Ticker

6/recent/ticker-posts

கிந்தோட்ட சம்பவத்தினால் சிங்களவர்கள்தான் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் - ஞானசார தேரர்



(சுடர் ஒளி  வார இதழுக்கு வழங்கிய செவ்வி)

நாட்டில் நீண்ட காலமாகத் தொடர்ந்துவரும் இனப்பிரச்சினைக்கு பேச்சுகள் மூலமாகத்தான் தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியும். இதனை ஆரம்பத்திலேயே அரசியல் தலைவர்கள் செய்திருந்தால் நாட்டில் யுத்தம்கூட ஏற்பட்டிருக்காது. தற்போது இடம்பெறும்  சிங்கள- முஸ்லிம் இனமுறுகல்களுக்கும் தீர்வைப் பெற்றுக்கொள்ளும் வகையில் சர்வமதத் தலைவர்களின் பங்குபற்றலுடன் ஆணைக்குழுவொன்றை அமைக்க வேண்டும் என்றே நாம் அரசை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம். எனினும், அரசு இவை தொடர்பில் அசமந்தப் போக்குடன் செயற்படுவதே பிரச்சினைகள் பெரிதாவதற்கு வழிசமைக்கின்றன என்று பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் விசனம் வெளியிட்டார்.

நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கிந்தோட்ட சம்பவம் உள்ளிட்ட சில முக்கியமான விடயங்கள் தொடர்பில்

சுடர் ஒளி| வார இதழுக்கு வழங்கிய விசேட செவ்வியின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் வழங்கிய முழுமையான செவ்வி வருமாறு:

கேள்வி: நாட்டில் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கிந்தோட்ட இனமுறுகல் சம்பவத்தின் பின்னணி என்ன என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?

பதில்:- எந்தவொரு இனமாக இருந்தாலும் இவ்வாறான சர்ச்சைகள் வருவது இயல்பானதே. இனங்களுக்கிடையில் மட்டுமன்றி, இனங்களுக்குள்ளும் ஏதாவது ஒருவிதத்தில் குழப்பங்களும் - மோதல்களும் வருவதை எவராலும் தடுக்கமுடியாது. ஆனால், இனங்களுக்குள் இடம்பெறுவது சண்டையாகவும் ஓர் இனம் இன்னொரு இனத்துடன் மோதுவது கலவரமாகவும் பார்க்கப்படுவதே இதற்கெல்லாம் மூலகாரணங்களாக இருக்கின்றன. அந்தவகையில், சிறிய விபத்தொன்றினால்தான் இந்த கிந்தோட்ட முறுகல் நிலைமை ஆரம்பமானது என்று தெரியவந்துள்ளது. விபத்தென்பது முஸ்லிம் பகுதி, சிங்களப் பகுதி, தமிழர் பகுதி என பார்த்துக்கொண்டுவராது.  இது சாதாரணமாக இடம்பெறும் ஓர் அசம்பாவிதமாகும்.

எனினும், இங்கு விபத்து ஏற்பட்டமைக்கும் ஒரு காரணம் உள்ளது. அதாவது, கிந்தோட்ட, பந்துலுகொட எனும் பகுதியானது 3 ஆயிரம் முஸ்லிம் குடும்பங்கள் வாழும் ஒரு நகரமாகும். இங்குள்ளவர்கள் மாணிக்கக்கல் வர்த்தகத்தையே பிரதான தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு மாணிக்கக்கல் விற்பனை செய்யும் கடைகள் அதிகமாக இருப்பதால், அக்கடைகளுக்கு முன்னால் வாகனங்கள் நிறுத்தத்தடை என்று நீண்ட வரிசையில் பதாதைகள் போடப்பட்டுள்ளன.

இது வீதியில் இரு பக்கமும் உள்ள நடைபாதையில் காணப்படுகின்றமையால், நடந்து செல்பவர்கள் கூட வீதிக்கு இறங்கியே செல்லவேண்டிய நிலைமை காணப்படுகிறது. இது பாதசாரிகளுக்கு மட்டுமன்றி, வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளுக்கும் பாரிய இடையூறாகவே நீண்டகாலமாக இருந்து வருகிறது. இதனால்தான் அன்றையதினம் கிந்தோட்டயில் மோட்டார் சைக்கிள் விபத்தும் ஏற்பட்டது.

