Ticker

6/recent/ticker-posts

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய ‘இலங்கை முஸ்லிம்களின் மாபெரும் வாழ்வுரிமை மாநாடு’

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய ‘இலங்கை முஸ்லிம்களின் மாபெரும் வாழ்வுரிமை மாநாடு’ கொழும்பு 10, மாளிகாகந்தை வைட் பார்க் மைதானத்தில் ஜமாஅத்தின் தேசிய தலைவர் எம். எப்.எம் ரஸ்மின் அவர்களின் தலைமையில் 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் திகதி (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற்றது.

ஆயிரக் கணக்கான முஸ்லிம்கள் ஒன்று திரண்ட ‘முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாட்டின்’ பிரகடனங்கள்.

★ 01. 2012ம் ஆண்டு 22ம் இலக்க உள்ளுராட்சி சபை தேர்தல் திருத்தச் சட்டம் மற்றும் உள்ளுராட்சி அதிகாரச் சபைகள் திருத்தச் சட்டம் உடனடியாக இரத்துச் செய்யப்பட வேண்டும். 

உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா அவர்களினால் கடந்த 24.08.2017ம் திகதி உள்ளுராட்சி சபைகள் தேர்தல் திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டதுடன் இந்த சட்ட திருத்தம் விவாதிக்கப்பட்டு 25.08.2017ம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 

தொகுதி மற்றும் விகிதாசாரம் என கலப்பு தேர்தல் முறையில் உறுப்பினர்களை தெரிவு செய்யும் வகையில் உள்ளுராட்சி சபைத் தேர்தல் சட்டம் திருத்தப்பட்டுள்ளது. மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை ஆகியவைகளில் தொகுதி ரீதியாக 60% விகிதாசாரத்தில் 40% உறுப்பினர்களை தெரிவு செய்யும் வகையில் இந்த திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 

இந்த சட்ட திருத்தம் மூலம் ஏற்படுத்தப்பட்ட கலப்பு தேர்தல் முறைமை சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதிகள், குறிப்பாக முஸ்லிம்களின் பிரதிநிதிகள் குறையும் நிலையை ஏற்படுத்தும். மேலும் தற்போது இலங்கை பூராகவும் இருக்கும் உள்ளுராட்சி சபைகளில் உறுப்பினர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகமாக்கப்பட்டுள்ளதுடன் முஸ்லிம்களின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை கனிசமான அளவு குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உள்ளுராட்சி சபைகள் ஊடாக முஸ்லிம் சமூகம் பெற்றுக் கொள்ள வேண்டிய பல சலுகைகளை இழக்கும் நிலை ஏற்படும் என்பதனால் இந்த திருத்த சட்டமூலத்தை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும் என்று இவ்வாழ்வுரிமை மாநாடு நல்லாட்சி அரசிடம் வேண்டிக் கொள்கிறது. 

★ 02. 1988ம் ஆண்டு 02ம் இலக்க மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டம் உடனடியாக இரத்துச் செய்யப்பட வேண்டும். 

மாகாண சபைகளில் 30% பெண்களின் பிரதிநிதித்துவம் இடம் பெற வேண்டும் என்ற நோக்கில் 2017ம் ஆண்டு ஜுலை மாதம் 26ம் திகதி உள்ளுராட்சி மற்றும் மாகாணச் சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா அவர்களினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட 1988ம் ஆண்டு 02ம் இலக்க மாகாண சபை தேர்தல் திருத்த சட்டம் 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ம் திகதி இன்னும் சில திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் நிறைவெற்றப்பட்டது. 

ஆரம்பத்தில் வெறுமனே மூன்று பக்கங்களை கொண்ட இந்த சட்ட மூலம் இறுதியில் 31 பக்கங்களை கொண்டு மிகப்பெரிய திருத்தமாக விஸ்வரூபம் எடுத்தது. அதில் மாகாண சபை தேர்தல் முறையை கலப்பு தேர்தல் முறையாக மாற்றியமைத்து தொகுதி வாரியாக 50% விகிதாசார முறையில் 50% உறுப்பினர்களை தெரிவு செய்யும் ஒரு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இத்திருத்தம் பாராளுமன்றத்தில் அவசர அவசரமாக திருத்தப்பட்டதுடன் சட்டமா அதிபர், தேர்தல் ஆணையாளர் மற்றும் அரசியல் நிபுணர்களின் எந்த ஆலோசனையும் பெறப்படாமல் நிறைவேற்றப்படதுடன், பாராளுமன்ற குழு கட்டத்தில் இத்தகைய பாரிய திருத்தத்தை செய்தமை பாராளுமன்ற நிலையாணைகளுக்கும், மரபுகளுக்கும் மாற்றமானது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், கபே மற்றும் பெப்ரல் போன்ற தேர்தல் கண்கானிப்பு குழுக்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியது. 

