Ticker

6/recent/ticker-posts

த.தே.கூ. வின் முடிவு இரத்தக்களரிக்கு வழிகோரியுள்ளது: ஹிஸ்புல்லாஹ்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவு, மேற்குலக நாடுகளுக்கு ஆயுதங்களை விற்கவும் அதன் மூலமாக இலங்கையில் மேலுமொரு இரத்தக்களரி ஏற்படவும் வழிகோலியுள்ளது என்று பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 100 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் மற்றும் நிவாரணம் வழங்கும் நடவடிக்கை, மட்டக்களப்பு மாவட்டத்தின் புதூர்; கிராம பொதுநோக்கு மண்டபத்தில்  செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்றது. இங்கு
உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

 இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் கடைசி நேரத்தில் எடுத்துள்ள முடிவு,   நாட்டின் தென்பகுதியிலுள்ள சிங்கள மக்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் அணிதிரளச் செய்துள்ளது. யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டமையால், நஷ்டம் அடைந்தவை  ஆயுதங்களை விற்கும் நாடுகள். ஏனென்றால், இங்கு இப்பொழுது ஆயுதங்களை நாம் வாங்குவதில்லை. 

 ஆயுதங்கள் மோதிக்கொள்ளாமையால், எமது பிள்ளைகள் கொல்லப்படுவது இல்லை. அங்கவீனமாவதில்லை. அகதி வாழ்க்கை இல்லை. இவற்றை சகித்துக்கொள்ளாத மேற்குலகில் ஆயுதங்களை விற்கும் சக்திகள், இப்பொழுது தமது ஆயுதங்களை எப்படியாவது விற்று பணம் சம்பாதிக்க வழி தேடுகின்றன. மேற்குலக சக்திகள் உற்பத்தி செய்யும் ஆயுதங்களை விற்பதற்கு இலங்கையில் மீண்டும் குழப்பம் தேவை. குழப்பத்தை உண்டாக்குவதற்கு இலங்கையில் ஆட்சி மாற்றம் தேவை.  

அதற்காகவே, பொதுவேட்பாளர்  மைத்திரிபால சிறிசேனவையும் அவரது சகாக்களையும் களத்தில் இறக்கியுள்ளார்கள். அந்த சதி வலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இன்னும் பல பினாமி அமைப்புக்களும் வீழ்ந்துள்ளன. பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்தால், மேற்குலக ஆக்கிரமிப்பாளர்களே ஆட்சி செலுத்தப்போகின்றார்கள். இவர்கள் அடிமைகளாக இருக்கப்போகின்றார்கள். காலமெல்லாம் தோற்கின்றவருக்கு வாக்களிக்குமாறு கூறி பழக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், ஒருபோதும் பாதிக்கப்படமாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் தங்களின் குடும்பங்களுடன் ஏற்கெனவே ஐரோப்பிய நாடுகளிலும் மேற்கு நாடுகளிலும் சொகுசாக வாழ்கின்றார்கள்.

 நாட்டில் மேற்குலக சக்திகளால் மீண்டும் குழப்பம் ஏற்பட்டால், அந்த அநாவசிய யுத்தத்துக்கு பலிக்கடாவாகப்போவது அப்பாவி மக்கள் குறிப்பாக, தமிழ் மக்கள் இந்த விடயத்தில் நின்று நிதானித்து மிகக் கவனமாக முடிவு எடுக்கவேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒருபோதும் யுத்தத்தை நடத்தியவர் அல்ல. அவர் கொடூர யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த ஒரு சிறந்த மனிதர். அப்படிப்பட்டவர் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுகின்ற தெருச் சண்டியர்களின் கொட்டத்தை அடக்குவார்.  

 எனவே, இந்த  விடயத்தில் முஸ்லிம்களும் கவனமாக, நிதானமாக முடிவு எடுக்கவேண்டும். இனியும் நாம் இருண்டயுகத்துக்கு செல்லமுடியாது. எமக்குள் இருக்கின்ற பிரச்சினைகளை பேசித் தீர்க்கவேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியில் தமிழ் மக்களும் முஸ்லிம்களும் பங்காளர்களாக மாறி வெற்றியும் வளமும் கொழிக்கும் பயணத்தில் பங்கெடுக்கவேண்டும்' என்றார். - See more at: http://www.tamilmirror.lk/136697#sthash.hOBgLCCB.dpuf

Post a Comment

0 Comments