உண்மையில் இது சிறியதொரு விபத்தாகும். ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அப்பிரதேசத்தைச் 
சேர்ந்த கியாஸ் எனும் அரசியல்வாதியொருவர், குறித்த மோட்டார் சைக்கிளில் இருந்த இரண்டு சிங்கள இளைஞர்களை கடுமையான சொற்களால் எச்சரித்து அனுப்பியுள்ளார்.

இந்தக் கோபம் குறித்த இளைஞர்களுக்கு இருக்க, மைதானத்துக்கு மாலை வேளையில் விளையாட வந்த சில முஸ்லிம் சிறுவர்களை அங்குள்ள சிலர் அடித்து அனுப்பியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, குறித்த அரசியல்வாதி சில முஸ்லிம் இளைஞர்களை இணைத்துக்கொண்டு அங்கு சிறுபான்மையாக வாழும் சிங்களவர்களின் வீடுகளுக்கு கற்களாலும் பொல்லுகளாலும் தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சிங்கள இளைஞர்கள் விகாரையில் கூடியபோதுதான் பொலிஸாரினால் தாக்கப்பட்டு கலைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸார் இவ்வாறு செயற்பட்டதையடுத்து சில முஸ்லிம் இளைஞர்கள் சிங்களப் பிரதேசத்திலுள்ள மின்குமிழ்களை உடைத்து, இரவு வேளையில் வீதியில் தனியாகச் சென்ற சில சிங்களவர்களைத் தாக்கியுள்ளனர். இதனால், ஐவர் காயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதனால் ஏற்படவிருந்த பாரிய இனக்கலவரத்தையும் நாம்தான் கட்டுப்படுத்தினோம்.

எம்மைப் பொறுத்தவரை இந்தச் சம்பவமானது, அடுத்த உள்ராட்சிமன்றத் தேர்தலை இலக்காக வைத்து அரங்கேற்றப்பட்ட ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. நிச்சயமாக இதற்கு அப்பிரதேச முஸ்லிம்கள் பொறுப்புக் கூறியே ஆகவேண்டும்.

கே: இந்தச் சம்பவத்தையடுத்து அரசினாலும், பாதுகாப்புத் தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள் திருப்தியளிக்கும் வகையில் இருக்கின்றனவா?

ப: இவ்வாறான சிங்கள- முஸ்லிம் பிரச்சினைகள் இடம்பெறுவது ஒன்றும் நாட்டில் இது முதன்முறையல்ல. அளுத்கம கலவரமும் தேரர் ஒருவரை தாக்கியதையடுத்துத்தான் இடம்பெற்றது. ஆனால், இதற்கு காரணமானவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
அத்தோடு, இதனால் பாதிக்கப்பட்ட தேரர் தொடர்ந்தும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்தே வருகிறார். அவர் விகாரையில் புற்களை செதுக்கிக் கொண்டிருக்கும்போது சில முஸ்லிம் இளைஞர்கள் வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்து அதனை முறுக்கி புகையை வெளியேற்றுவது,
கிண்டலடிப்பது என இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இது தொடர்பில் அவரால் பொலிஸில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ள போதிலும், குறித்த இளைஞர்களுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  சிங்களவர்களுக்கு ஒரு சட்டமும் முஸ்லிம்களுக்கு ஒரு சட்டமும் தான் இங்கு கடைப்பிடிக்கப்படுகின்றன. கிந்தோட்ட சம்பவத்திலும் சிங்கள இளைஞர்களே அதிகளவாக கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதிகமாக காயங்களுக்குள்ளாகியுள்ளவர்களும் அவர்களே. எனவே, இவ்வாறான இனமுறுகல் நிலைமை தொடர்பில் அரசினாலும் பாதுகாப்புத் தரப்பினராலும் மேற்கொள்ளப்படும் சம்பவங்களையிட்டு ஒருபோதும் எம்மால் திருப்தியடைய முடியாது.

கே: கிந்தோட்ட சம்பவத்தினால் முஸ்லிம்கள்தானே அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்...

