Ticker

6/recent/ticker-posts

இனவாதிகளின் வெறியாட்டமும் பொலிஸாரின் பொடுபோக்கும்..! ( விடிவெள்ளி பத்திரிகையில் வெளிவந்துள்ள கட்டுரை (25.08.2017)

சிங்கள மொழி மூலம் : ரேகா நிலுக்ஷி ஹேரத்  தமிழில் : கலாபூஷணம் எம்.சி. மொஹமட் அலி


சட்டப்படி ஒரு வீட்டை சோதனையிடுவதற்கு நீதிமன்ற உத்தரவு வேண்டும். அனுமதியின்றி தனியாhரின் உடமைக்குள் அத்துமீறி பிரவேசிக்கும் உரிமை யாருக்கும் இல்லை. ஆனால் இலங்கையில் சிங்களவரையும் பௌத்த மதத்தையும் காப்பாற்றுவதாக பறைசாற்றித் திரியும்  இனவாதிகளுக்கு மட்டும் தமக்கு தேவையான வீடுகளுக்குள் நுழைந்து அச்சுறுத்தல் விடுவதற்கு புதுமையான முறையிலே அனுமதி இருக்கிறது.

வீடுகளுக்குள் பலாத்காரமான முறையிலே உட்புகுந்து, தமக்குத் தேவையான விடயங்களையும் கருத்துக்களையும் கூறி வீட்டு உரிமையாளர்களை அச்சுறுத்தி தமது அடாவடித்தனங்களை வீடியோவில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களின் வாயிலாக பிரசாரம் செய்வதற்கும் இனவாதிகளுக்கு அனுமதி கிடைத்திருக்கிறது. அது மாத்திரமல்லாமல் மிக மோசமான வகையிலே இனவாதம் பேசி பிரபல்யமடைந்து கொள்ளும் அனுமதியும்  எப்படியோ அந்த இனவாதிகளுக்குக் கிடைத்திருக்கிறது.

கடந்த ஆட்சிக் காலத்திலே இந்த இனவாதிகள் பாரிய அளவிலே இனவெறியாட்டங்களை முன்னெடுத்து சுதந்திரமாக செயற்பட்டபோது, அன்றைய ஆட்சியாளர்கள் இதை செய்வதற்கு தாராளமாக அனுமதியளித்தார்கள் என்று நாம் உறுதியாக கூறினோம். இனவாதிகள் இன்றும் அதே நிலையில் செயற்படுகிறார்கள்,  சுதந்திரமாக இயங்குகிறார்கள் என்றால் இந்த அரசாங்கமும் அதே வழியில் தொடர்கிறது என்றுதான் நாம் கூறவேண்;டியுள்ளது.

இனவாத வெறிநாய்கள் நாடுமுழுதும் விஷக்கருத்துக்களைப் பரப்பி கும்மாளம் போடும் நிலையில் அரசாங்கமோ சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ கண்டும் காணாத நிலையில் இருக்கின்றார்கள். சமகால நிகழ்வுகளைப் பொருத்த வரை சமூக வலைத்தளங்களில் கடும் போக்கு இனவாதக் கும்பல்கள் பலதரப்பட்ட பெயர்களோடு தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன. முஸ்லிம்களுக்கெதிரான விஷக்கருத்துக்களை பெரும்பான்மையினர் மத்தியில் பரப்புவதை தமது நாளாந்த கடமைபோல் செய்து வருகின்றனர்.

ஆரம்பத்திலே சிறிய அளவிலே இந்த விஷமப் பிரச்சாரங்களை இவர்கள் செய்து வந்ததினால் யாருமே பெரிதாக அலட்டிக்கொள்ளாத விடயமாக இது இருந்தது.  ஆனால் குறித்த இனவாதிகளின் விஷமக் கருத்துகளுக்கு நாட்டின் நாலாபுறங்களில் இருந்து கிடைக்கின்ற உற்சாகத்தையும் ஆதரவையும் பார்க்கின்ற போது, இது சாதாரணமான ஒரு விடயமல்ல, மிகவும் பாரதூரமாக உருவெடுக்கின்ற ஒரு பிரச்சினையாகவே கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது.