இத்தகைய விமர்சனங்களை கொண்டுள்ள இந்த சட்ட திருத்தம் மீண்டும் சிறுபான்மையினரை பாதிக்கும் விதத்தில் கலப்பு தேர்தல் முறைமையை அறிமுகம் செய்துள்ள சட்டம் என்பதால் இந்த சட்டத்தை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும் என்று இவ்வாழ்வுரிமை மாநாடு நல்லாட்சி அரசிடம் வேண்டிக் கொள்கிறது. 

★ 03. தற்போதுள்ள அரசியல் சாசனமே இடைக்கால அறிக்கையை விட சிறந்தது!

இலங்கை அரசியலமைப்பு சபை வழிப்படுத்தும் குழுவின் இடைக்கால அறிக்கை கடந்த 21.09.2017ம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. 116 பக்கங்களை கொண்ட இந்த இடைக்கால அறிக்கையில் வழிநடத்தற் குழுவால் தயாரிக்கப்பட்ட 44 பக்கங்களில் முன் மொழியப்பட்டுள்ள பரிந்துரைகள் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.

“வெளிவந்துள்ள இடைக்கால அறிக்கை நோய்க்கான தீர்வு கிடையாது. அரைகுறைத் தீர்வு. இத்தீர்வு ஒரு போதும் நோய்க்கு மருந்தாகாது. தொடர்ந்து போராட வேண்டிய நிர்பந்தத்தையே இடைக்கால அறிக்கை உருவாக்கியுள்ளது” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ‘இடைக்கால அறிக்கையானது தமது நீண்டகால கோரிக்கையான சமஷ்டி, சுய நிர்ணய உரிமை போன்ற அடிப்படை அபிலாஷைகளை பூர்த்தி செய்வதாக அமைந்திருக்கவில்லை’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் உள்ளிட்ட பல தரப்புகள் கடுமையாக விமர்சிக்கின்றனர். நாட்டை கூறுபோடும் பரிந்துரைகள் என்பதனால் சிங்கள பௌத்த மத பீடங்களும் இடைக்கால அறிக்கையில் முழுமையாக திருப்தியடையவில்லை. 

அரசியல் சாசன மாற்றத்திற்கான பரிந்துரைகள் அனைத்தும் இலங்கை நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும், பாதுகாப்பிற்கும், இனங்கள் மத்தியில் இருக்கும் நல்லுறவுக்கும் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதனாலும்  இலங்கை வாழ் முஸ்லிம்களின் நலனை இது கருத்தில் கொள்ளவில்லை என்பதனாலும்  இவ்வாழ்வுரிமை மாநாடு, இந்த இடைக்கால அறிக்கையை முற்றிலும் முழுதாக நிராகரிப்பதுடன் இதை அரசாங்கம் முற்றாக வாபஸ் பெற வேண்டும் என்றும் இது போன்ற ஒரு அரசியல் சாசன திருத்தம் தற்போது இலங்கைக்கு அவசியமற்றது என்றும் எதிர் காலத்திலும் இது போன்ற ஓர் அரசியல் சாசன திருத்தத்தை கொண்டு வரக் கூடாது என்றும் இவ்வாழ்வுரிமை மாநாடு நல்லாட்சி அரசிடம் வேண்டிக் கொள்கிறது. 

★ 04. நூறு சதவீத விகிதாசார தேர்தல் முறைமை மீண்டும் வேண்டும்

புதிய இடைக்கால அறிக்கையிலும் கலப்பு தேர்தல் முறையே பாராளுமன்ற தேர்தலுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன்படி பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 233 ஆக அதிகரிக்கின்றது. இந்த 233 உறுப்பினர்களில் தொகுதிவாரியாக 60% மும், அதாவது 140 உறுப்பினர்களும் விகிதாசார முறையில் 40% மும், அதாவது, 93 உறுப்பினர்களும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவார்கள்.