ப: இது முற்றுமுழுதாக பொய்யாகும். சிங்களவர்கள்தான் இந்தப் பிரச்சினையால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அமைச்சர் வஜிர அபேவர்தனவும் அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால், இவ்விவகாரத்தை தமிழ் ஊடகங்கள் கதைப்பதுபோல சிங்கள ஊடகங்கள் கதைக்காமல் இருப்பதால்தான் சிங்களவர்களின் பாதிப்புகள் எதுவும் வெளியில் தெரிவதில்லை.

கே: அளுத்கம கலவரத்துக்கும் முஸ்லிம்கள்தான் காரணம் என நீங்கள் இன்னும் நம்புகின்றீர்களா?
ப: நிச்சயமாக. முஸ்லிம் அடிப்படைவாதிகளால் ஆரம்பிக்கப்பட்ட இனவாத செயற்பாட்டையடுத்துத்தான் இந்தக் கலவரம் சூடுபிடித்தது. இதுதான் உண்மையும் கூட.

கே: கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுபல சேனாவின் ஊடகவியலாளர் சந்திப்பின்போது இச்சம்பவம்போல மேலும் பல சம்பவங்கள் நடக்கும் என்று எச்சரித்தீர்களே.... ஏன்? எதற்காக இந்த எச்சரிக்கை?
ப: ஆம். இந்நாட்டில் முஸ்லிம்களால் ஏற்படும் சிக்கல்கள் தொடர்பில் நாம் கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து சுட்டிக்காட்டிக்கொண்டுதான் இருக்கிறோம்.

எனினும், இவற்றை மஹிந்த அரசும் சரி, மைத்திரி அரசும் சரி கட்டுப்படுத்தியதாகத் தெரியவில்லை. இந்நிலையில், 1915 ஆம் ஆண்டு முதலாவது சிங்கள முஸ்லிம் கலவரம் நடைபெற்ற விகாரையில் கடந்த ஒக்டோபர் மாதம் பெரஹெரா உற்சவம் இடம்பெற்றபோதும் முஸ்லிம்கள் அதற்கு கற்கள் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், சிங்கள இளைஞர்கள் உக்கிரமடைந்து மறு தாக்குதல் நடத்தத் தயாராகியபோது, முஸ்லிம்கள் தேரர்களிடம் மன்னிப்புக் கேட்டதையடுத்தே நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இவ்வாறு பல்வேறு சம்பவங்கள் நாட்டில் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. எம்மிடம் இவற்றுக்கான அனைத்து ஆதாரங்களும் இருக்கின்றன.

அத்தோடு, கிந்தோட்ட சம்பவத்தின்போதும் முஸ்லிம் அரசியல்வாதிகள் தான் நேரடியாக விஜயம் மேற்கொண்டு, இந்தச் சம்பவத்தை ஏதோ பெரிசாக சித்திரிக்க முயற்சி செய்தனர். இவர்களால் தான் காடுகள் அழிக்கப்படுகின்றன, தமிழ்- சிங்களவர்களின் பூர்வீக காணிகளில் சட்டவிரோதக் குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன. முறையின்றி வீடுகள் கட்டப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடுகளால் நாட்டில் வாழும் சிங்களவர்கள் பாரிய அதிருப்தியுடனும் - கோபத்துடனும் தான் தற்போது காணப்படுகிறார்கள்.

எம்மிடம் ஆதாரங்கள் எல்லாம் கைவசம் இருந்தும்கூட, மிகவும் பெறுமையாகவே தொடர்ந்தும் இருந்துவருகிறோம். நாம் இவற்றை மட்டும் வெளியிட்டால் நாட்டில் நிச்சயமாக இரத்த ஆறே ஓடும். இந்நிலையில், ஒரு கட்டத்துக்கும் மேல் மக்களும் பொறுமையாக இருக்கமாட்டார்கள் என்றே நாம் இதன்போது எச்சரித்தோம். இதற்கு முன்னர் இவ்விவகாரங்களுக்கு பேச்சினூடாக தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

கே: இனவாத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த இவ்வரசினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பில் உங்களின் கருத்து என்ன?

