Ticker

6/recent/ticker-posts

ஏசி அறையில் குர்மீத் ராம் ரஹீம்: சிறையில் விஐபி வசதி

பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தேரா சச்சா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு ஹரியாணா பாஜக அரசு சிறையில் விஐபி வசதிகளை வழங்கி வருகிறது.
டெல்லியில் இருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள ரோஹ்டக் நகரத்தின் அருகே உள்ள சிறையில் ஏசி வசதி செய்யப்பட்டுள்ள அறை குர்மீத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
பாலியல் பலாத்கார வழக்கில் தேரா சச்சா சவுதா ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் (50) குற்றவாளி என்று சிபிஐ நீதிமன்றம் நேற்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து பஞ்சாப், ஹரியாணாவில் கலவரம் வெடித்தது. இதில் 31 பேர் பலியாயினர். 250-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில் குர்மீத்துக்கு சிறையில் சிறப்பு வசதிகள் அளிக்கப்படுவதாகத் தெரியவந்துள்ளது. இதுகுறித்துப் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், ''ஹெலிகாப்டர் வசதி செய்து கொடுப்பதில் இருந்து அறையில் ஏசி வசதி செய்துதருவது வரை பாஜக அரசு குர்மீத்துக்கு பல்வேறு சலுகைகளைச் செய்து கொடுத்துள்ளது.
பாலியல் பலாத்காரம் போன்ற குற்றத்தைச் செய்துவிட்டு, நீதிமன்றத்தால் தண்டனை பெற்றுள்ள ஒருவருக்கு,முதல்வர் கட்டார் அனைத்து வசதிகளையும் செய்துகொடுக்கிறார்.
குர்மீத்தின் மகள் என்று கூறப்படும் ஹனிப்ரீத் என்ற பெண், அவருடன் பைகளையும், பெட்டிகளையும் சிறைக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
குர்மீத் காவலில் வைக்கப்பட்ட பிறகும், சில அதிகாரிகள் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவரைப் போல நடத்தாமல் முழு மரியாதையை அளித்தனர்.
மற்ற கைதிகளுக்கு நிகராக குர்மீத்தை நடத்த முயன்றதற்காக உயர் அதிகாரிகளுக்கு மத்தியில் ஒரு மூத்த அதிகாரி அறையப்பட்டார், மற்றொருவர் தள்ளிவிடப்பட்டார்'' என்றார்.
யார் இவர்?
கடந்த 1991 செப்டம்பர் 23-ல் தேரா சச்சா சவுதாவின் புதிய தலைவராக குர்மீத் ராம் ரஹீம் சிங் பதவியேற்றார். ஹரியாணா மாநிலம் சிர்ஸாவில் அந்த அமைப்பின் தலைமை ஆசிரமம் உள்ளது. உள்நாடு, வெளிநாடுகளில் 46 கிளை ஆசிரமங்களும் சுமார் 6 கோடி பக்தர்களும் உள்ளனர். குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு திருமணமாகி 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
கடந்த 2014 ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் பாஜகவை ஆதரித்தார். அரசியல் செல்வாக்கு காரணமாக அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.
தீர்ப்பின் எதிரொலி
பஞ்ச்குலா நீதிமன்ற வளாகத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பின் எதிரொலியாக அங்கு கலவரம் வெடித்தது. பஞ்சாப், ஹரியாணா மாநிலங்கள் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. அங்குள்ள பல்வேறு நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. டெல்லியில் ரயில், பஸ் எரிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன.
கடவுளின் மனிதர் என்று தன்னைத்தானே அழைத்துக்கொண்ட குர்மீத், ஆடம்பர வாழ்க்கைக்குப் பேர்போனவர் என்பது குறிப்பிடத்தக்கது. tamil.thehindu.com

Post a Comment

0 Comments