நடைமுறையில் உள்ள விகிதாசார தேர்தல் முறைமை சிறுபான்மை சமூகத்தின் ஒற்றுமையினையும் சிறுபான்மை சமூகங்கள் ஒரு கொடியின் கீழ் ஒன்றிணைவதற்கான வாய்ப்பினையும் பெற்றுத் தருவதோடு அதிக எண்ணிக்கையான பாராளுமன்ற பிரதிநிதிகளையும் பெறுவதற்கான சந்தர்ப்பத்தையும் கொண்டுள்ளது. இத்தேர்தல் முறைமை மாற்றத்திற்குள்ளாகி கலப்பு தேர்தல் முறைமை ஏற்படுத்தப்படும் போது சிறுபான்மை சமூகங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அதிகம். குறிப்பாக மாவட்ட ரீதியில் முஸ்லிம் சமுதாயத்திற்கு மிகப்பெரிய பாதிப்புகளை இது ஏற்படுத்தும். 
விகிதாசார தேர்தல் நடைமுறையில் இருக்கும் காலத்தில் முஸ்லிம் சமூகம் மாத்தளை, குருனாகல், புத்தளம், களுதரை போன்ற மாவட்டங்களில் இலகுவாக பாரளுமன்ற பிரதிநிதித்துவத்தினை பெறுவதற்கான சந்தர்ப்பம் இருந்தும் கூட இது வரை பெறப்படவில்லை. இவ்வாறிருக்கும் நிலையில் நல்லாட்சி அரசு கலப்பு தேர்தல் முறையை அறிமுகம் செய்வதன் ஊடாக முஸ்லிம் சமூக பிரதிநிதித்துவத்தை இன்னும் கனிசமான அளவில் குறைக்கும் நிலையை ஏற்படுத்துகிறது. 

ஆட்சியமைக்கும் போது சிறுபான்மை சமூகத்தினையும் சிறு கட்சிகளின் தேவைகளையும் உணர்த்தும் தன்மை விகிதாசார தேர்தல் முறையில் காணப்படுகிறது. இந்த சலுகை கலப்பு தேர்தல் முறையின் மூலம் இரத்துச் செய்யப்படுவது சிறுபான்மை சமூகங்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதியாகும் என்பதுடன், சிறுபான்மை மக்களின் வாக்கு பலத்தை பலவீனப்படுத்தும் ஆபத்தான் காரியம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.  

இந்த கலப்பு தேர்தல் முறை முஸ்லிம் அரசியல், தனித்துவ கட்சி மூலம் முன்னெடுக்கும் தனித்துவமான சில உரிமைகளையோ சலுகைகளையோ அரசியல் ரீதியில் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை இழக்கும் நிலையை ஏற்படுத்தும் என்பதால் அரசியல் சாசன மாற்றத்திற்கான இடைக்கால அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான கலப்பு தேர்தல் முறைமை இலங்கை அரசு உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும் என்று இவ்வாழ்வுரிமை மாநாடு நல்லாட்சி அரசிடம் வேண்டிக் கொள்கிறது. 

மேலும் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டத்திலும் திருத்தப்பட்ட கலப்பு தேர்தல் முறை முற்றாக இரத்துச் செய்யப்பட வேண்டும் என்பதுடன் ஏற்கனவே நடைமுறையில் இருந்த விகிதாசார தேர்தல் முறைமையே 100மூ மீண்டும் நடைமுறைப்படுத்த இலங்கை அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இவ்வாழ்வுரிமை மாநாடு நல்லாட்சி அரசிடம் வேண்டிக் கொள்கிறது. 

★ 05. வடக்கு கிழக்கு இணைப்பை முஸ்லிம்கள் ஒரு போதும் ஏற்க மாட்டோம்

வடக்கு கிழக்கு ஆகிய இரண்டு மாகாணங்களை ஒன்றாக இணைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இடைகால அறிக்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

தமிழ் பேசும் மக்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டுமானால், வடக்கு - கிழக்கு இணைக்கப்பட்டு தனிப் பிராந்தியம் உருவாக்கப்பட வேண்டுமென தமிழ் அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர். வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் என்றும் இணைந்த வடக்கு கிழக்கில் முஸ்லிம்களுக்கு தனியலகு வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம் என்றும் அது தொடர்பில் கலந்துரையாட முஸ்லிம் தலைவர்களுக்கு அழைப்பு விடுகின்றோம் என்றும் முஸ்லிம் அரசியல் தலைவர்களிடம் கோரிக்கை முன்வைக்கின்றனர். 

வரலாற்று ரீதியாகவும் சமுதாய பாதுகாப்பு ரீதியாகவும் இதை பார்க்கும் போது முஸ்லிம்கள் வடக்கு கிழக்கு இணைப்பை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாத நிலையில் இருக்கிறோம்.