டான் பிரியசாத் என்பவன், இனவாத சமூக ஊடகங்களில் உலாவரும் தீவிர இனவாதிகளில் ஒருவன். 'சிங்ஹலே' என்ற அமைப்பில் இணைந்திருந்த இவன் தற்போது 'ஹெலலே' என்ற அமைப்பின் தலைவனாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு சமூக ஊடகங்களில் தீவிரமாக இனவாதத்தைப் பரப்பி வருவதையும் காணக் கூடியதாக உள்ளது. கடந்த கால செயற்பாடுகளோடு ஒப்பிடுகையில்  இவனது பேஸ்புக் இணையதள வலையமைப்பிற்குள் கூடுதலான அங்கத்தவர்கள் இணைந்து கொண்டுள்ளதோடு, குறித்த இனவாதியின் விஷமக் கருத்துக்களை பிரபல்யப்படுத்தி பிரச்சாரம் மேற்கொள்வதும் இணைய தளங்களின் வாயிலாக அறிய முடிகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 9ம் திகதி இரவு வேளையில் வெல்லம்பிட்டிய பிரதேசத்தில்  வீடொன்றுக்குள் பலாத்காரமான முறையில் உட்புகுந்து டான் பிரியசாதும் அவனது கும்பலும், குறித்த வீட்டில் குடும்பத்தினரோடு வசித்து வந்த ஒரு யுவதியையும் அவரது சகோதரியையும்  பயமுறுத்தி அச்சுறுத்தல் விடுத்ததோடு, குறித்த முஸ்லிம் யுவதிகள் வீட்டுக்குள் பால் வகையொன்று தயாரிப்பதாகவும் அதன் மூலமாக  சிங்கள இனத்தை மலடாக்கும் வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்வதாகவும், குறித்த பாலில் கருத்தடை மருந்து கலக்கப்பட்டு விநியோகம் செய்வதாகவும் அபாண்டமான போலிக் குற்றச்சாட்டுகளை சுமத்தி வீட்டுக்கு தீ வைப்பதாக மரண அச்சுறுத்தல் விடுத்ததோடு குறித்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பியும் இருக்கின்றான்.

குறித்த அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் ஏராளமானோர் பார்த்ததோடு, அது இந்த இனவாதியின் செயற்பாட்டுக்கு ஒரு உந்துசக்தியாகவும் பயன்பட்டது. இந்த வீடியோ முஸ்லிம்களை அச்சுறுத்துவதாகவும் அமைந்திருந்தது. முஸ்லிம்களின் இன விகிதாசாரம் அதிகரித்து வருவதாக ஏற்கனவே விஷமப் பிரச்சாரங்கள் மூலம் சந்தேகத்திலிருந்த பெரும்பான்மை மக்களுக்கு இந்த சம்பவம் மேலும் வலுவூட்டியதோடு எரியும் நெருப்பிலே எண்ணை ஊற்றிய செயற்பாடாகவும் அமைந்தது.
ஆனால் இங்கு நடந்ததோ வேறொரு விடயமாகும். 'பீல்ட் லங்கா' என்ற உணவு வகைகளை பரிசீலித்து தரப்படுத்தும் உள்ளுர் நிறுவனத்திலே சந்தைப்படுத்தல் ஆராய்ச்சி துறையில் பட்டதாரியான குறித்த முஸ்லிம் யுவதி சேவையாற்றுகிறார். ஒரு பால்மா நிறுவனம் இலங்கையில் சந்தைப் படுத்தவிருக்கும் சொக்லேட் சுவையுடனான பால் வகையை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தும் நோக்கில் கருத்துக கணிப்புத் திட்டம் ஒன்றை நடாத்துவதற்கு இவர் சம்பந்தப்பட்டிருக்கிறார்.

குறித்த பரிசோதனை நிகழ்விற்காக தனது அயலவர்களை இவர் இணைத்துக்கொண்டுள்ளார். அத்தகைய கருத்துக் கணிப்பின் போது வழமையாக கடைப்பிடிக்கப்படும் முறையில் இதில் பங்கு பற்றுபவர்களுக்கு போக்குவரத்துச் செலவுக்காக ஒரு கொடுப்பனவும் வழங்கப்படுகிறது. இந்தக் கருத்துக்கணிப்பில் பங்கு கொள்பவர்களின் தகவல்கள் திரட்டப்பட்டதும் இதன் தேவையின் அடிப்படையிலேயாகும். இந்த கணிப்பை  மருதானை பகுதியில் நடாத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பாலின் சுவை தொடர்பான கருத்துக் கணிப்பைப் பெறும் நிகழ்வில் சிங்களவர்கள் மட்டுமல்லாது இனமத பேதமின்றி சகல இனத்தவரும் சேர்ததுக்கொள்ளப்பட்டிருந்தனர். இந்த யுவதியின் குடும்பத்தினர் கூட இதில் பங்குகொள்வதற்காக பதியப்பட்டிருந்தனர்.

