானது போல் காட்சியளித்ததோடு எரிமலை வாயு, சாம்பல், சிறு பாறைகள் 80கிமீ உயரத்துக்கு எழும்பியது. இதனால் ஏற்படும் சப்தம் மனித வாழ்க்கையில் கேட்டிருக்க முடியாத ஒரு ராட்சத சப்தன் என்கிறார் கென்னடி.
தற்போதைய வெடிப்பில் “ஆஸ்திரேலியாவின் டார்வின், பெர்த்திற்கு தொலைதூர தெற்கிலும் இந்த ராட்சத வெடிப்புச் சப்தம் கேட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன” என்று கென்னடி மேலும் தெரிவித்தார்.
1927 வரை கிராக்கதோவ் அமைதி காத்துள்ளது. ஆனால் கடலடித்தரையில் மீண்டும் ஒரு வெடிப்பு, சீற்றம் ஏற்பட்டது. இதனால் கடலிலிருந்து கூம்பு வடிவ பாறை அமைப்பு ஒன்று மேலே துருத்தி வெளிவந்தது. 2 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இது அனாக் கிராக்கத்தோவ் தீவு ஆனது, அதாவது கிராக்கத்தோவின் குழந்தை என்று இது அழைக்கப்படுகிறது.
“இன்னும் நிறைய மேக்மா, லாவா கீழிருந்து மேலே வந்து கொண்டுதான் இருக்கிறது” என்று கூறுகிறார் கென்னடி.
எனவே இன்னும் சுனாமி பேரலைகளுக்கு வாய்ப்பிருப்பதால் சிறிது காலம் கடற்கரைப் பக்கம் யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
சுனாமி அலைகளைக் கணிக்க முடியாது ஏனெனில் நிலநடுக்கம் இல்லாமலேயே இந்தச் சுனாமி அலைகள் வரலாம் என்று குவீன்ஸ்லாந்து பல்கலைக் கழக எரிமலையியல் நிபுணர் தெரெசா உபைத் எச்சரிக்கிறார்.  மேலும் அவர், “எரிமலை கடற்கரைக்கு அருகில் இருப்பதால் எச்சரிக்கை விடுக்கக்கூட நேரமிருக்காது, சுனாமி அலைகள் வெகுவேகமாக பயணிக்கும் தன்மை கொண்டது” என்றார். tamil.thehindu

Post a Comment

0 Comments