இலங்கையில், கிழக்கு மாகாணம் என்பது தனி மாகாணமாக வரலாற்று நெடுகிலும் இருந்து வந்துள்ளது. கிழக்கு மாகாணத்தில், 39% தமிழர்கள் வாழ்கின்றனர். அதே போல், 37% முஸ்லீம்கள் வாழ்கின்றனர். கிழக்கு மாகாணம் வட மாகாணத்துடன் இணைந்தால் முஸ்லிம்கள் 17% வீழ்ச்சியடையும் அபாயம் உள்ளது. வடக்கு கிழக்கு இணைப்பு என்பது முஸ்லீம் சமூகத்தை சிறுபான்மையினரிலும் சிறுபான்மையினராக மாற்றும் ஒரு முறை என்பதால் இதை முஸ்லிம்கள் எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

மேலும் 1987ம் ஆண்டு நடைமுறைபடுத்தப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் காரணமாக தான் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்தது. அதுவும் ஒரு வருடத்திற்கே அந்தச் சட்டம் நடைமுறையில் இருந்தது. அது தொடர்ந்திருக்க வேண்டுமாயின் 1988 டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னதாக அந்த பிரதேசத்தில் மக்கள் வாக்கெடுப்பை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை. 1990ல் வட கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக இருந்த வரதராஜா பெருமால் இந்த மாகாணச் சபை பிரதேசத்தை தனி நாடாக ஒரு தலைபட்சமாக பிரகடனப்படுத்தினார். 

இது இலங்கை நாட்டை கூறுபோடுவதற்கான ஒரு செயலாகும். இதுவொன்றே வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படக் கூடாது என்பதற்கு போதுமான எடுத்து காட்டாகும்.

எனவே, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படுவது என்பது இந்த நாட்டின் ஒருமைபாட்டை கூறுபோட்டு நாட்டை துண்டாடும் செயலாக முஸ்லிம்கள் பார்ப்பதுடன் இலங்கை நாடு ஒரு நாடாகவே தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதை நல்லாட்சி அரசுக்கு வலியுறுத்திக் கூறிக் கொள்கிறது. பல்லாயிரக் கணக்கான உயிர்களை இராணுவ வீரர்கள் தியாகம் செய்து தாய் நாட்டை காப்பாற்றியுள்ளார்கள். இதில் முஸ்லிம்களின் பங்களிப்பும் பெருமளவு இடம் பெற்றுள்ளது. இலங்கை பொலிஸ் உட்பட முப்படை வீர்ர்களின் இந்த தியாகத்தை துச்சமாக மதித்து எந்த சந்தர்ப்பத்திலும் இந்த நாட்டை கூறு போடும் எந்த செயற்பாட்டையும் நல்லாட்சி அரசு முன்னெடுக்கக் கூடாது என்று இவ்வாழ்வுரிமை மாநாடு நல்லாட்சி அரசிடம் வேண்டிக் கொள்கிறது. 

★ 06. பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் மாகாணங்களுக்கு வழங்கப்படக் கூடாது.

இலங்கை அரசியல் சாசனத்தின் 13 ஆவது திருத்த சட்டம் வந்த பின்னர் நாட்டில் வித்தியாசமான எண்ணங்களை கொண்ட ஐந்து ஜனாதிபதிகள் பதவியில் இருந்துள்ளனர். அவர்களில் ஒருவர் கூட பொலிஸ், காணி அதிகாரங்களை தனி மாகாணங்களுக்கு வழங்கவில்லை. இலங்கை வாழ் மக்கள் அதனை விரும்பவுமில்லை. 

மாகாணங்களுக்கு மத்தியில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் கொடுக்கப்பட்டால் இலங்கை நாட்டின் ஒருமைப்பாடு மீண்டும் கேள்விக்குரியாகி விடும். இந்தியா போன்ற விசாலமான நிலப்பரப்பையும் அதிக அளவிலான இன, மொழி வேறுபாடுகளையும் கொண்ட ஒரு நாட்டுக்கு இவ்வாறான அதிகார பகிர்வுகள் சாத்தியாமானதாக இருந்தாலும் இலங்கை போன்ற குறிப்பிட்ட எண்ணிக்கையில், சிரிய அளவிலான நிலப்பரப்பை கொண்ட ஒரு நாட்டில் இவ்வாறான அதிகார பகிர்வுகள் இன ரீதியாகவும் பிராந்திய ரீதியாகவும் பிளவுபட்டு இன்னும் இன பிரச்சனைகளை அதிகரிக்கச் செய்யும் என்பதுடன் நிர்வாகம் செய்வதற்கு நடைமுறை சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதனால் எக்காரணத்தை கொண்டும் மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாது என்று  இவ்வாழ்வுரிமை மாநாடு நல்லாட்சி அரசிடம் வேண்டிக் கொள்கிறது. 

