Ticker

6/recent/ticker-posts

சர்வதேசம் கடாபிக்கு செய்ததுபோல் இந்த மஹிந்தவுக்கு செய்ய முடியாது - ஜனாதிபதி

நாட்டின் தேசிய பாதுகாப்பே எமக்கு முதன்மை யானது. அதில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை என ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அரசியலுக்காக வடக்கிலிருந்து மாத்திரம் அதி உயர் பாதுகாப்பு வலயத்தை அகற்ற முடியாது என்று குறிப்பிட்ட ஜனாதிபதி சிலர் அரசியலுக்காக எதனையும் வழங்கத் தயாராக இருப்பதாக குறிப்பிட்டார்.

ஹங்வெல்ல நகரில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பிரதான தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி மேலும் கூறியதாவது:


நாம் அநீதிக்கு எதிராக அன்று வீதியில் இறங்கினோம் மழைக்கு மத்தியில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தினோம். இதனை பலரும் மறந்துவிட்டனர். பயங்கரவாதத்தை தோற்கடித்ததை ஒரு இனத்துக்கு எதிரான போராட்டமாக சித்தரிக்க முயல்கின்றனர். அது ஒரு இனத்துக்கு எதிரான போராட்டமல்ல கட்சிமாறுபவர்கள் நல்லாட்சி இல்லை என்று காரணம் காட்டுகின்றனர். இருக்கும் வரை ஆட்சி நல்லது.
தமது இனத்தை அடகுவைத்து ஆதரவு தர இருக்கும் நபர்களும் உள்ளனர். முஸ்லிம் மக்களை அடகு வைத்து மறுபக்கம் கட்சி தாவியவர்களும் இருக்கிறார்கள். சில தலைவர்கள் 2005, 2010 காலப்பகுதியில் எம்முடன் இருக்கவில்லை வென்ற பின்னர் எம்முடன் சேர்கின்றனர். அவ்வாறு கட்சிதாவியவர்களை மீள இணைத்துக்கொள்ள மாட்டோம்.

இது கிராம சபை தேர்தலல்ல. ஜனாதிபதி தேர்தல் கட்சி இன்றியே எதிர்க்கட்சி வேட்பாளர் போட்டியிடுகிறது. ஐ. தே. க. மட்டுமே ஒரே கட்சி கொள்கை ரீதியில் முரணான கட்சிகளுக் கிடையில் வெவ்வேறு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. 100 நாளில் ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக முதலில் கூறிவிட்டு அதனை 6 மாதத்தில் ஒழிப்பதாக கூறுகின்றனர்.

தாய் நாட்டை பிரிக்க இடமளியோம் என்பதே எமது முதலாவது நிபந்தனையாகும். தேசிய பாதுகாப்பே எமக்கு முதன்மையானது அதில் எந்த விட்டுக்கொடுப்பும் கிடையாது.
படையினரை 50 வீதத்தினால் குறைப்பதாக கூறுகின்றனர். எனக்கும் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது. படையினர் எமக்கு சுமையாக இல்லை. அவர்களின் குடும்பத்தையும் கவனித்து வருகிறோம். எமது நாட்டை பாதுகாத்த படையினரை பாதுகாப்பது எமது பொறுப்பாகும். ஹம்பாந்தோட்டையிலும் அதிஉயர் பாதுகாப்பு வலயம் இருக்கிறது. வடக்கில் மாத்திரம் அதிஉயர் பாதுகாப்பு வலயத்தை அகற்ற முடியாது சிலர் அரசியலுக்காக எதனையும் வழங்கத் தயாராக இருக்கிறார்கள் தாய் நாட்டை காட்டிக்கொடுக்க முடியாது.

பல்கலைக்கழக பிரவேசத்துக்கு எதிர்தரப்பு பணம் அறவிட தயாராகிறது. முன்பள்ளியில் மாத்திரம் இலவசமாக கற்பித்து ஏனையவற்றுக்கு பணம் அறவிடுவர். பல்கலைக்கழக கல்வியை பாதுகாக்க ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் இன்று அமைதியாக உள்ளனர். இலவச கல்வியை நசுக்க நான் இடமளிக்க மாட்டேன்.

நாம் விவசாயிகளுக்கு பசளை நிவாரணம் வழங்கி வருகிறேன் ஆனால் எதிர்தரப்பு பசளை நிவாரணம் குறித்து எதுவும் கூறுவதில்லை. 11 வருட சந்திரிகா ஆட்சியில் 49 அரச நிறுவனங்கள் விற்கப்பட்டன. நாம் இதனை எதிர்த்தோம். தனியார் மயப்படுத்தியவற்றை மீள பெற்று வருகிறோம். ஸ்ரீலங்கா விமான சேவையிலிருந்து தேசிய கொடி அகற்றப்பட்டது. ஒரு பேர்ச்சஸ் காணியை 2 ரூபாவுக்கு விற்றார். சந்திரிகாவுக்கு நீதிமன்றம் பல இலட்சம் ரூபா தண்டம் விதித்தது. நல்லாட்சி எமது பக்கமா? எதிர் தரப்பிலா இருக்கிறது மக்கள் வாழ்க்கை தரத்தில் மாற்றம் ஏற்பட் டுள்ளது.
நாம் அபிவிருத்தி பணிகளை கைவிட மாட்டோம். நெடுஞ்சாலை நிர்மாணிக்க எடுக்கும் செலவும் ஏனைய வீதிக்கான செலவும் வித்தியாசப்படுகிறது. 1/3 பங்கு செலவில் நெடுஞ்சாலை அமைப்பதாக எதிர்தரப்பு கூறுகிறது. அவ்வாறு முடியுமானால் நான் நாடுபூராவும் நெடுஞ்சாலை அமைத்திருப்பேன் பல வருடங்கள் ஆட்சியிலிருந்தவர்களால் ஏன் முடியாமல் போனது.

நாட்டை முன்னேற்ற மக்கள் எனக்கு ஆணை வழங்கினார்கள். நிறைவேற்று அதிகாரத்தை மக்கள் நலனுக்காக பயன் படுத்தினோம். யுத்தத்தையும் முடித்தோம். படலந்த முகாம் அமைக்க நாம் அதனை பயன்படுத்தவில்லை. படலந்த வதை முகாமில் இளைஞர்கள் கொல்லப்பட் டார்கள். கடாபிக்கு செய்ததை இந்த மஹிந்தவுக்கு செய்ய முடியாது. அதற்கு மக்கள் இடமளிக்கமாட்டார்கள். கலாசார பண்புகளுடன் வளர்ந்த மக்கள் வாழும் நாட்டில் லிபியாவில், சிரியாவில் நடக்கும் கூத்து போன்று இங்கு செய்ய முடியாது. மாற்றம் குறித்து பேசுகின்றனர்.

மேலைத்தேய நாடுகள் நாட்டை ஸ்தீரமற்ற நிலைக்கு தள்ளுவதற்காக பயன்படுத்தும் முறையே இது.

நீங்கள் அளிக்கும் வாக்குகள் உங்கள் பிள்ளையின் எதிர்கால உரிமையை பாதுகாக்கும் வாக்காகும். உங்கள் உரிமையை சரிவர நிறைவேற்றுங்கள் என்றார்.

Post a Comment

0 Comments