ப: அரசு என்னதான் இதுவரை செய்துள்ளது? முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் நல்லிணக்க செயலணியும் அமைச்சர் மனோகணேசனின் நல்லிணக்க அமைச்சும் நாட்டில்தான் இருக்கின்றன. ஆனால், இதுவரை ஒருதடவையேனும் எம்முடன் பேச்சு நடத்தியுள்ளார்களா?- இல்லை.
பிரச்சினையை மூடி மறைக்கத் தான் முயற்சிக்கின்றார்களே ஒழிய, அதனை முடிவுக்கு கொண்டுவர இந்த அரசும் சரி, மஹிந்த அரசும் சரி ஒருதடவையேனும் முயற்சித்ததாகத் தெரியவே இல்லை. மாறாக, இதனை வைத்து அரசியல்தான் செய்து வருகிறார்கள்.
நாமும் இதுவிடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சர்வமதத் தலைவர்களின் ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு அரசைத் தொடர்ந்தும் வலியுறுத்திக் கொண்டுதான் இருக்கிறோம். எனினும், இன்னும் அது நடைபெற்றதாகவே தெரியவில்லை. குறைந்தது இனவாத சம்பவங்கள் நடைபெறும்போது சர்வமதத் தலைவர்களுடன் அரச தலைவர்கள் பேச்சு நடத்தியது கூட இல்லை. இப்படியிருக்கும்போது நாம் எவ்வாறு அரசு குறித்து மகிழ்வது, இதனை மீறி சில விடயங்களை நாம் வெளியிட்டால் எம்மீது தேவையில்லாமல் வழக்குகள்தான் தொடரப்படுகின்றன. நீதிமன்றில் ஏறியிறங்கிக் கொண்டிருக்கிறோமே ஒழிய, இனவாத சம்பவங்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாகத் தெரியவே இல்லை. இதனை சிங்களவர்கள் எதிர்த்தால் இனவாதி என்றும் முத்திரை குத்துகிறார்கள்.

கே: நாட்டில் கடந்த சில காலங்களாக நடைபெற்றுவரும் கிந்தோட்ட உள்ளிட்ட சில இனவாத சம்பவங்களுக்கு உங்களின் பெயர் தானே அடிபடுகிறது. அதாவது, பொதுபல 
சேனா தான் இவற்றுக்குக் காரணம் என்று கூறப்படுகின்றதே?

ப: நாமும் இதனை அறிவோம். மஹிந்த அரசு காலத்தில் ஒரு பெரிய கட்டடம் கட்டப்பட்டால் அது மஹிந்தவுடையது எனக் கூறியதும், தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் வடக்கில் எந்தவொரு கொலை, கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றாலும் அவர்கள் மீது பழிசுமத்தப்பட்டதும் நாட்டில் சாதாரணமாக இடம்பெற்றவையாகும்.
அதுபோலத்தான் தற்போது நடைபெறும் இனவாத சம்பவங்களுக்கும் தேவையில்லாமல் எமது பெயர் அடிபடிகிறது. அதாவது, ஒரு குறியீட்டு பெயராகவே எமது அமைப்பின் பெயர் மாறிவிட்டது. இதனால்தான் பொலிஸாரும் எம்மைத் தொடர்ந்தும் கண்காணித்து வருகிறார்கள்.

கே: உண்மையில், இனவாத சம்பவங்களுக்கு நீங்கள் ஆதரவு அளிக்கின்றீர்களா? மக்களுக்கும் இதுதொடர்பில் நீண்டகாலமாக புரிந்து கொள்ளமுடியாமல் இருக்கிறதே?