★ 07. இலங்கை ஒற்றையாட்சியாகவே இருக்க வேண்டும்.

அரசியலமைப்பில் 1972ல் இருந்து இலங்கையின் ஒருமைபாட்டை நிறுவுவதற்கான தெளிவான கட்டளை அடங்கியிருந்தது. 1978 ஆம் ஆண்டில், இரண்டாவது குடியரசு அரசியலமைப்பை நிறைவேற்றிய போதும், எந்த மாற்றமும் இல்லாமல் அரசியலமைப்பில் அதே ஏற்பாடு சேர்க்கப்பட்டது. 

கடந்த 45 ஆண்டுகளாக அரசியலமைப்பை ஸ்தாபிப்பதற்கான ஒற்றை ஆட்சியின் விதிகள் உள்ளன. இலங்கையின் முதல் குடியரசு அரசியலமைப்பு மற்றும் இரண்டாம் குடியரசு அரசியலமைப்பில் “இலங்கையின் குடியரசு ஒரு ஒற்றை அரசு” என்று விவரிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது முன்மொழியப்பட்டுள்ள இந்த புதிய அரசியலமைப்பின் ஆங்கில மொழியில் உள்ள Unitary State - ஒற்றை அரசு என்ற வார்த்தையை அகற்றி “ஏகீய இராஜ்ஜிய / ஒருமித்தநாடு என்ற வார்த்தையை ஆங்கிலம் மற்றும் தமிழ் பிரதிகளில் சேர்க்க வேண்டும் என்றே முன்மொழியப்பட்டுள்ளது.
இதில் தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும் நுணுக்கமாக நல்லாட்சி அரசு ஏமாற்றுகின்றது. 

வார்த்தை ஜாலங்களில் விளையாடுவதை விட தெளிவான நிலைபாடுகளை அறிவிப்பதே அரசின் பொறுப்பாகும். தமிழ் மொழியில் தற்போது அரசியலமைப்பில் ஒற்றையாட்சி என்ற பதமே உள்ளது. ஆனால் அதனை தற்போது நீக்கிவிட்டு ஒருமித்த நாடு என்ற குறிப்பிட்டுள்ளனர். ஒருமித்த நாடு என்பது பல பிரிவுகளை ஒன்றிணைப்பதற்கு கூறும் விடயமாகும். எனவே தமிழர்களுக்கு தனி அதிகாரங்கள் கிடைக்கும் மாயத்தோற்றத்தை இதில் ஏற்படுத்த பார்க்கின்றனர். ஆனால் சிங்களத்தில் ஏக்கீய இராஜ்ஜியம் எனும் பதமே பயன்படுத்தப்பட்டுள்ளது. 

அதாவது ஒற்றையாட்சியாகும். ஒற்றையாட்சி என்பது பிரிக்க முடியாத நாடு என்பதாகும். ஒருமித்த நாடு எனும் வார்த்தை சமஷ்டி முறை கையாளும் நாடுகளுக்கு அதாவது அதிகார பகிர்வு கொடுக்கப்படும் நாடுகளுக்கு பயன்படுத்தும் வார்த்தையாகும். இந்த முறையில் ஒரே நாடாக இருந்தாலும் பல சுய அதிகாரங்கள் மாநிலங்களுக்கோ மாகாணங்களுக்கோ வழங்கப்படும்.

சர்வதேச சக்திகளின் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காகவும் இந்த அரசாங்கத்தை நியமித்துக் கொள்வதற்கு  உதவி செய்த வெளிநாட்டு உளவு அமைப்புக்கள் மற்றும் வெளிநாட்டு சக்திகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவும் அரசாங்கத்தை அமைக்க உதவியவர்கள் புதிய அரசியலமைப்பு எங்கே? என்று கேட்கின்றனர் என்பதற்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டை கூறு போடும் விதத்தில் எந்த நடவடிக்கையும் இலங்கை அரசு மேற்கொள்ளக் கூடாது. 