டேன் பிரியசாத் என்பவன் குறித்த வீட்டுக்குள் அத்துமீறி பிரவேசிக்கும் போது இங்கு குறித்த யுவதியின் இளைய சகோதரியும், அவரது இளைய சகோதரரும் மாத்திரமே வீட்டில் இருந்துள்ளனர். சிங்கள பெண்களை மலடாக்கும் பால் பருகக் கொடுப்பதாக இந்த பேஸ்புக் கும்பல் அவரின் இளைய சகோதரியிடம் கேள்வியெழுப்பியுள்ளனர். இந்தக் கருத்துக் கணிப்புக்கு சம்பந்தப்பட்ட யுவதி வீட்டிற்கு வரும் போது வீட்டில் இனவாதிகள்; குழுமியிருந்துள்ளனர். யுவதியின் தாயும், தந்தையும் அசௌகரியம் அடையும் வகையில் அவர்கள் மீது இந்தக் கும்பலால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிகழ்வுகள் அத்தனையும் சமூக ஊடகங்கள் (பேஸ்புக்) வாயிலாக ஒளிபரப்பப்பட்டுள்ளன. வீட்டார் 119 இலக்கத்திற்கு அழைத்து பொலிஸாரை வரவழைத்துள்ளனர். பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்துக் கொண்டு இந்தக் கும்பல்; வீட்டாருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் எமக்கு தெரிவித்தார்.

குறிப்பிட்ட இனவாதிகளின் செயற்பாட்டின்; காரணமாக சம்பவத்தோடு தொடர்புடைய  யுவதியும், அவரது சகோதிரியும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல் அச்சத்திற்;கும் உள்ளாகியுள்ளனர். குறித்த யுவதியின் சகோதரி மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளார். கடந்த காலங்களில் இலங்கையில் இடம்பெற்ற இனக்கலவரங்களின் ஆழ அகலங்களை இவர்கள் அறிந்து வைத்திருப்பதே அதற்குரிய காரணங்களாகும். இலங்கையில் சிறுபான்மை இனங்கள் என்றால் எந்த நேரத்திலும் இனவாதிகளின் கைகளினால் மரணமோ அதைவிட கொடிய துன்பங்களையோ அடையக் கூடிய நிலையில் வாழ வேண்டுமென்பதே அவர்களின் அச்ச உணர்வாகும். சிறுபான்மை இனத்தின் பெண்ணாக இருந்தால் இந்த அச்சம் இருமடங்காகும்.
டேன் பிரியசாதும் அவனது சகபாடிகளும் இந்த வீட்டாரை அச்சுறுத்திய விதம் சமூக ஊடகங்களில் பலத்த வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருப்பதும் குறித்த குடும்பத்தினரை மன உளைச்சலுக்கு மேலும் ஆளாக்கியிருக்கிறது.
''டான் பிரியசாதும் அவனது சகாக்களும் எனது தங்கைக்கு மிகவும் மோசமான முறையில் ஏசியிருக்கிறார்கள். அவருக்கு இது தொடர்பாக ஒன்றும் தெரியாது. நான் எனது நிறுவனம் எனக்களித்த கடமையை செய்தேன். எமது முகங்களை பாரிய குற்றவாளிகளைப்போல இந்த இனவாதிகள் சமூக ஊடகங்களில் காட்டியுள்ளார்கள்.'' என்று கண்கலங்கிய நிலையில் கவலையோடு தெரிவித்தார் அந்த பட்டதாரி யுவதி.

இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் அழைத்து கடுமையாக எச்சரித்ததாக வெல்லமபிட்டிய பொலிஸ் நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் எமக்குத் தெரிவித்தார். இருப்பினும் நடைபெற்ற  சம்பவத்தை நன்கு ஆராய்கின்ற போது வெல்லம்பிட்டிய பொலிஸார் இந்த பாரதூரமான விடயத்தை சிறு சம்பவமாக கருத்திற்கொண்டிருப்பதாகவே எமக்குத் தோன்றுகிறது. பொலிஸார் என்ன கருத்தைச் சொன்னாலும் மேற்குறிப்பிட்ட இனவாதிகள் படிப்படியாக இனவாதக் கருத்துக்களின் மூலம் பெரும்பான்மை சமூகத்தை ஆக்கிரமிக்க ஆரம்பித்துள்ளதை அவதானிக்க முடிகிறது.
இந்த சம்பவத்தின் பின்னர் மலடாக்கும் மருந்துகளிலிருந்து சிங்கள சமூகத்தை மீட்டெடுத்ததன் பேரில் அவனுக்கு பாராட்டு வைபவமொன்றும் இடம்பெற்றிருக்கிறது. இந்த வைபவத்திற்கு பொதுபலசேனா அமைப்பின் கலகொடஅத்தே ஞானசார தேரரும் கலந்துகொண்டிருந்தார்.

இத்தகைய பாரதூரமான நிகழ்வுகளை பொலிஸார் சிறு சம்பவங்களாக சித்தரிக்கின்ற அதேவேளை யாழ்ப்பாணத்திலுள்ள கும்பல்களின் செயற்பாடுகளை பூதாகரமாகக் காட்டி தெற்கில் இனவாதத்திற்கு உரமிடும் வேலையை செய்து வருவதையும் அவதானிக்க முடிகிறது.

நன்றி: ராவய

நன்றி : விடிவெள்ளி 25.08.2017


Post a Comment

0 Comments