ப: நாம் வாழும் சூழலை எடுத்துக்கொள்ளுங்கள். எவ்வளவு சிறிதாகவும் அமைதியாகவும் இருக்கின்றது. எமக்கு பாதுகாப்புக்குக்கூட எவரும் இல்லை. ஆனால், ஞானசார தேரர் என்றால் மோசமானவர். அவரை சுற்றி எப்போதும் ஆட்கள் இருப்பார்கள். அவரை நெருங்கவே முடியாது என்று சமூகத்தில் ஒரு மாய பிம்பம் ஏற்படுத்தப்பட்டுவிட்டது.
ஆனால், நாம் இனவாதிகளோ இனவாத சம்பவங்களுக்கு ஆதரவானவர்களோ அல்லர் என்பதை பலரும் அறிவார்கள். நாம் ஆரம்பத்திலிருந்தே இனவாத சம்பவங்களுக்கு பேச்சினூடாகத்தான் தீர்வு காணமுடியும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
ஏன், தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்திலும் பேச்சினூடாக பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முயன்றிருந்தால் நாட்டில் தமிழர்கள் பின்னோக்கித் தள்ளப்பட்டும், சிங்களவர்கள் பாதிக்கப்பட்டும் இருந்திருக்க மாட்டார்கள் என்பதே எமது நிலைப்பாடு.
ஆனால், நாம் மனதில் பட்டதை அப்படியே கூறுவதால்தான் எமக்கு இந்த இனவாத முத்திரை குத்தப்பட்டுள்ளது என்பதையும் நாம் அறிவோம். என்ன செய்ய, உள்ளே ஒன்றும் வெளியே ஒன்றையும் பேச நாம் ஒன்றும் அரசியல்வாதிகள் இல்லையே.

கே: ஜனாதிபதி மைத்திரிபால 
சிறிசேனவுடன் நீங்கள் இதுவிடயங்கள் தொடர்பில் பேச்சு நடத்தியுள்ளீர்களா?

ப: ஆம்! பலமுறை கலந்துரையாடியும், நிலைமைகளை விளக்கியுமுள்ளோம். ஆனால், எம்மை மட்டுமன்றி, அனைத்து மதத்தலைவர்களையும் ஒன்றிணைத்து பேச்சு நடத்தினால் மட்டுமே இவற்றைக் கட்டுப்படுத்த முடியும்.

கே: புதிய அரசமைப்பு ஸ்தாபிக்கப்படுகின்றமைக்கு நீங்கள் தொடர்ந்தும் எதிர்ப்பையே வெளியிட்டு வருகின்றீர்கள். அப்படியானால் நாட்டில் வாழும் சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண உங்களால் முன்வைக்கப்படும் ஆலோசனைகள்தான் என்ன?

ப: நாட்டிலுள்ள சிறுபான்மையினத்தவர்களுக்கன்றி, அவர்களது தலைவர்களுக்கே இப்போது பிரச்சினைகள் காணப்படுகின்றன. தமது அரசியல் இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவே அவர்கள் தற்போது தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள்.
புதிய அரசமைப்பொன்று வருமாக இருந்தால் வடக்கு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படுமா?, அவர்களின் நீர்ப்பிரச்சினை தீர்க்கப்படுமா? ஆவா குழுவின் அட்டகாசம் அழிக்கப்படுமா? வில்பத்துவில் மீண்டும் மரங்கள் முளைக்குமா? அல்லது அங்கு காடு அழிக்கப்படுவது தான் தடுத்து நிறுத்தப்படுமா?- ஒன்றும் நடைபெறப்போவதில்லையே.
வடக்கில் வாழும் 30 சதவீத தமிழர்களுக்காக மட்டும் புதிய அரசமைப்பொன்று அமைக்கப்படுவதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? ஏன், அவர்கள்கூட இதனை கேட்கவில்லையே. எம்மைப் பொறுத்தவரை மொழிப் பிரச்சினையைத் தீர்த்தாலே நாட்டின் பாதிப்பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதாகிவிடும் என்பதை உறுதியாக நம்புகிறோம்.
அதாவது, பெரும்பான்மையாக தமிழர்கள் வாழும் யாழ்ப்பாணத்தில் தமிழ்பேசத் தெரிந்த எத்தனை பொலிஸார் உள்ளனர்? அங்கு கடமைக்காகச் செல்லும் பொலிஸ் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தமிழைக் கற்பிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் என்ன? ஒன்றுமில்லையே. மொழிப்பிரச்சினையை தீர்க்காமல் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண்பது? எனவே, அரசமைப்பு என்பது தேவையில்லாத ஒன்று. மேலும், இது இறுதிவரை நாட்டில் ஸ்தாபிக்கப்படமாட்டாது என்பதும் எமக்கு நன்றாகத் தெரியும்.

கே: பொதுஜனபெரமுன எனும் புதிய கட்சியை ஆரம்பித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடுத்த தேர்தலில் களமிறங்கவுள்ளார். இதனை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா?