இலங்கை நாடு ஒரே நாடாகவும் ஒற்றையாட்சியாகவும் பிரிக்க முடியாத, பிளவு படுத்த முடியாத நாடாகவும் இருத்தல் வேண்டும். அதே நேரம் அனைத்து மத, இன, மொழி மக்களினதும் உரிமைகளும் சரி சமமாக வழங்கப்பட்டு வாழ்வுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுடன் வரலாற்று நெடுகிலும் காணப்பட்டதை போன்று ஒற்றையாட்சி எனும் பெயரில் இயங்குவதே மிகவும் பொருத்தமானது. எனவே இதில் எந்த மாற்றத்தையும் நல்லாட்சி அரசு மேற்கொள்ளக் கூடாது என்று இவ்வாழ்வுரிமை மாநாடு நல்லாட்சி அரசிடம் வேண்டிக் கொள்கிறது. 

★ 08. இலங்கை நாட்டுக்காக உயிர் நீத்த 07 முஸ்லிம்களை தேசிய வீர்ர்களாக உடன் அறிவிக்க வேண்டும்.

1818 ஆம் ஆண்டு பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக ஊவா வெல்லஸ்ஸ பகுதியில் கிளர்ச்சி செய்த 19 சிங்களத் தலைவர்கள், நாட்டுக்காக போராடிய தேசிய வீரர்கள் என வர்த்தமானி அறிவித்தல் மூலம் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 08ம் திகதி ஜனாதிபதி மைத்ரீபால சிறிசேன பிரகடனம் செய்திருந்தார். இந்த நிலையில் 1818ஆம் ஆண்டு தேசத் துரோகிகளாக பிரகடனம் செய்யப்பட்ட மேலும் பலர் தேசிய வீரர்களாக அறிவிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதே போல், ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராக தாய் நாட்டுக்காக போராடி உயிர் நீத்த 07 முஸ்லிம்களை 1804 ஜுன் 7 ஆம் திகதி தேசத்துரோகிகளாக பிரத்தானிய ஆட்சி பிரகடனம் செய்தது. 

✱ சேகு தீதீ (தோப்பூர்)
✱ முகம்மது, சலாம் பதி உடையார் (குச்சவெளி)
✱ அபூபக்கர் ஈஸா (முகாந்திரம் சம்மாந்துறை)
✱ மீரா ஹுசைன் காரியப்பர் (ராய்முனை)
✱ உஸைன் லெப்பை உதுமான் லெப்பை (ராய்முனை)
✱ அனீஸ் லெப்பை (மருதமுனை)
✱ பீர் முஹம்மது மவ்லவி

ஆகியோரே தேசத்திற்காக போராடியதற்காக பிரித்தானிய அரசினால் தேசத்தின் துரோகிகளாக அறிவிக்கப்பட்டவர்களாவர்.

ஆதாரம்: இலங்கை சட்டக்கோவை பாகம் 1,பக்கம் 77,78. (1786-1833)

இவ்வாறு நாட்டுக்காக போராடிய முஸ்லிம்களை தேச துரோகிகளாக அறிவிக்கப்பட்ட வர்த்தமானியை இரத்து செய்து  முஸ்லிம் தலைவர்கள் 07 பேரையும் நாட்டிற்காக போராடிய தேசிய வீரர்கள் என பிரகடனம் செய்யுமாறு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கடந்த 28.01.2017 அன்று சம்மாந்துறையில் நடத்தப்பட்ட ‘தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டில்’ அரசிடம் கோரிக்கையான முன்வைத்தது. அதே போல், இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முஸ்லிம் தலைவர்கள் 07 பேரையும் நாட்டின் தியாகிகளாக அறிவிக்குமாறு கடிதம் மூலம் கேட்டுக் கொண்டதுடன் 1804 ஜுன் 7ஆம் திகதி வெளியான வர்த்தமானி அறிவித்தலையும் அத்துடன் இணைத்து அனுப்பியிருந்தார். ஆனால் இது வரை குறித்த 07 முஸ்லிம் தலைவர்களும் ஜனாதிபதியினால் தேசிய வீரர்களாக அறிவிக்கப்படவில்லை. எனவே குறித்த 07 முஸ்லிம் தலைவர்களையும் உடனடியாக தேசிய வீர்ர்களாக அறிவிக்குமாறு இவ்வாழ்வுரிமை மாநாடு நல்லாட்சி அரசிடம் வேண்டிக் கொள்கிறது. 

★ 09. மீண்டும் இலங்கையில் தலைவிரித்தாடும் இனவாதம் உடன் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

இலங்கை பல்லின சமூகங்களும், கலாசாரங்களும் கொண்ட ஒரு நாடாகும். அனைத்து சமூகங்களும் இன ரீதியாக ஒற்றுமையாகவும், சந்தோசமாகவும், நல்லிணக்கமாகவும் வாழ்வது மிக முக்கியமாகும். 

