Ticker

6/recent/ticker-posts

மியன்மார் அகதிகள் தொடர்பில் வடக்கில் விஷேட கவனயீர்ப்பு பிரேரணை

இலங்கைக்குள் தஞ்சம் புகுந்த மியன்மார் முஸ்லிம் மக்களை வட மாகாணத்தில் தங்க வைப்பதை வட மாகாண சபை அங்கீகரிக்கும், எதிர்க்கப் போவதில்லை என, விசேட கவனயீர்ப்பு பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. 

அத்துடன், கொழும்பு - கல்கிசை பகுதியில் மியன்மார் முஸ்லிம் மக்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமைக்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வட மாகாண சபையின் 106வது அமர்வு இன்றைய தினம் நடைபெற்றது. 
இதன்போது, மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குறித்த விடயம் தொடர்பாக விசேட கவனயீர்ப்பு ஒன்றை சபைக்கு கொண்டுவந்து கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை கடற்பகுதி ஊடாக 31 மியன்மார் நாட்டு பிரஜைகள் இலங்கைக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர். 

இவர்கள் யாழ். மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு ஐ.நா அகதிகளுக்கான ஸ்தாபனத்தினால் பொறுப்பேற்கப்பட்டு, கொழும்பு - கல்கிசை பகுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில், சிலரினால் அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

இந்தநிலையில், அவர்கள் தற்போது பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

அவர்களை வட மாகாணத்தில் தங்கவைக்கலாம். அதனை வட மாகாண சபை அங்கீகரிக்கும் அவர்களுக்கு பாதுகாப்பும் வழங்கலாம் என்றார். 

மேலும், மியன்மார் நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அவர்கள் பல்வேறு மார்க்கங்கள் ஊடாக வெளியேற முயற்சிக்கும் நிலையில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொல்லப்படுகின்றார்கள். 

எனவே, தஞ்சம் புகுந்தவர்களுக்கு இந்த நாட்டில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையினை வட மாகாண சபை வன்மையாக கண்டிக்கின்றது என கூறினார். 

சிவாஜிலிங்கத்தின் இந்த கவனயீர்ப்புக்கு சபையில் எதிர்ப்புக்கள் எவையும் காட்டப்படவில்லை. 

அத தெரண

Post a Comment

0 Comments