ப: உட்கட்சிக்குள் நடப்பவை தொடர்பில் நாம் விமர்சனம் செய்யக்கூடாது. ஆனால், அதிகார ஆசையால் நடைபெறும் இவ்வாறான செயற்பாடுகளைப் பார்க்கும்போது அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற அச்சம் ஏற்படுகிறது. இதனால் சிறந்த ஒரு மாற்றம் நிகழுமாக இருந்தால் பிரிவினைவாதத்தை விரும்பாத தமிழர்களும் இதற்கு ஆதரவளிக்க முன்வர வேண்டும்.
ஏனெனில், இலங்கையை ஆட்சிசெய்த எத்தனையோ தமிழ் மன்னர்கள், இது பௌத்த நாடு என்ற தார்மீகத்தை உணர்ந்து பௌத்தத்தையும் சிங்களத்தையும் பாதுகாத்தார்கள். தமிழ்க் கலாசாரத்தோடு சிங்கள கலாசாரத்துக்கும் அவர்கள் முன்னுரிமை கொடுத்து வளர்த்தார்கள். எனவே, நாட்டுக்கு ஒரு நல்லது நடக்கவேண்டுமெனில் பிரிவினைவாதத்தை விரும்பாத தமிழர்களையும் எத்தரப்பாக இருந்தாலும் இணைத்துக்கொள்ள வேண்டும். இதனை நாமும் நிச்சயமாக வரவேற்போம்.

கே: உள்ராட்சி மன்றத் தேர்தலில் இணைந்து களமிறங்குமாறு பொதுபல சேனாவுக்கு பொதுஜன பெரமுன அழைப்பு விடுத்தால் உங்களின் பதில் என்ன?

ப: ஒருபோதும் இணையமாட்டோம். இவர்களுடன் மட்டுமன்றி, எந்தவொரு பெரிய கட்சிகளுடனும் நாம் இணைய மாட்டோம். ஏனெனில், நாம் எப்போதும் அரசியலில் ஈடுபடவேண்டும் என்றோ அரசியல் ரீதியாக நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றோ நினைத்ததில்லை. மாறாக, எமது கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும், வளர்த்தெடுக்க வேண்டும் என்பதுதான் எமது ஒரே குறிக்கோள். இதற்காகத்தான் இத்தனை வருடங்களாக நாம் போராடிக்கொண்டு வருகிறோம்.

இறுதியில் இடம்பெற்ற பொதுத் தேர்தலிலும், சந்தர்ப்பசூழ்நிலையால் தான் நாம் களமிறங்க வேண்டியேற்பட்டது. எனவே, மஹிந்தவுடன் இணைந்து மட்டுமல்ல, இத்தேர்தலில் தனியாகக் கூட நாம் நிற்கமாட்டோம்.

கே: சரி, இறுதியாக. நாட்டில் தற்போது தொடர்ந்துவரும் மதமாற்றுக் கலாசாரம், குறிப்பாக, மலையகத்தில் இடம்பெறும். இது குறித்து உங்கள் கருத்து...

அமெரிக்க சூழ்ச்சியாளர்களால் செய்யப்படும் ஒன்றே இது. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். அங்கிலிக்கன் கிறிஸ்தவர்களின் இந்தச் செயற்பாட்டினால் இந்துக்களும் பௌத்தர்களும் தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். இதுகுறித்து மலையகத்திலுள்ள பல தமிழ் புத்திஜீவிகள் எமக்கு முறைப்பாடளித்துள்ளனர்.
அதேநேரம், முஸ்லிம்களும் மதமாற்று செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். உண்மையில், கிறிஸ்தவர்களை விட, இவர்களின் மதமாற்றமே பாரதூரமானது. கிறிஸ்தவர்களின் மதமாற்றம் இந்துவையோ அல்லது பௌத்தத்தையோ மட்டும்தான் பாதிக்கும். ஆனால், முஸ்லிம்களின் மதமாற்றமானது மதங்களை மட்டுமன்றி, சிங்களம் மற்றும் தமிழ் கலாசாரத்தையே முற்றாக அழித்துவிடும். இதுதொடர்பிலெல்லாம் தமிழ்- சிங்களப் பிரதிநிதிகள் எவரும் வாயே திறக்காமல் இருப்பதுதான் கவலையளிக்கிறது.

Post a Comment

0 Comments