ஆரம்ப காலத்தில் அண்ணன் தம்பிகளாக பழகிய சமூகங்கள் இன்று உள்ளத்தில் குரோத்த்துடனும், எரிச்சலுடனும், வாழும் ஒரு நிலைமை சிலரால் ஏற்படுத்தப்படுகிறது. இதன் விலைவாக கம்பலை முதல் காலி கிந்தொடை வரை பல கலவரங்களை இலங்கை வாழ் மக்கள் சந்தித்து வருகின்றனர். 

இரு மொழி பேசக் கூடியவர்களுக்கு மத்தியில் இருந்த மொழி வேறுபாடு இனவாதமாக உருவெடுத்து பிறகு பெரும் யுத்தமாக மாறியதை இலங்கை மக்கள் யாரும் மறக்க மாட்டார்கள். நாட்டின் முன்னேற்றத்திற்கும், அபிவிருத்திக்கும் பெரும் தடையாக அமைந்த முப்பது வருட கால யுத்தமும் இனவாத்தினால் ஏற்பட்டதாகும். இலங்கை மக்கள் 60000 க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்தனர். பல கோடிக்கண்கான சொத்துக்கள் அழித்தது. இந்த இழப்புகளை அனுபவ ரீதியாக அரசு கண்ட பின்பும் இனவாத செயற்பாடுகளை கண்டு கொள்ளாமலும் அதற்கு காரணமானவர்களை உரிய முறையில் தண்டிக்காமலும் அலட்சியமாக நடந்துக் கொள்வது கவலைக்குரிய செயலாகும். 

அனைத்து சமூகங்களுக்கு மத்தியிலும் ஏதோ ஒரு விதத்தில் முறுகல் நிலை காணக் கூடியதாக இருக்கிறது. சில சந்தர்ப்பங்களில் இந்த நிலை விஸ்வரூபம் எடுத்து கலவரங்காக மாறுகிறது. இந்த அனைத்து சந்தர்ப்பத்திலும் இன முறுகளுக்கான காரணம் என்ன? கலவரம் ஏற்படுவதற்கு காரணமானவர்கள் யார்? என்பதை அவசரமாக இனம் கண்டு சட்டத்தின் முன் அவர்களை நிறுத்தி உரிய தண்டனையை வழங்காமல் முஸ்லிம்களை குற்றவாளி கூண்டில் ஏற்றுவதும் முஸ்லிம் சமுதாயத்தையே விபரீத நிலைக்கு வித்திட்டவர்கள் என்று குற்றம் சுமத்துவதும், தண்டிப்பதுமே வாடிக்கையாகி விட்டது. இது ஆரோக்கியமான ஒரு நிலையை ஏற்படுத்தாது. 

தவறு செய்பவர்கள் எந்த சமுதாயத்தை சேர்ந்தவர் என்று பார்த்து நடவடிக்கை எடுப்பது என்பது இனவாதம் இன்னும் அதிகரிப்பதற்கு காரணமாக அமையும். சட்டத்தின் முன் அனைவரும் சமம்  என்கிற பொதுவான விதியின் கீழ் சட்டம் அமுல்படுத்தப்பட்டாலே இலங்கையில் உள்ள இனவாத பிரச்சனைக்கு தீர்வு கண்டு விடலாம். 

ஆனால் அவ்வாறு செய்யப்படுவதில்லை. இனவாதிகளுக்கு சாதகமான ஒருதலைப்பட்சமான முடிவுகளே பெரும்பாலான சந்தர்பங்களில் எடுக்கப்படுகிறது. இந்நிலையை இவ்வாழ்வுரிமை மாநாடு வண்மையாக கண்டிக்கிறது. 

1915ம் ஆண்டு கம்பலை கலவரம் முதல் 2017ம் ஆண்டு காலி கிங்தொடையில் ஏற்பட்ட கலவரம் வரை இலங்கையில் ஏற்பட்டுள்ள கலவரங்கள் அனைத்தும் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலரால் ஏற்படுத்தப்படுகின்ற கலவரங்களே அல்லாமல் பெரும்பாலான மக்கள் இதனை ஆதரிக்கவில்லை என்பதை சம்பவங்களை ஆய்வு செய்து பார்த்தால் பளிச்சென்று தெரிகிறது. அப்படியென்றால் இந்த இனவாதத்தை கட்டுபடுத்த இலங்கை அரசாங்கத்திற்கு ஏன் முடியவில்லை? என்பது ஒரு கேள்வியாக நிற்கிறது. இதற்கு இலங்கை அரசு சரியான பதிலை வழங்க வேண்டும். இனவாதம் தலைவிரித்தாடாமல் சரியான பதிலடி கொடுத்து கட்டுப்படுத்த வேண்டும். அதற்கான தீர்க்கமான முடிவுகளை நல்லாட்சி அரசு எடுத்து நடைமுறைபடுத்த வேண்டும். இல்லாவிட்டால் இந்த நாடு மீண்டும் ஒரு சுடுகாடாக மாறிவிடும் அபாயம் உள்ளது என்பதை இவ்வாழ்வுரிமை மாநாடு நல்லாட்சி உணர்த்த விரும்புவதோடு இலங்கையில் இனவாதத்தை ஒழித்துக்கட்ட முழுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இவ்வாழ்வுரிமை மாநாடு நல்லாட்சி அரசிடம் வேண்டிக் கொள்கிறது.

★ 10. இலங்கை முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சமூக நலனுக்;கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

இலங்கையில் தற்போது பாராளுமன்றத்தில் 21 முஸ்லிம் பிரதிநிதிகள் உள்ளனர். வெவ்வேறு கட்சி சார்ந்தவர்களாக இருந்தாலும் அனைவரும் முஸ்லிம் சமுதாயத்தின் வாக்குகளால் பாராளுமன்றத்திற்கு தெரிவாகி மக்கள் பிரதிநிதிகளாக செயற்படுகின்றனர். 

சுயநலம் பாராமல், சமூக அக்கரையுடன், எந்த நேரத்திலும் மக்களுக்கு சேவை செய்;வார்கள் என்ற எண்ணத்தில் தான் முஸ்லிம் சமுதாயம் அவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். 

எனினும் இந்த அரசியல் தலைவர்களில் பலர் தாங்கள் சார்ந்த கட்சிக்காகவும், பதவிக்காகவும், அமைச்சுக்காகவும் மாத்திரம் சேவையாற்றும் ஒரு நிலையை கடந்த பல வருடங்களாக மக்கள் அவதானித்து வருகிறார்கள். முஸ்லிம் சமூகம் சந்தித்த பல பிரச்சனைகளில் சமுதாயத்தின் எதிர்காலத்தையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு சமுதாயத்திற்காக குரல் கொடுப்பதை தவிர்த்து, அசையாத மௌனத்தை இச்சமுதாயத்திற்கு நன்றி கடனாக வழங்கியுள்ளதை அனைவரும் அறிந்து வைத்துள்ளனர். இதனால் முஸ்லிம் பொது மக்கள் ஆத்திரம் அடைந்துள்ளதுடன் அரசியல் தலைவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையை முழுமையாக இழந்தும் உள்ளனர். 

முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மக்கள் வாக்குகளால் பாராளுமன்றம் சென்றிருப்பது கட்சி அரசியல் செயவதற்கு அல்ல. மாறாக சமூகத்தின் நலனை கருத்தில் கொண்டு இச்சமுதாயத்திற்கு பணிபுரியவே என்பதை நம் அரசியல் தலைவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். தாங்கள் சுமந்திருக்கும் பொறுப்பு ஓர் அமானிதம் என்பதையும் அது குறித்து மறுமையில் இறைவன் கண்டிப்பாக விசாரிப்பான் என்பதையும் அறிந்து இறையச்சத்துடனும் அமானித உணர்வுடனும் இச்சமுதாயத்தின் அரசியல் தலைவர்கள் செயல்பட வேண்டும். 

இனியும் இவர்கள் சமூக நலன் கொண்டு செயற்படாமல் தன்னலனுக்காக பதவிகளுக்காக மாத்திரம் செயல்பட்டால், முஸ்லிம் சமுதாயம் இத்தகையவர்களை முற்றிலும் முழுதாக புறக்கனிப்பார்கள் என்பதையும், புறக்கனிக்க வைக்கும் பணியை தவ்ஹீத் ஜமாஅத் மேற்கொள்ளும் என்பதையும், முஸ்லிம் அரசியல் தலைவர்களிடம் இவ்வாழ்வுரிமை மாநாடு எச்சரிக்கை உணர்வுடன் கூறிக் கொள்வதுடன் மக்களே உங்களை புறக்கனித்து, தமக்குத் தேவையான புதியவர்களை உருவாக்கிக் கொள்ளும் நிலைமையை நீங்களே ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும் இவ்வாழ்வுரிமை மாநாடு முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு உபதேசமாக கூறிக் கொள்கிறது.

Post a Comment

0 Comments